360: வெளிவரவிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம்!

360: வெளிவரவிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம்!
Updated on
1 min read

இந்திய வரலாற்று வரைவியலை டி.டி.கோசம்பிக்கு முன், பின் எனத் தயக்கமின்றிப் பிரிக்கலாம். வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் மட்டுமின்றிப் பொது வாசகர்களிடமும் அதே அளவுக்குத் தாக்கங்களை ஏற்படுத்தியவர்.

பல்துறை வல்லுநரான கோசம்பியின் வாழ்க்கை வரலாறு, அவரது முக்கிய ஆய்வுகளின் சுருக்கம், இதுவரை தமிழில் வெளிவராத அவரது கட்டுரைகளின் மொழியாக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெருந்தொகுப்பைத் தொகுத்து எழுதி வெளியிடவுள்ளார் எழுத்தாளரும் மூத்த இதழாளருமான மூ.அப்பணசாமி. ‘வரலாறு - பண்பாடு - அறிவியல்: டி.டி.கோசம்பியும் வாழ்வும் ஆய்வுகளும்’ என்ற தலைப்பிலான இந்தத் தொகுப்புக்குத் தமிழின் முக்கியமான மார்க்ஸிய ஆய்வறிஞர்களான ஆ.சிவசுப்பிரமணியன், ந.முத்துமோகன் ஆகியோர் முன்னுரைகள் வழங்கியுள்ளனர்.

ஜூலை 31 அன்று டி.டி.கோசம்பியின் பிறந்த நாளன்று ஆறாம்திணை பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் இத்தொகுப்பு நூலுக்குச் சலுகை விலையில் முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு விலை: ரூ.300 தொடர்புக்கு: 88389 69909.

நீலம் பதிப்பகக் கூட்டம்

நீலம் பதிப்பகம் ஒருங்கிணைக்கும் மாதாந்திரக் கூடுகை இன்று (ஜூலை 9) மாலை 5:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள கூகைத் திரைப்பட இயக்கத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், ஸ்டாலின் ராஜாங்கம், முத்துராசா குமார், தீபா ஜானகிராமன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தொடர்புக்கு: 97105 05502

ஆங்கிலத்தில் இமயம்!

எழுத்தாளர் இமயத்தின் 10 சிறுகதைகள், ‘If there is a god’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. பிரபா ஸ்ரீதேவன் மொழிபெயர்த்துள்ள இந்த நூலின் வெளியீட்டு விழா இன்று (ஜூலை 9) மாலை 6 மணிக்கு சென்னை கன்னிமாரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. மலையாளத் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் வெளியிட முதல் பிரதியை பதிப்பகத் துறை ஆலோசகரான மினி கிருஷ்ணன் பெற்றுக்கொள்கிறார்.

புத்தகக்காட்சிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஹோட்டல் ஹில்ஸில் ஜூலை 8 முதல் 19 வரை புத்தகக்காட்சி நடைபெறவுள்ளது. காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் கவிஞர்கள் அறிவுமதி, மகுடேஸ்வரன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், பேச்சாளர் பழ கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.

மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் இந்தப் புத்தகக்காட்சிக்கு அனுமதி இலவசம். புத்தகங்கள் 10 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் ஜுலை 15 முதல் 25 வரை புத்தகக்காட்சி தினசரி மாலையில் நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகக்காட்சியை ஒட்டி இலக்கியக் கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இந்தியப் பாரம்பரியக் கலை இலக்கியப் பேரவை இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in