

ஜெர்மன் எழுத்தாளர் பிரான்ஸ் காஃப்கா இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச இலக்கியப் பரப்பில் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கிய எழுத்தாளர். அவரது ‘விசாரணை’ (The Trial), உருமாற்றம் (Metamorphosis) ஆகிய நாவல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் விவரிப்பு மொழியிலும் இவரது நடை தாக்கத்தை விளைவித்துள்ளது. நவீன வாழ்க்கையின் நெருக்கடிகளும் அதனால் உண்டாகும் சீரழிவுகளும் காஃப்காவின் எழுத்துகளின் சாரமாக இருக்கின்றன. காஃப்காவின் 139ஆவது பிறந்த நாளை ஒட்டி அவரது ஓவியங்களை முதன் முறையாக யேல் பல்கலைக்கழகம் ‘Franz Kafka: The Drawings’ என்னும் பெயரில் பதிப்பித்துள்ளது.
368 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் காஃப்காவின் நூற்றுக்கணக்கான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அலுவலக ஊழியராகவும் எழுத்தாளராகவும் வாசகர்கள் அறிந்த இரு வாழ்க்கைக்கு அப்பால் அவர் ஓவியராகவும் இருந்திருக்கிறார் என்பதை இந்த ஓவியங்கள் காட்டுகின்றன.
செக் குடியரசில் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் ஓவியக் கலையைப் பயிற்றுவித்துள்ளார் என காஃப்காவின் நண்பர் மேக்ஸ் ப்ராட் குறிப்பிட்டுள்ளார். தன் எழுத்துகளைப் போல் ஓவியங்கள் மீதும் காஃப்காவுக்கு அதிருப்தி. அவநம்பிக்கையால் தன் ஓவியங்களை ப்ராட்டிடம் ஒப்படைத்துவிட்டார். ப்ராட்டுக்கு அந்த ஓவியங்கள் முக்கியமானவை எனத் தோன்றியிருக்கிறது.
நாஜிப் படையெடுப்பு, சூயெஸ் நெருக்கடி போன்ற பல வரலாற்று நிகழ்வுகளைத் தாண்டி, இந்த ஓவியங்களை ப்ராட் தன்னுடனே கொண்டு சென்றுள்ளார். காஃப்காவும் ப்ராட்டும் இறந்த பிறகு ஓவியங்களின் பதிப்பு உரிமைக்காகப் பெரும் சட்டப் போராட்டமே நடந்திருக்கிறது. இறுதியில் இஸ்ரேல் தேசிய நூலகம் அந்த உரிமையைக் கைப்பற்றியது தனிக் கதை.
இந்த ஓவியங்கள், அவரது எழுத்துகளுக்கு அப்பாற்பட்ட ஓர் இலகுவான காஃப்காவை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. அவரது அன்புக்குரிய மார்த்தா வாசிக்கும் ஓவியமும் இந்தத் தொகுப்பில் உள்ளது. ஆண்ட்ரியாஸ் கில்சர் இந்த நூலைத் தொகுத்துள்ளார்.
- ஜெய்