

ஈழக் கவிஞர்கள் செல்வி, சிவரமணி ஆகியோர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு கண்டிருக்கிறது. 80-களின் ஆவணமாக, இரு நுண்ணிய கவிமனங்களின் வெளிப்பாடாக இருப்பதை இந்தக் கவிதைகள் மீண்டும் உறுதிசெய்கின்றன.
தமிழ் மக்களின் வரலாறு காணா இனஅழிப்பை ஏதோ ஒருவகையில் புரிந்துகொள்ள எத்தனிக்கும் சமீபகாலச் சீரிய இலக்கியப் பங்களிப்புகளின் பின்னணியில் செல்வி, சிவரமணி ஆகியோரின் கவிதைகளை இப்போது வாசிப்பது, அன்றைய வாசிப்பிலிருந்து வேறொரு பரிமாணத்தை அளிக்கிறது.
அரசின் அதிகாரமையத்திலிருந்து எழுதப்படும் அதிகாரபூர்வ வரலாற்றுக் கதையாடலைக் கேள்விக்கு உட்படுத்தி, அதை மறுக்கும் இன்றைய சூழலில், கீழ் விளிம்பிலிருந்து எழுதப்படும் வரலாற்றுச் சுவடுகள் இக்கவிதைகளில் நிறைந்திருக்கின்றன. உதாரணத்துக்கு, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிய நெகிழ்வான சித்திரம் ஒன்று நமக்குச் செல்வியின் கவிதைகளில் கிடைக்கிறது.
ஒடுக்குமுறையின் தலையாய குறியீடு என யாழ் நூலக அழிப்பைச் சொல்லலாம். 300 புத்தகங்களைத் தமிழ்நாட்டிலிருந்து தூக்க முடியாமல் அள்ளிச் சென்ற செல்வியின் மறைவு, எண்ணற்ற புத்தகங்கள் பல்கலை வளாகத்தில் எரிந்து சாம்பலாவது, எதிர்நோக்குவதாக உள்ளது. மேலதிகமாக, சிவரமணியின் சோகமான மறைவின் குறியீடாகவும் அது திகழ்கிறது. செல்வியின் கவிதைகள் வரலாற்றின் அவ்விருண்ட பக்கங்களைத் தனிமனிதப் பேரிழப்பின் உணர்வோவியங்களாகத் தீட்டுகின்றன.
இத்தகைய பின்னணியில் செல்வி, சிவரமணி ஆகியோரின் கவிதைகளில் நாம் கூருணர்வு கொண்ட இரு கவிஞர்களின் தனித்துவத்தைக் காணலாம். இவ்விருவரின் கவிதை வரிகள் தமிழ்ச் சூழலில், அன்றைய காலகட்டத்தில் பல்வேறு தருணங்களில் அதிகம் குறிப்பிடப்பட்டவை. யுத்த தருணங்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை மீறி அக்கவிதைகள் தாக்கம் செலுத்தின.
செல்வியின் கவிதைகளில் பெண்ணியம் ஒரு முக்கியக் காரணி. மேலும், அவரது கவிதைகளில் பறவைகளும் விலங்குகளும் இயற்கையின் நீட்சியாக நிறைந்து கிடக்கின்றன. அவரது கவிதைகள் இன்றைய இகோபெமினிஸத்தின் (Ecofeminism) முன்னுதாரணங்கள்.
அன்றைய சங்ககால ஒருமையின் தொடர்ச்சி. ‘முளைத்துக் கிடக்கும் முட்களைப் பிடுங்கி/குப்பையைக் கிளறும் குஞ்சுகளோடு/இரையைத்தேட/இறக்கையைக் கிழிக்க/வாழ்வதை இங்கு நிச்சயப்படுத்த/கொடுமைகட் கெதிராய்க் கோபமிகுந்து/குமுறும் உனது குரலுடன்/குழந்தைச் சிரிப்புடன் விரைந்துவா/நண்பா’ இந்தக் கவிதை வரிகள் இதற்கு உதாரணம்.
செல்வியிலிருந்து சிவரமணியின் வித்தியாசத்தைச் சொல்ல அவரது 80-களுக்கே உரிய அந்நியமாதல் சார்ந்த தத்துவார்த்த நிலைப்பாட்டைச் சொல்லலாம்.
அவரது தற்கொலையையும் அந்தப் பின்னணியில் வைத்து வாசிக்கலாம். சூரியனின் மென்மையான மாலை ஒளிகூட, இருக்கும் இடத்திலிருந்து பெயற வைக்கும்/அந்நியமாக்கும் வீரியம் கொண்டது என்பதை சிவரமணி கவிதைகளில் சொல்கிறார்.
பெயர்தலுக்கு முன்னர் இருத்தலின் யதார்த்தத்தில் மனம் லயிக்கிறார் அவர். ‘என்னுடைய நண்பர்களுடன்/நான்/கதைத்துக் கொண்டிருக்கிறேன். ‘...பேசுவதற்குச் சொற்களற்று/ மறக்கப்பட்ட பாடலுக்கு/தாளந்தட்டிய நண்பனும் விரல்களும்/நடுமேசையில் சிதறிக்கிடந்த/ தேநீர்த் துளிகள்/...வெற்றுக் கோப்பைகளையும் விட்டு/கதவின் வழியாய் புகுந்த/மேற்கின் சூரியக் கதிர்கள் விரட்ட/நாங்கள் எழுந்தோம்/உலகை மாற்ற அல்ல, மீண்டுமொரு இரவை நோக்கி’ என்கின்றன அவரது கவிதை வரிகள்.
செல்வி சிவரமணி கவிதைகள், செல்வி, சிவரமணி
தாமரைச் செல்வி பதிப்பகம், விலை: ரூ.100, தொடர்புக்கு: 94444 84868