

மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளராக இயங்கிவரும் அகிலன் அப்ரார், 2004-ல் லண்டனில் வசிக்க நேர்ந்தபோது ஈழத் தமிழர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஈழத் தமிழர்கள் சிலர் ஐ.நா. மனித உரிமை அவையின் 41-ம் அமர்வில் பேசும் வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர்.
2009-ல் இலங்கையில் போர் முடிவுற்ற பிறகும் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு எதிராக அகிலன் அப்ரார் ஐ.நா.வில் உரையாற்றியுள்ளார். 2019-20-ல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இங்கு போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது, இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், பட்டியல் பிரிவினர் உள்ளிட்டோர்மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் குறித்து உரையாற்றுவதற்காக இரண்டாம் முறை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்குச் சென்றிருக்கிறார்.
இரண்டு உரைகளும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு முறையும் ஐரோப்பியப் பயணத்தில் ஏற்பட்ட பல விதமான அனுபவங்களையும் அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்கள், அரேபியர்கள், ஆப்பிரிக்கர்கள் என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் குறித்தும் சுவாரசியமான எழுத்து நடையுடன் ஆங்காங்கே வெளிப்படும் கூர்மையான அரசியல் பார்வையுடன் வெளிப்படுத்துகிறார்.
இரண்டாம் முறை சென்றபோது, கரோனா பெருந்தொற்றால் விளைந்த பயணத் தடைகள் காரணமாக மாதக் கணக்கில் ஐரோப்பாவில் சிக்கிக்கொண்டிருக்கிறார். பெருந்தொற்றுச் சூழலில் தாய்நாடு திரும்புவதற்கான முயற்சிகளில் தூதரக அதிகாரிகளின் எரிச்சலை எதிர்கொள்ள நேரிட்டது, இந்திய அரசின் மோசமான ஏற்பாடுகள் உள்ளிட்ட இன்னல்களை, அவற்றை எதிர்கொண்ட நேரடிச் சாட்சியமாக ஆதங்கத்துடனும் அங்கதத்துடனும் பதிவுசெய்திருக்கிறார்.
ஐ.நா.வில் தமிழ்க் குரல் - ஐரோப்பியப் பயணக் குறிப்புகளுடன்
அகிலன் அப்ரார்
வெளியீடு: நக்கீரன், சென்னை - 14
விலை: ரூ.125
தொடர்புக்கு: 044 4399 3000