

எழுத்தாளராக இலக்கிய ஆளுமைகள் பலரையும், இதழாளராகப் பல துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளையும் நேர்காணல் செய்த அனுபவத்தை விஜய் மகேந்திரன் பெற்றுள்ளார். இதன் பயனாய் இவருடைய கட்டுரைகள் பல துறைகளையும் ஆளுமைகளையும் குறித்த அரிய தகவல்களைத் தருகின்றன.
திடீர் மாரடைப்பால் மரணமடைந்த தோல் மருத்துவரும் நடிகருமான சேது குறித்த கட்டுரையில், ஓர் இளம் திறமையாளரை மட்டுமல்லாமல் பண்புமிக்க மனிதரைத் தமிழ் சினிமா இழந்துவிட்டதை உணர முடிகிறது. பிசியோதெரபி நிபுணரான விஜய் மகேந்திரன், தீவிர சிகிச்சைப் பிரிவில் பிசியோதெரபி நிபுணரின் பணிகளை விவரித்து எழுதியிருக்கும் கட்டுரை உள்பட நூலில் இடம்பெற்றிருக்கும் மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் மருத்துவ அறிவியல் சார்ந்த புதிய தகவல்களை எளிய மொழியில் புரியவைக்கின்றன.
40 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குநராக இயங்கிவரும் ஹரியுடன் ஒரு நாள் பயணித்து எழுதப்பட்டுள்ள கட்டுரை, ‘எந்த நிலையிலும் போராட்டத்தைக் கைவிடாதவர்கள் என்றேனும் ஒரு நாள் வெற்றிபெறுவார்கள்’ என்னும் நம்பிக்கையை விதைக்கிறது. க.நா.சு குறித்த கட்டுரையில் அவருடைய இலக்கியப் பயணம் மட்டுமல்லாமல் தனிப்பட்ட ஆளுமை குறித்த சுவாரசியமான சித்திரமும் கிடைக்கிறது.
‘இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள்’ கட்டுரை, வாகன ஓட்டிகளால் எதிர்மறையாகவே பார்க்கப்படும் போக்குவரத்துக் காவலர்களின் இன்னொரு முகத்தை அறிமுகப்படுத்துகிறது. பிரெட்டைக் காலை உணவாக எடுத்துக்கொள்கிறவர்களுக்கான குறிப்புகள், சென்னையில் மூடப்பட்ட திரையரங்கங்கள் குறித்த கட்டுரை, நேர்காணல்கள், திரைப்பார்வைகள், நூல் மதிப்புரைகள் என ஒரு பல்சுவை வார இதழை வாசித்த திருப்தியை அளிக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.
இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள்
விஜய் மகேந்திரன்
வெளியீடு: கடல் பதிப்பகம்
விற்பனை உரிமை: தமிழ்வெளி,
சென்னை - 122
விலை: ரூ.160
தொடர்புக்கு: 86808 44408