

சமகாலத் தமிழின் முக்கியக் கவிஞர்களுள் ஒருவரான கண்டராதித்தனின் புதிய கவிதைத் தொகுப்பான ‘பாடி கூடாரம்’, இளம் படைப்பாளி முத்துராசா குமாரின் சிறுகதைத் தொகுப்பான ‘ஈத்து’ ஆகிய இரண்டுக்கும் மயிலாடுதுறையில் வரும் ஞாயிறு அன்று நூல் அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது.
புதுச்சேரி விசாகனும் செந்தில் ஜெகன்நாதனும் நூல்களைப் பற்றி உரையாற்றுகிறார்கள். கண்டராதித்தனும் முத்துராசா குமாரும் ஏற்புரை ஆற்றவிருக்கிறார்கள். இந்த நிகழ்வை மயிலாடுதுறையின் வாகை இலக்கியக் கூடல் ஏற்பாடு செய்திருக்கிறது. இடம்: வருவாய் அலுவலர் சங்க (ROA) கட்டிடம், சின்னக் கடைத்தெரு, மயிலாடுதுறை. நேரம்: காலை 10 மணி.
கிண்டிலில் அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள்
மாணவர்களின் படைப்புத் திறனை வெளிக்கொண்டுவருவதில் தமிழ்நாட்டின் ஏனைய பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக ஆகியிருக்கிறது கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளி. இப்பள்ளியில் இயங்கும் ‘இளம் வாசகர் வட்டம்’ வாயிலாகக் கடந்த டிசம்பரில் ஆரம்பித்து, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை மாணவர்கள் வாசித்திருக்கிறார்கள்.
வாசிப்புடன் நின்றுவிடாமல் தாங்கள் வாசித்த புத்தகங்களைப் பற்றி வாசிப்பு ஏட்டில் எழுதியும் வருகிறார்கள். அதன் விளைச்சல்தான் மாணவர்கள் சொந்தமாகக் கதை எழுத ஆரம்பித்திருப்பது. மாணவர்களின் 25 கதைகளைத் தேர்ந்தெடுத்து, கிண்டில் பதிப்பாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. மாணவப் படைப்பாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்!
இந்தக் கதைகளை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்து படிப்பதற்கான லிங்க்: https://bit.ly/3y6z6MY
மஹாராஷ்டிரத்தில் தமிழ்ப் படைப்புகள்
மஹாராஷ்டிரத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளின் பள்ளிகளில் தமிழும் ஒரு பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பாடநூல்களை உருவாக்குவதற்காக ‘பாலபாரதி’ என்ற அமைப்பு இயங்குகிறது. இந்தப் பாடங்களில் தமிழ்நாட்டின் குழந்தை எழுத்தாளர்கள், சிறார் எழுத்தாளர்கள், நவீன இலக்கிய எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
சிறுமி ரமணியின் ‘பூக்களின் நகரம்’ கதை, ஜான் சுந்தரின் ‘பிங்கி யானை’, தி.பரமேஸ்வரியின் ‘நட்பு’, அம்பிகா குமரனின் ‘சாவித்ரிபாய் புலே’ உள்ளிட்ட கவிதைகள், வையம்பட்டி முத்துசாமியின் இயற்கைப் பாடல், புஷ்பவனம் குப்புசாமியின் விளையாட்டுப் பாடல், கோவை சதாசிவத்தின் ‘கும்மாயம்… கும்மாயம்!’, ஆயிஷா நடராசனின் ‘சூரிய ஒளியைக் கண்ணாடிக்குள் சிறைவைத்த சிறுவன்’ உள்ளிட்ட ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்!