

கவிஞரும் சென்னை இந்துக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியருமான சுப்பிரமணி இரமேஷ், சமகால இலக்கியத் திறனாய்வுலகின் நம்பிக்கை முகங்களில் ஒருவர்.
‘தொடக்க காலத் தமிழ் நாவல்கள்’ என்ற தலைப்பிலான இவரது விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு, பரவலான கவனத்தைப் பெற்றது. தற்போது வெளிவந்துள்ள ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ என்ற தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பு 25 கட்டுரைகளை உள்ளடக்கியது.
‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிலும் இலக்கிய இதழ்களிலும் வெளியான இந்தக் கட்டுரைகள், புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ தொடங்கி அண்மையில் வெளிவந்த கவிப்பித்தனின் ‘ஈமம்’ வரையில் 25 நாவல்களை மையமிட்டு, தமிழ் நாவல்களின் போக்கைத் துல்லியமாகப் படம்பிடித்துள்ளது.
சிறந்த சிறுகதையாளர் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் சுருக்கப்படும் புதுமைப்பித்தன், மா.அரங்கநாதன் ஆகியோரை அவர்களது குறுநாவல்களின் வழியாகத் தவிர்க்கவியலாத நாவலாசிரியர்களின் வரிசையில் இத்தொகுப்பு சேர்த்துள்ளது. ‘சிற்றன்னை’யைப் பற்றிய இத்தொகுப்பின் முதல் கட்டுரை, குறிப்பிடத்தக்க ஒன்று.
வாழ்வில் ஒருபோதும் மன்னிக்கப்பட முடியாதவரான தனது தந்தையின் மீதான கோபத்தை ஒரு எழுத்தாளர் புனைவில் எப்படி அதற்கு நேரெதிரான சித்தரிப்பாக மாற்றியிருக்கிறார் என்ற உருமாற்றத்தை தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தனின் வரலாற்றிலிருந்து சுப்பிரமணி இரமேஷ் எடுத்துக்காட்டியுள்ள விதம், ஒரு படைப்பைப் புரிந்துகொள்வதற்கு ஒரு வாசகரும் விமர்சகரும் பெரும் உழைப்பைச் செலுத்த வேண்டியிருப்பதை உணர்த்துகிறது.
பிரதி அளிக்கும் வாசிப்பு அனுபவம்போலவே, அந்தப் படைப்பைப் பற்றிய கூடுதல் வாசிப்பின் தேவைகளும் இந்தக் கட்டுரையால் விவரிக்கப்படுகிறது.
புனைவின் பெரும் பாய்ச்சலாக நாவலைக் குறிப்பிடும் சுப்பிரமணி இரமேஷ், தேர்ந்த ரசனை மனோபாவமும் ஆய்வுப் புலத்தின் திறனாய்வு முறைமையும் பின்னிப் பிணைய இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
புதுமைப்பித்தன், தொ.மு.சி.ரகுநாதன், ப.சிங்காரம், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராம் என்று நவீனத் தமிழ்ப் புனைவுலகின் முன்னோடிகள் மட்டுமின்றி, நமது சமகாலத்தில் எழுதத் தொடங்கியுள்ள லட்சுமி சரவணக்குமார், விநாயக முருகன் வரையில் அனைத்து வகைமையினரையும் காய்தல் உவத்தலின்றி எழுதும் மனப்பக்குவம் இவருக்கு வாய்த்திருக்கிறது.
தமது ஒவ்வொரு நாவலுக்கும் கள ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் புனைவாக்கம் செய்வதை வழக்கமாக வைத்திருந்த ராஜம் கிருஷ்ணனைப் பற்றி, நவீன இலக்கியவாதிகள் பொதுவாக வாய் திறப்பதில்லை. நாவலின் புதிய வடிவங்கள் அறிமுகமானபோது, அவற்றைத் தமிழில் சோதித்துப் பார்த்த எம்.ஜி.சுரேஷ் பற்றியும் ஒரு மௌனம் நிலவுகிறது.
இவர்களையும் உள்ளடக்கியதாகவே சுப்பிரமணி இரமேஷின் இந்த உரையாடல் அமைந்திருக்கிறது. நாவலின் குறையெனப்படுவதையும், பலவீனம் எனத் தோன்றுவதையும் மென்மையாக அதே நேரத்தில் அழுத்தமாகப் பதிவுசெய்யவும் அவர் தவறவில்லை.
எம்.கோபாலகிருஷ்ணனின் ‘அம்மன் நெசவு’ வெளிவந்து 20 ஆண்டுகளாகியும் இன்னும் உரிய கவனம் பெறவில்லை என்பதை ஓர் இலக்கிய அநீதியாகச் சுட்டிக்காட்டுகிறார் சுப்பிரமணி இரமேஷ். இந்நாவல் முன்வைக்கும் இரு சாதியினருக்கு இடையேயோன சிக்கல்களைப் பற்றிய தெளிவான அரசியல் பார்வையையும் அவர் துணிச்சலுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சாதிய மனங்களின் கோர முகத்தை எடுத்துக்காட்டும் இந்நாவல், இன்றைய தமிழக அரசியல் சூழலுடனும் பொருத்திப் பார்க்கத் தக்கது. சௌடேஸ்வரி அம்மனைக் குறித்த எம்.கோபாலகிருஷ்ணனின் நாவலோடு, தென் மாவட்டங்களில் சாதிய ஒடுக்குதலுக்கு எதிராகப் பழிவாங்கத் துடிக்கும் கிராம தெய்வம் என்றொரு அபிமானியின் புனைவைப் பற்றியும் இக்கட்டுரைகள் பேசியிருக்கின்றன.
கட்டுரைகளுக்கு இடையிலான இந்த நுண்ணிழைப் பிணைப்புகள் முழுத் தொகுப்பையும் கொண்டுகூட்டிப் பொருள்கொள்ள உதவுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் தமிழில் தலித் இலக்கியம் முன்நகரவில்லை என்று அதற்கான காரணங்களை விளக்கியிருக்கும் சுப்பிரமணி இரமேஷ், ஆதிக்கச் சாதியின் மீதிருந்த வன்மங்களை அரங்கேற்றும் களங்களாகப் புனைவு கைக்கொள்ளப்படுவதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
கதை நிகழும் காலகட்டத்தையும் அப்போதைய அரசியல் சூழலையும் ஒப்பிட்டுப் பேசுவதன் வாயிலாக, படைப்புகளை சமூக, அரசியல் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.
புனைவெழுத்தாளர்களே தங்களுக்கான தரமதிப்பீட்டையும் செய்துகொள்ளும் இன்றைய காலகட்டத்தில், சுப்பிரமணி இரமேஷ் போன்று இன்னும் சிலர், இலக்கியத் திறனாய்வுக்குத் தங்கள் பங்களிப்புகளைத் தொடர்ந்து வழங்கினால், புனைவிலக்கியம் மேலும் செழுமை பெறும் என்று நம்பலாம்.
தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்
சுப்பிரமணி இரமேஷ்
ஆதி பதிப்பகம்
பவித்ரம், திருவண்ணாமலை-606806
விலை: ரூ.220
தொடர்புக்கு: 9994880005