

தமிழின் மூத்த எழுத்தாளர் அகிலன், தன் பல்சுவைப் படைப்புகளுக்காகப் பெரிதும் வாசிக்கப்பட்டவர். 19 நாவல்கள், சிறுகதைகள், சிறார் நூல்கள் , கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, திரைப்படம் எனப் பலவிதமாக அகிலன் பங்களிப்புச் செய்துள்ளார்.
சித்திரப்பாவை, அகிலனின் பெரிதும் பேசப்பட்ட நாவல். இதற்காக அவர் ஞானபீட விருது பெற்றுள்ளார். முக்கோணக் காதல் கதையாக விரியும் இந்தக் கதை, அந்தக் காலகட்ட லட்சியவாத இளைஞனை நாயகனாகக் கொண்டது. இதன் நாயகி ஆனந்தி, யாதார்த்தத்தில் நாம் பார்க்க முடியாத ஒரு பெண். பெண்களுக்கு என்று உருவாக்கப்பட்டுள்ள கற்பு நெறிகளைக் காப்பவளாக அவள் நாவலுக்குள் காட்சிப் படுத்தப்பட்டிருப்பாள். பெண்களுக்கே உரியதாகக் கற்பிதம் கொள்ளப்படும் ஆண்கள் விரும்பும் அழகும் மெல்லுணர்வும் கொண்டவள்.
அண்ணாமலை - ஆனந்தி இந்த உன்னதமான காதலுக்கு இடையில் மாணிக்கம் என மூன்றாம் நபர் வருகிறான். அவனால் கதை தலைகிழாக மாறுகிறது. அவன் தரும் ஒரு முத்தம் இருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது. அண்ணாமலை, சுந்தரியையும் ஆனந்தி, மாணிக்கத்தையும் மணமுடிக்கிறார்கள். இந்த நாவல் பிறகு தாலி குறித்த கற்பிதங்களுடன் சிறு புரட்சியுடன் முடியும். அகிலனின் மற்றொரு நாவலான துணைவி நாவலிலும் இதே போல் காதல் கைகூடாக் காதலர்கள் இறுதியில் இணைவார்கள். அவரது புகழ்பெற்ற பாவை விளக்கிலும் பலதரப்பட்ட காதல்கள், திருமணம் ஆன எழுத்தாளன் மீது வாசகிக்கு உருவாகும் காதல் எனக் காதலைப் பலவிதமாகச் சொல்லியிருப்பார். பெண்கள் நால்வர் ஒரே ஆண் மீது காதல் கொள்வது அந்தக் காலகட்டத்தில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அகிலன், சோழ மன்னன் ராஜேந்திரச் சோழனின் கதையை வரலாற்றுப் புனைவாக வேங்கையின் மைந்தன் என்ற பெயரில் எழுதியுள்ளார். இளவரசர் இளங்கோ - இளவரசி ரோஹிணி எனக் கற்பனை காதலர்களை இடையில் நுழைத்து ராஜேந்திர சோழனின் சரித்திரத்தை எழுதியிருப்பார். இந்த நாவல் நடிகர் சிவாஜி கணேசனால் நாடகமாகவும் நிகழ்த்தப்பட்டது. இதை எம்ஜிஆர் படமாக்க விரும்பியதாகச் சொல்லப்பட்டது. அகிலனின் மற்றொரு வரலாற்றுப் புதினமான கயல்விழி, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இந்தப் படத்தை எம்ஜிஆர் நடித்து இயக்கியிருந்தார். அகிலனின் பாவை விளக்கு நாவல், சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது. வாழ்வு எங்கே நாவல், குலமகள் ராதை என்ற பெயரில் திரைப்படமானது.
அகிலனின் படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஜெர்மனி, சீனம் உள்ளிட்ட பன்னாட்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.