

பிரபஞ்சம் உருவானது குறித்த ரகசியம் பல நூற்றாண்டுகளாக நீடித்துவந்தது. இதன் நுட்பத்தைத் திறந்து பார்க்கும் முயற்சிகள் பின்னால் உருவான மதக் கோட்பாடுகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டன.
இவ்வகையாக உருவாக்கப்பட்ட மதக் கோட்பாடுகள், அரச, பிரபு குலத்தவருக்கு மட்டுமே சாதகமாக இருந்தன. சாதாரண மக்களும் உரைத்துச் சொல்லப்பட்ட கடவுளின் பெயருக்கும், வறட்டுக் கோட்பாடுகளுக்கும் தலை வணங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உருவான அறிவியல் கண்டுபிடிப்புகள், பிரபஞ்ச ரகசியங்கள் பலவற்றுக்கும் காரணங்களைச் சொன்னது.
இதைத் தொடர்ந்து மேற்கில் ஒரு புதிய சிந்தனை மரபு உருவானது. இந்தச் சிந்தனை மரபு அதுவரை சமூகத்தில் செல்வாக்குச் செலுத்திவந்த கிறித்துவ மடாலயங்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. இந்தச் சிந்தனைகள், கிறித்துவ மடாலயத்திற்கு எதிரான இயக்கமாக மாறியது.
இதை முன்னெடுத்த அறிஞர்களில் தாமஸ் பெயின், ஸ்பினோசா, வால்டேர், இங்கர்சால் ஆகியோர் பிரதானமானவர்கள். இவர்களின் கருத்துகள் வர்ணாசிரமக் கோட்பாடுகளுக்குள் சிக்கியிருந்த இந்தியச் சமூகத்திற்கும் மிகப் பொருத்தமாக இருந்தது. அங்கு கிறித்துவ மடாலயங்களுக்கு எதிரான இந்தக் கருத்துகள், இங்கு மனித குலத்திற்குள் பாகுபாடுகளைச் செய்திருந்த வர்ணாசிரமக் கோட்பாட்டுக்கும் எதிரானதாக அமைந்தன. இந்தக் கருத்துகள் அளித்த உற்சாகத்தில்தான் சென்னை லெளகீக சங்கம் 1886-ல் தொடங்கப்பட்டது.
சில ஆண்டுகளே செயல்பட்ட இந்த இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பே நாத்திகத்தை முன்னெடுத்தது. முனுசாமி நாயக்கர், அப்பாதுரை செட்டியார், மாசிலாமணி முதலியார் ஆகியோர் இந்த இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் பிரதானமானவர்கள்.
இந்த இயக்கத்தின் சார்பில் The Thinker என்னும் ஆங்கில இதழும், தத்துவ விவேசினி என்னும் தமிழ் இதழும் நடத்தப்பட்டுள்ளன. இந்த இரு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளைத் தேடிக் கண்டறிந்து பேராசிரியர் வீ. அரசு பதிப்பித்துள்ளார். இந்த இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளைக் குறித்து இன்றைய தமிழ்ச் சிந்தனையாளர்களின் அபிப்ராயங்களின் தொகுப்பாக ‘மாற்றுவெளி’ இதழ் வெளிவந்துள்ளது.
‘மாற்றுவெளி’ 2009-ம் ஆண்டிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்விதழ். ஒவ்வொரு இதழும் ஒரு ஆய்வுப்பொருளை மையமாகக் கொண்டு வெளிவருகிறது. கால்டுவெல், இந்தியப் பொருளாதாரம், ரோஜா முத்தையா நூலகம், நாவல்கள், மாற்றுப் பாலியல், தமிழ்ச் சமூக வரலாறு, ஈழம், தமிழ்ச் சித்திரக் கதைகள் ஆகிய பல்வேறு தலைப்புகளில் இதுவரை இதழ்கள் வெளிவந்துள்ளன. எடுத்துக்கொள்ளும் துறைசார்ந்து அத்துறை அறிஞர்களின் கட்டுரைகளுடன் ‘மாற்றுவெளி’ செறிவுடன் வெளிவருகிறது.
இந்த இதழின் ஆசிரியர் பேராசிரியர் வீ. அரசு. இந்த இதழில் எஸ்.வி. ராஜதுரை, நா. முத்துமோகன், ஆ. சிவசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, வ. கீதா, ஸ்டாலின் ராஜாங்கம், சுந்தர் காளி ஆகியோர் சென்னை லெளகீக சங்கத்தின் பின்னணி குறித்தும் இதழ்கள் குறித்தும் பதிவுசெய்துள்ளனர்.
ஆசிரியர்: பேராசிரியர் வீ. அரசு
முகவரி: பரிசல் புத்தக நிலையம்,
முத்துமாரியம்மன் கோயில் தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி,
அரும்பாக்கம், சென்னை - 600106
தொலைபேசி: 93828 53646