

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்து 1780-ல் பிரிட்டிஷ் ராணுவத்தின் சிப்பாயாக மதராஸ் ராஜதானிக்கு வந்து கமாண்டர், கலெக்டர், கவர்னர் என படிப்படியாகப் பல பதவிகளைப் பெற்று, காலரா தாக்கி 1827-ல் உயிரிழந்த சர் தாமஸ் மன்றோவின் தமிழ்நாட்டு வாழ்க்கையைப் பதிவுசெய்திருக்கிறார் இடைப்பாடி அமுதன். மன்றோ எழுதிய குறிப்புகள், கடிதங்களைப் படித்து, இந்த நூலில் ஆதாரபூர்வமான தகவல்களைப் பதிவுசெய்துள்ளார். எக்காலத்தைய ஆட்சியாளர்களும் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க மன்றோவின் செயல்பாடுகளையும் அறிய முடிகிறது.
தமிழ்நாட்டின் சர் தாமஸ் மன்றோ,
இடைப்பாடி அமுதன், வெளியீடு: அனுராதா பதிப்பகம், இடைப்பாடி - 637 101
விலை: ரூ.275, தொடர்புக்கு: 94873 23457
இயற்கை விவசாயி இந்திரா, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் கோமதி வடிவேலு, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ மலையாளப் படத்தின் தமிழ் மறு ஆக்கத்துக்கு வசனம் எழுதியிருக்கும் ஜீவிதா சுரேஷ்குமார், கட்டிடக் கலைப் பேராசிரியர் எஸ்.ஹரினி உள்ளிட்ட 20 பெண் சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்வனுபவங்களையும் சாதனைப் பயணத்தையும் பகிர்ந்துகொள்ளும் நூல்.
சாதனைப் பெண்கள், சூர்யா சரவணன்
வெளியீடு: புஸ்தகா டிஜிட்டல் மீடியா,
பெங்களூரு - 560 076, விலை: ரூ.120
தொடர்புக்கு: 99803 87852
முகமது நபிகள் தான் வாழ்ந்த காலத்தில் சமூகத்துடன் எத்தகைய உறவைக்கொண்டிருந்தார் என்பதை இந்த நூலில் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா. தம் சமகாலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், யூதர்கள் உள்ளிட்ட பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் பேணும் வகையிலான நபிகளாரின் வாழ்க்கை நிகழ்வுகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
நபிகளாரின் சமூக உறவு, எம்.எச்.ஜவாஹிருல்லா
வெளியீடு: மாற்றுப் பிரதிகள், புத்தாநத்தம் - 621310
விலை: ரூ.100, தொடர்புக்கு: 94447 72686
வைணவத்தில் ஆழ்வார்களால் பாடல்பெற்ற திருமால் தலங்களே திவ்யதேசங்கள் என்றழைக்கப்படுகின்றன. 108 திவ்யதேசங்களில் 106 தலங்களைத்தான் மனிதர்கள் நேரில் சென்று தரிசிக்க முடியும். ஆனால், இந்த மண்ணில் வாழ்ந்து சென்ற ஆழ்வார்கள் திருமால் வசிப்பதாக நம்பப்படும் பாற்கடலையும் பரமபதத்தையும் சேர்த்து 108 திவ்ய தேசங்களைக் குறித்தும் பாடியிருக்கிறார்கள். அதேபோல் இந்த நூலாசிரியர் சில திவ்யதேசங்களுக்கே சென்றிருந்தாலும் அதன் தாக்கத்தில் திருமாலின் 108 திவ்ய தேசங்களைப் பற்றியும் அந்தாதி வடிவில் பாடியுள்ளார்.
திருமாலின் 108 திவ்யதேசம் - அந்தாதி வடிவில்
இளநகர் காஞ்சிநாதன், வெளியீடு: ஸ்ரீசாய்பாரதி பதிப்பகம், சென்னை - 600 033
விலை: ரூ.300, தொடர்புக்கு: 70927 11112
கோவையைச் சேர்ந்த கவிஞரும் தமுஎகச மாநிலக் குழு உறுப்பினருமான தங்க.முருகேசனின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு. இவரது முதல் தொகுப்பான ‘தழும்புகளின் விசாரணை’ வெளியாகி 25 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாம் தொகுப்பு இப்போது வெளியாகியுள்ளது. ‘மாலை முரசு’, ‘வண்ணக் கதிர்’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளியான கவிதைகளும், வானொலி நிகழ்ச்சிகளிலும் இலக்கிய அமைப்புகளின் விழாக்களிலும் கவிதை அரங்குகளிலும் வாசிக்கப்பட்ட கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
வெப்பம் பூக்கும் பெருநிலம்
தங்க.முருகேசன், வெளியீடு: கயல் வெளியீட்டகம், கோவை - 641 019, விலை: ரூ.70
தொடர்புக்கு: 88988 82414
தொகுப்பு: கோபால்
| புத்தகக்காட்சிகள் தருமபுரி: 4-ம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியிருக்கிறது. ஜூலை 4 வரை இந்தத் திருவிழா நடைபெறுகிறது. தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் ஆகியவை இந்தப் புத்தகக்காட்சியை இணைந்து நடத்துகின்றன. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. இடம்: அரசு கலைக் கல்லூரித் திடல், தருமபுரி. நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. நுழைவுக் கட்டணம் இல்லை. அரியலூர்: 6-ம் ஆண்டு அரியலூர் புத்தகக்காட்சி நேற்று தொடங்கியிருக்கிறது. ஜூலை 4 வரை இந்தப் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. அரியலூர் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை, பபாசி ஆகியவை அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் உறுதுணையுடன் இந்தப் புத்தகக் காட்சியை இணைந்து நடத்துகின்றன. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. இடம்: அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடல், அரியலூர். |