

தமிழ்நாட்டில் காந்தியம், மார்க்ஸியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இயக்கங்களின் நட்புறவுப் பாலமாக இயங்கியவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம்.
கடந்த ஆண்டு மறைந்த அவரின் நினைவாக அவருடன் இணைந்து பயணித்து, அவரது கருத்தியலையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நண்பர்கள் ஜூன் 26 அன்று ஈரோடு பிரப் சாலை, யாளி ரெசிடென்சியில் நினைவுக் கருத்தரங்கம் ஒன்றை ஒருங்கிணைத்துள்ளனர்.
‘எங்கே செல்கிறது சுற்றுச்சூழல்?’ என்ற தலைப்பில் எழுத்தாளரும் சுற்றுச்சூழலியல் செயல்பாட்டாளருமான நக்கீரன் சிறப்புரையாற்றுகிறார். நேரம்: காலை 10 மணி முதல் 12 மணி வரை. தொடர்புக்கு: 9443307681.
பள்ளிச் சுவரில் யூமா வாசுகி!
கவிஞரும் ஓவியரும் மொழிபெயர்ப்பாளருமான யூமா வாசுகிக்குக் கடந்த 23.06.22 அன்று பிறந்தநாள். ஃபேஸ்புக் முழுவதும் வாழ்த்துகள் குவிந்தாலும் அவருக்கு மறக்க முடியாத பரிசைத் தந்தது, கோபிசெட்டிப்பாளையத்தின் ‘வைரவிழா மேனிலைப் பள்ளி’தான்.
அந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரில் யூமா வாசுகியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய உருவம் சாக்பீஸில் வரையப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவருடைய வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன.
ஒரு எழுத்தாளருக்கு இதைவிட வேறென்னெ பெரிய மகிழ்ச்சி இருக்க முடியும்! அந்த வாசகங்கள் இவைதான்: ‘வாசிப்பு என்பது வெறும் மதிப்பெண் சமாச்சாரம் அல்ல... அது அன்புக்கும் சக மனித உறவுக்கும் சமூகப் பிரபஞ்சப் புரிதலுக்குமான தோற்றுவாய்!’
பரிசல் - 25 விழாவும் றாம் சந்தோஷுக்கு விருதும்
மொழியியலரும் ‘க்ரியா தற்காலத் தமிழ் அகராதி’யின் முதல் பதிப்பின் ஆசிரியருமான பேராசிரியர்
பா.ரா.சுப்பிரமணியனின் பெயரிலான 2022-ம் ஆண்டுக்கான இளம் ஆய்வறிஞர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுக்குக் கவிஞரும் ஆய்வாளருமான றாம் சந்தோஷ் (இயற்பெயர் சண்முக.விமல் குமார்) தெரிவுசெய்யப்பெற்றிருக்கிறார்.
இந்த விருது ரூ.10 ஆயிரம் விருதுத் தொகையையும் கேடயத்தையும் உள்ளடக்கியது. ‘சொல் வெளித் தவளைகள்’, ‘இரண்டாம் பருவம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் மூலம் அறியப்பெற்றவர் றாம் சந்தோஷ். 01.07.2022 அன்று சென்னை இக்சா மையத்தில் நடைபெறவிருக்கும் பரிசல் பதிப்பகத்தின் 25-ம் ஆண்டு விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
இந்த விழாவில் சைதை ஜெ, பா.ரா.சுப்பிரமணியன், சி.மோகன், வ.கீதா, பா.ரஞ்சித், ப.திருமாவேலன், சுந்தர் கணேசன், அழகரசன், ம.விஜயபாஸ்கர், கே.என்.சிவராமன், ஜி.செல்வா, ஆர்.பி.அமுதன், ப.கல்பனா, எம்.கே.மணி, பா.ஜெய்கணேஷ், கி.காவேரி, சிவ.செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். நேரம்: மாலை 6 மணி. தொடர்புக்கு: 9382853646. றாம் சந்தோஷுக்கு வாழ்த்துகள்!