

அக்டோபர் 3, 2014-ல் தொடங்கிய பிரதமரின் ‘மனதின் குரல்’ வானொலி உரைத் தொடர், 2015 முதல் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் தொடர்ந்து வருகிறது.
ஜனவரி 2022 வரையில் பிரதமர் ஆற்றிய 85 வானொலி உரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பை 5 தொகுதிகளாக செந்தில் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
காந்தி பிறந்த நாளுக்கு அடுத்த நாளில் முதலாவது உரை தொடங்கியது. அதில், காந்தி குறித்தும் கதராடைகளை ஆதரிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார் பிரதமர்.
இளைஞர்களிடம் பரவிக்கொண்டிருக்கும் போதைப்பொருட்கள் பயன்பாட்டின் தீங்குகள், தேர்வுகள் மாணவர்களிடம் ஏற்படுத்தும் மனச்சுமை, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டிய சமூகத்தின் பொறுப்பு, சுற்றுச்சூழல் தூய்மைக்கும் உடல்நலத்துக்கும் உள்ள நேரடித் தொடர்பு, பாலின விகிதாச்சாரத்தைச் சமமாகப் பராமரிக்க வேண்டியதன் அவசியம், பண்டிகை நாட்களில் உள்ளூர்ப் பொருட்களை ஆதரிக்க வேண்டிய தேவை என்று சமூக மேம்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு விஷயங்களைக் குறித்தும் இந்த உரைகளில் பிரதமர் பேசியிருக்கிறார்.
புத்தர், விவேகானந்தர் போன்ற பலரது போதனைகளையும் பிரதமர் இந்த உரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறார். பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், வல்லபபாய் படேல், தடகள வீரர் சேர்கை பாப்கா, புல்வாமா பகுதியின் தொழில்முனைவாளர் மன்சூர் அஹ்மத் அலாயி என்று ஊக்கமளிக்கும் பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டுவருகிறார்.
தேசத்தின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்குத் தம்மால் இயன்ற அளவுக்குப் பங்களிக்கும் முகமறியாத பல சாதனையாளர்களையும் அவர் இந்நிகழ்ச்சியில் தேசம் முழுவதற்கும் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். புதிய செயலிகள், ‘டிஜிட்டல் இந்தியா’ முன்னெடுப்புக்கு உதவும் இணையதளங்கள் குறித்த அறிமுகங்களும் இந்த உரைகளில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரப் பங்களிப்புக்கான முன்முயற்சிகளை மேற்கொண்ட மதுரை சின்னப்பிள்ளை, தூத்துக்குடியில் முடிதிருத்தகத்தின் ஒரு பகுதியில் நூலகம் நடத்திவரும் பொன்.மாரியப்பன், கற்றுக்கொள்வதற்கு வயது தடையல்ல என்பதற்கு உதாரணமான டீ.ஸ்ரீநிவாஸாச்சாரியார், பயணச் சீட்டுடன் மரக்கன்றையும் சேர்த்து வழங்கும் கோவையைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் மாரிமுத்து யோகநாதன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரைக் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்குள்ளேயே பெரிய அளவில் அறியப்படாதிருந்த இவர்களைத் தேசம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் கொண்டுசேர்த்திருக்கிறது ‘மனதில் குரல்’. வாழ்க்கைப் பாதையைத் துலக்கிக்காட்டும் வழிகாட்டி என்று திருக்குறளை விதந்தோதியுள்ள பிரதமர், வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் அதைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டின் வழுக்குமர விளையாட்டு ‘மல்கம்ப்’ என்ற பெயரில் பல நாடுகளில் பிரபலமாகிவருவதை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். வேலூர், திருவண்ணாமலை பகுதியில் வறண்டுபோன நாகநதிக்குப் பெண்கள் புத்துயிர்ப்பு அளித்திருப்பதைப் பற்றி ஒரு முன்னுதாரணமாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ், தமிழர்கள், தமிழ்நாடு குறித்து ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டவற்றைத் தொகுத்து, தனியாக ஒரு மின்னூல் வெளிவந்திருப்பதையும் (தொகுப்பு: குருப்ரஸாத்) இந்த உரைகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. இது போலவே இந்தியாவின் மற்ற மாநிலங்களின் சமூகக் கலாச்சாரப் பதிவுகளும் ஆளுமைகளைப் பற்றிய அறிமுகங்களும் தமிழுக்கு வந்துசேர்ந்துள்ளன.
இந்த உரைகளைப் பற்றிய அபிப்ராயங்களை மட்டுமின்றி, உரைகளில் இடம்பெற வேண்டிய உள்ளடக்கம் குறித்தும் பிரதமருக்குக் கடிதம் எழுதும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம்.
எனவே, ஒற்றைக் குரலாக ஒலிக்காமல் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அனுப்பப்பட்ட கருத்துகளின் சங்கமமாகவே இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. தவிர, இந்நிகழ்ச்சிகளில் விவாதிக்கப்பட்டவை மீது அதிகாரிகள் தாமாகவே முன்வந்து சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதும் பிரதமரின் அடுத்தடுத்த உரைகளிலிருந்து தெரியவருகிறது.
அரசின் ஆணைகளாக இல்லாமல், வானொலி உரைகளினாலேயே அதிகாரிகளிடம் இத்தகைய மனமாற்றத்தை உருவாக்க முடிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2015 குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் பிரதமருடன் சேர்ந்து அம்மாத ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டுள்ளார். முன்பொரு காலத்தில் ஒரு சுற்றுலாப் பயணியாக வெள்ளை மாளிகைக்கு வெளியே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட நரேந்திர மோடி, பின்பு அதே மாளிகைக்கு அரசு விருந்தினராக அழைக்கப்பட்டார் என்ற நினைவுகூரல், சாமானியருக்கும் சாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது.
ஒபாமா பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரது உரையாடல்கள் மட்டும் தமிழ் மொழிபெயர்ப்பில் விடுபட்டிருக்கின்றன. அடுத்த பதிப்பில் அவையும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். பாரக் ஒபாமாவைப் போல சச்சின் டெண்டுல்கர், விஸ்வநாதன் ஆனந்த் போன்ற விளையாட்டுத் துறை சாதனையாளர்களின் உரைத் துணுக்குகளும் பிரதமரின் உரைகளில் இடம்பெற்றுள்ளன.
பிரதமரின் இந்த உரைகளில் அவர் சார்ந்திருக்கும் கட்சியைக் குறித்தோ கொள்கைகளைக் குறித்தோ நேரடியாக எந்தக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய வானொலி நிலையத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வடமொழிச் சொற்களின் பயன்பாடும் தவிர்க்கப்பட்டு, இயன்றவரை தனித்தமிழ் பின்பற்றப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
மனதின் குரல்
(5 தொகுதிகள்)
நரேந்திர மோடி
செந்தில் பதிப்பகம், சென்னை-14
மொத்த விலை: ரூ.2,000
தொடர்புக்கு: 73389 84668