நூல் வெளி | சி.மோகன் - 70 நிதிதிரட்டல்: முன்னுதாரணமாக இருக்கட்டும்!

நூல் வெளி | சி.மோகன் - 70 நிதிதிரட்டல்: முன்னுதாரணமாக இருக்கட்டும்!
Updated on
2 min read

கடந்த 50 ஆண்டு காலமாக இலக்கியத்தையே தன் வாழ்க்கையாக வரித்துக்கொண்டவர் சி.மோகன். சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், ஓவிய-சிற்பக் கலை விமர்சனம், சிற்றிதழ்கள், பதிப்புத் துறை, மொழிபெயர்ப்பு என்று பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் சி.மோகன்.

நம் தமிழ்ச் சூழலில் முழு வாழ்க்கையையும் இலக்கியத்துக்காக ஒப்படைப்பது அவ்வளவு எளிதல்ல. பாரதி, புதுமைப்பித்தன், பிரமிள் என்று பலரும் இலக்கியம் - வாழ்க்கை என்ற போராட்டத்தில் பெரும் துயரை அனுபவித்தவர்கள். ஒருவர் வேலை பார்த்துக்கொண்டே எழுதுகிறார் என்றால் பிரச்சினை இல்லை, அது அவருடைய தெரிவு. ஆனால், முழு நேரமும் இலக்கியம் சார்ந்து செயல்பட வேண்டும் என்ற வேட்கையைக் கொண்டவர்களுக்கு அதற்கேற்ற சூழலை ஏற்படுத்தித் தரும் வகையில் சமூகம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சமூகம்தான் அனைத்துத் துறைகளிலும் செழித்து வளரும்.

எங்கெல்லாம் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்களோ, எங்கெல்லாம் எழுத்தாளர்களால் எழுத்து சார்ந்தே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறதோ அங்குதான் பெரிதும் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளையும் கீழைப் பகுதியில் ஜப்பானையும் உதாரணமாகக் காட்டலாம். நம் எழுத்தாளர்களுக்கும் அதுபோன்றதொரு சூழலை இங்கே உருவாக்கித் தர வேண்டும்.
எழுத்தாளர்களுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட உதவிகளைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள்.

ஆனால், சி.மோகனுக்கான நிதி திரட்டல் முயற்சி ஒரு எழுத்தாளருடைய வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக முன்னெடுக்கப்படுவது. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சனுக்கு அவர் உயிரோடு இருக்கும்போதே ரூ.12 லட்சம் திரட்டப்பட்டது. அதற்கான விழாவுக்கு வந்திருந்த புதுச்சேரியின் அப்போதைய முதல்வர் நாராயணசாமி ‘எங்கள் ஊர் எழுத்தாளரை நீங்கள் கொண்டாடும்போது அவரை நாங்கள் கொண்டாட மாட்டோமா?’ என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், புதுச்சேரியில் பிரபஞ்சனுக்காக விழா நடத்தி ரூ.10 லட்சம் வழங்கினார்.

தற்போது சி.மோகனுக்கு 70 வயது நிறைவுபெறுவதையொட்டி ரூ.10 லட்சம் திரட்டும் முயற்சியில் இலக்கிய அன்பர்கள் இறங்கியிருக்கிறார்கள். இதற்காக, எழுத்தாளர் பவா செல்லதுரை, ‘அன்னம்’ கதிர், ‘காலம்’ செல்வம் அருளானந்தம், ‘டிஸ்கவரி’ மு.வேடியப்பன், பரிசல் சிவ.செந்தில்நாதன், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான தளவாய் சுந்தரம் ஆகியோர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. திரட்டப்படும் நிதியை செப்டம்பர் இரண்டாவது வாரம் சென்னையில் சி.மோகனுக்காக நடத்தப்படும் விழாவொன்றில் வழங்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

விருப்பமுள்ள இலக்கிய அன்பர்களும் வாசகர்களும் இந்த நிதிக்குப் பங்களிப்பு செய்யலாம் (தொடர்புக்கு: 8610666475). திரட்டப்படும் நிதியை சி.மோகனுக்கு வழங்கும்போது புதுச்சேரியின் முன்னாள் முதல்வரின் வழியைத் தமிழ்நாட்டின் இந்நாள் முதல்வர் பின்பற்றி, இனி வரும் ஆட்சியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்!
இன்னுமொரு முக்கியமான விஷயம். எழுத்தாளர்களின் 70-களை ஒட்டிய வயதில் அவர்களைக் கொண்டாடுவதைவிட முக்கியம், அவர்கள் தங்கள் இலக்கிய வாழ்வின் தீவிர நிலையில் இருக்கும்போதே கொண்டாடுவது.

பொருளாதாரரீதியில் சிரமப்படும் தமிழின் முக்கிய எழுத்தாளர்களைக் கண்டறிந்து, அவர்கள் 50-களை ஒட்டிய வயதில் இருக்கும்போதே அவர்களுக்கும் இலக்கிய அன்பர்கள் இதுபோன்ற நிதிதிரட்டல் முயற்சிகளில் ஈடுபடலாம். இதில் அரசும் கைகோக்க வேண்டும். தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான யவனிகா ஸ்ரீராமுக்கு வருமானமோ சொந்தமாக ஒரு வீடோ இல்லை என்பது நமக்கும் அவமானம்தானே! வே.மு.பொதியவெற்பன், விக்ரமாதித்யன், சி.எம்.முத்து, ரமேஷ் பிரேதன், யூமா வாசுகி, கீரனூர் ஜாகிர்ராஜா என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. தமிழ் யாரையும் கைவிட்டதில்லை என்ற நிலையை நம் காலத்திலேயே நாம் காண வேண்டும்! அதற்குச் சமூகமும் அரசும்தான் பொறுப்பு.

எழுத்தாளர்களுடன் உறவாடும், எழுத்தாளர்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் ஒரு அரசாகத் தற்போதைய அரசு இருப்பது நம்பிக்கையைத் தருகிறது. எழுத்தாளர்களுக்கு வீடு போன்ற முன்னெடுப்புகள் அத்திசையில் அமைந்தவை. ஆனால், செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். மூத்த தமிழறிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படும் உதவித்தொகை மிகவும் குறைவாக இருக்கிறது என்ற முறையீடுகள் அடிக்கடி கேட்கின்றன. குறைந்தபட்சம் மாதாந்திர மருத்துவச் செலவுக்குப் போதுமான அளவில்கூட இருப்பதில்லை. இந்த நிலையை மாற்ற அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்போம்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in