

கவிஞர் மு.மேத்தா சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ உட்பட 20-க்கும் மேற்பட்ட கவிதை நூல்களைப் படைத்துள்ளார். பல்வேறு அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பிரபல பாடலாசிரியரும்கூட. மேத்தாவைப் பற்றி கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் பொன்னீலன் உள்ளிட்ட எழுத்தாளுமைகளும் பல்வேறு பேராசிரியர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் உ.அலிபாபா இந்தக் கட்டுரைகளை நூலாகத் தொகுத்துள்ளார்.
அறிஞர்களின் பார்வையில் கவிஞர் மு.மேத்தா - ஆய்வுக் கட்டுரைத் திரட்டு, உ.அலிபாபா
வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை - 600 017, விலை: ரூ.200
தொடர்புக்கு: 74022 22787
முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா, சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, மேடைப் பேச்சாளர் சுல்தானா பர்வீன் உள்ளிட்ட 25 ஆளுமைகளின் வாழ்க்கைப் பயணம் இந்த நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ள இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து, பல தடைகளைத் தாண்டி தாம் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதித்த இஸ்லாமிய ஆளுமைகளின் வெற்றிக் கதைகள், இஸ்லாமிய இளைஞர்களுக்கு வெற்றிபெறுவதற்கான ஊக்கத்தை அளிக்கும் என்ற நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. கணிசமான பெண் ஆளுமைகளும் நூலில் இடம்பெற்றுள்ளனர்.
வெற்றியின் முகவரி (பாகம் 1) , (இஸ்லாமிய ஆளுமைகளின் வெற்றி சரித்திரம்)
அ.முகமது அப்துல்காதர்
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்,
சென்னை - 600 017, விலை: ரூ.180
தொடர்புக்கு: 044 2431 4347
இந்த நாவலை எழுதியவர் 33 ஆண்டு காலம் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றிக் காவல் துணைக் கண்காணிப்பாளராக ஓய்வுபெற்றவர். முன்னாள் நீதிபதி எஸ்.நாகமுத்து சென்னை நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு ஒன்றைப் படித்து, அதிலிருந்து ஒரு கதைக் கருவைப் பெற்றுத் தன் கற்பனையைக் கலந்து
இந்த நாவலை எழுதியுள்ளார். 1990-களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக நாகமுத்துவும் காவல் துறை அதிகாரியாக மாணிக்கவாசகமும் பணியாற்றிவந்த காலத்திலிருந்தே இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எது குற்றம்?, க.மாணிக்கவாசகம்
குழந்தை அம்மாள் நகர் (2-வது தெரு),
தஞ்சாவூர் - 613 007, விலை: ரூ.300
தொடர்புக்கு: 89405 33955
மதுரை மாவட்டத்தில் உள்ள தானத்தவம் என்னும் கிராமத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவரான அய்யனார் ஈடாடியின் முதல் கவிதைத் தொகுப்பு இது. வேதிப் பொறியியல் துறையில் பி.டெக் பட்டம் பெற்றுத் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிவரும் அய்யனார், கல்லூரிப் பருவத்திலிருந்தே கவிதைகள் எழுதிவருகிறார். அவர் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய 104 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி,
அய்யனார் ஈடாடி, வெளியீடு: யாப்பு வெளியீடு, சென்னை - 600 076, விலை: ரூ.120
தொடர்புக்கு: 90805 14506
கம்ப ராமாயணக் கதாபாத்திரங்களைப் பற்றி 43 அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தசரதன் குடும்பம், வாலி குடும்பம், ராவணன் குடும்பம் என மூன்று பிரிவுகளில் கதாபாத்திரங்கள் வகைப்படுத்தப்பட்டு, அவர்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சுமித்திரை, சத்ருக்கன், தாரை, அங்கதன், மாரீசன், திரிசடை என அதிகம் அறியப்படாத ராமாயணக் கதாபாத்திரங்கள் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
கம்பன் படைத்த பாத்திரங்கள்
43 அறிஞர்களின் சொல்லோவியங்கள்
உரிமை: கம்பன் கழகம், திருப்பத்தூர்
வெளியீடு: பாரதி புக் ஹவுஸ், வேலூர் - 632 004
விலை: ரூ.150, தொடர்புக்கு: 98439 91111