

இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரியாகத் தமிழ்நாடு அரசிலும், மத்திய அரசிலும் 35 ஆண்டுகள் பணியாற்றியவர் இரா.பூரணலிங்கம். ஆங்கிலத்தில் 4 நூல்களை எழுதியுள்ளார். அவரின் முதலாவது தமிழ் நூல் இது. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலுமிருந்து மொத்தம் 100 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் வாழ்வியல் விளக்கமாக இந்நூலை எழுதியுள்ளார்.
குறள் விளக்கத்தில், அவரது ஆட்சிப் பணித் துறை அனுபவங்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. நெறிபிறழாத அரசு நிர்வாகப் பணிக்கு திருக்குறளே வழிகாட்டி என்பதன் அனுபவ சாட்சியம் இக்கட்டுரைகள். தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களுக்கான போட்டித் தேர்வுகளில் திருக்குறளும் ஒரு முக்கியமான பாடமாகியிருப்பதன் பொருத்தத்தையும் உணர முடிகிறது.
நிதி நிர்வாகம் என்ற தலைப்பில் ‘இயற்றலும் ஈட்டலும்’ எனத் தொடங்கும் குறளுக்கு விளக்கம் அளித்துள்ள பூரணலிங்கம், ‘நமது மத்திய - மாநில அரசுகள் இயற்றலிலும் ஈட்டலிலும் திறம்படச் செயல்பட்டாலும் காத்தலிலும் வகுத்தலிலும் பின்தங்கியிருக்கின்றன எனத் தோன்றுகிறது’ என்ற விமர்சனத்தையும் முன்வைக்கத் தவறவில்லை.
மணக்குடவர், பரிமேலழகர் என்று பழம்பெரும் உரையாசிரியர்கள் தொடங்கி, திரு.வி.க., நாமக்கல் வெ.இராமலிங்கம், கி.ஆ.பெ.விசுவநாதம், வீ.முனிசாமி என்று நமக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த தமிழறிஞர்கள் வரைக்கும் ஆழ்ந்தகன்று வாசித்து, இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் பூரணலிங்கம்.
முடியாட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட திருக்குறள், மக்களாட்சிக் காலத்துக்கும் பொருந்திப்போவதைச் சுட்டிக்காட்டுகிறார் நூலுக்கு முன்னுரை எழுதிய மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான இரா.பாலகிருஷ்ணன். காலங்களைக் கடந்த அந்தப் பொருத்தத்தை எடுத்துரைக்க இந்நூலின் கட்டுரைகளே சான்றுகளாகின்றன.
-புவி
வாழ்வில் வளம்பெற வள்ளுவம்
இரா.பூரணலிங்கம்
என்.சி.பி.ஹெச் வெளியீடு,
சென்னை-50
விலை: ரூ.400
தொடர்புக்கு: 044 26251968