

தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எடுப்பித்த இராஜராஜ சோழன், 48 பிடாரர்களை அவர்களுக்குரிய
இசைக் குழுவொடு திருமுறை விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தான். ஆடற்கலை வளர்ச்சிக்காக 400 தளிச்சேரிப் பெண்டுகளைப் பணியமர்த்தி, அவர்களுக்குத் துணைநிற்கும் குழுவினர் உட்படப் பலரைப் பணியமர்த்தினான்.
இந்தப் பெண்டுகளைப் பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவர் செ.கற்பகம், 200-க்கும் மேற்பட்ட பக்கங்களில் தனிநூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல், தஞ்சை மற்றும் அதைச் சார்ந்த பிற பகுதிகளிலிருந்தும் பிற தலங்களிலிருந்தும் தருவிக்கப்பெற்ற தளிச்சேரிப் பெண்டுகளைத் தஞ்சை இராஜராஜேச்சரத்தில் பணியமர்த்தி, நாட்டிய வழிபாடு செய்திட ஏற்பாடு செய்தமையைக் கல்வெட்டுச் சான்றுகளோடு எடுத்துரைக்கிறது.
ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பல திருக்கோயில்களில் நடனப் பணி மேற்கொண்டமையும் அவர்களுக்குத் தீட்சா நாமம் வழங்கியமையும், எந்தெந்த ஆலயத்திலிருந்து வந்துள்ளார்கள் என்பன பற்றியும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தளிச்சேரி வீடுகள் பற்றியும் இந்நூல் விளக்கமுற எடுத்துரைத்துள்ளது. தஞ்சைத் தலத்துக்குப் பணியமர்த்தப்பட்டபோது, அவர்களுக்கு ‘நக்கன்மார்’ என்ற சிறப்பு அடைமொழி தரப்பட்ட செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.
மேலும், பல்வேறு ஊர்களில் பணிபுரிந்த தலைக்கோலிகள், கொண்டி மகளிர், கோயில் தொண்டர்கள், தேவதாசிகள், மாணிக்கங்கள், நாச்சியார்கள், தளிச்சேரிப் பெண்டுகள் போன்றோர் பற்றிய தகவல்களும் தமிழக வரலாற்றோடு தொடர்புடைய திருப்பூவணம் பொன்னனையாள், திருவண்ணாமலை தேவதாசிகள், திருப்பாம்புரம் நாற்பத்தெண்ணாயிரம் மாணிக்கம், இலங்கை கோணேஸ்வரம் கோயிலில் இருந்த பணிப்பெண்கள், சிதம்பரம் வைப்பி, மதுரை குஞ்சிரதம்மாள், புதுச்சேரி ஆயி, பெங்களூர் நாகரத்தினம்மாள் போன்றோர் வரலாறுகளும் கூறப்பட்டுள்ளன.
இந்நூல், பல்வேறு தரவுகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு கருவி நூலாக அமைந்துள்ளது. அத்தரவுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக, விரிவாக ஆராயப்பட வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் கொண்டவை.
- சண்முக செல்வகணபதி
தஞ்சைத்
தளிச்சேரிப் பெண்டுகள்,
செ.கற்பகம்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வெளியீடு,
சென்னை-28,
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9443644005