

நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார் ஆசிரியராகப் பொறுப்பேற்று வெளியிட்டுவரும் ‘தலித்’ இருமாத இலக்கிய இதழின் சமீபத்திய இதழ், எழுத்தாளர் இமையத்தின் படைப்புகள் குறித்த சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அ.முத்துலிங்கம், திலகவதி, தங்க.ஜெயராமன், க.பஞ்சாங்கம் உள்ளிட்ட 18 பேரின் கட்டுரைகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.
எழுத்தாளர்கள், விமர்சகர்கள், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியத் துறைப் பேராசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறுபட்ட கட்டுரையாளர்களின் வெவ்வேறு பார்வைக் கோணங்களிலிருந்து இமையத்தைக் குறித்த விமர்சன அறிமுகமாகவும் இந்தச் சிறப்பிதழ் அமைந்துள்ளது.
மனதில் தங்கிவிடும் கதாபாத்திரங்கள், உண்மையிலேயே புனைவுதானா என்ற சந்தேகத்தை எழுப்பும் கருப்பொருட்கள் என இமையத்தின் கதைகளை வியக்கும் மினி கிருஷ்ணன், அவர் தனக்குள்ளே இருக்கும் ஆகாயத்திலிருந்து தன் படைப்புகளுக்கான உத்தரவுகளைப் பெறுகிறார் போலும் என்று முத்தாய்ப்பு வைத்திருக்கிறார்.
இமையத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவரும் வஸந்தா சூர்யா, அவரின் சமீபத்திய நாவலான ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ குறித்து எழுதிய கட்டுரையில், அந்நாவல் தனித்தன்மை வாய்ந்த முரண்பாடுகளின் மரபுத் தொடர்களால் பின்னப்பட்ட அலங்காரமற்ற கவித்துவத்தின் வழியாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது என்கிறார். அலங்காரமற்ற கவித்துவத்தை உரைநடையிலேயே சாதித்திருக்கும் இமையத்துக்கு இந்தச் சிறப்பிதழே ஒரு விருதுக்கு நிகராகச் சிறப்பு சேர்க்கிறது. தொடர்புக்கு: 8110906001
முல்லை முத்தையா நூற்றாண்டு மலர்
பதிப்புத் துறை முன்னோடிகளுள் ஒருவர் முல்லை முத்தையா. இவரது நூற்றாண்டு விழா மலரை நேற்று (17.6.2022) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முல்லை முத்தையாவின் மகன்கள் முல்லை பழநியப்பன், முல்லை இராமநாதன், முல்லை கருப்பையா ஆகியோர் இந்த மலரை வெளியிடும்போது உடன் இருந்தனர். மலரைப் பெறுவதற்கு: 9840358301
நூல் வெளியீடு - விருதுகள்
விழிகள் பதிப்பகமும் கவிமுகில் அறக்கட்டளையும் இணைந்து ‘அருந்தமிழும் கவிமுகிலும்- 50’ எனும் நிகழ்வை நடத்துகின்றன. ஞாயிறு (19.6.2022) மதியம் 4 மணியளவில் சென்னை – பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெறும் நிகழ்வில், 5 நூல்கள் வெளியிடப்படவுள்ளன. இது தவிர, சிறந்த நூல்களுக்குப் பரிசுகளும் முனைவர் ஜெயதேவனுக்கு ஈரோடு தமிழன்பன் விருதும் வழங்கப்படவுள்ளன. விழாவில் ஆர்.நல்லகண்ணு, நீதியரசர் அரங்க மகாதேவன், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.