

கோலார் தங்க வயல் பற்றி, ‘கே.ஜி.எஃப்-1’,‘கே.ஜி.எஃப்-2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மாஃபியாக்களுக்கு இடையில் அமைந்த மோதல் மட்டுமே தங்க வயல் என்பதைப் போலப் படத்தின் கதை செல்கிறது. தொழிலாளர்களின் உழைப்புதான் அந்த தங்கச் சுரங்கத்தின் வளர்ச்சி என்னும் உண்மை இந்தப் படத்தில் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தொழிலாளர்கள்தான், தொழிற்சங்கம் அமைத்து கோலார் தங்கச் சுரங்கத்தை வளர்த்தெடுத்தார்கள் என்ற வரலாற்றை வெளிப்படுத்தும் நூல்தான் எஸ்.இராமசாமி எழுதிய ‘தங்க வயல் தொழிற்சங்க வரலாறு’. நூலாசிரியர், இவரது தந்தை, இவரது பிள்ளைகள் என்று மூன்று தலைமுறையாகத் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். சிறந்த தொழிற்சங்கத் தலைவரான எஸ்.இராமசாமி, தன் சொந்த அனுபவத்தை நூலாக எழுதியுள்ளார். இதில் மற்றொரு சோகமும் நிகழ்ந்துவிடுகிறது. நூலை எழுதி முடிக்கும் தருணத்தில், கரோனாவுக்கு இராமசாமி பலியானார். அவரது மகன் ஜோதிபாசு நூலைப் பதிப்பித்திருக்கிறார்.
1800-ல் தங்கச் சுரங்கம் வெட்டும் பணி தொடங்கியது. இந்த நிலம் மைசூர் சமஸ்தானத்தில் அமைந்திருந்தது. சுரங்கத்தில் பணியாற்றுவதற்காகத் தொழிலாளர்களை, சுற்றுவட்டார கிராமங்களில் தேடிப் பார்த்தனர். அச்சப்பட்ட மக்கள் அங்கு வேலைக்கு வராமல் தப்பித்துவிட்டார்கள். கண்ணுக்கு எட்டாத தூரத்தில் ஆட்களைப் பிடித்து வரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அப்போது அவர்கள் கண்ணில் பட்டதுதான் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம். வாகனங்கள் இல்லாத காலத்தில் வேலூர் மக்களுக்கு முகவர்கள் மூலம் ஆசை வார்த்தைகளைக் கூறி, கால்நடையாகவே அவர்களைக் கோலாருக்கு அழைத்துவந்திருக்கிறார்கள். தங்கத்தை வெட்டி எடுப்பதில் கவனம் கொண்டிருந்த ஆங்கிலேயேப் பெருமுதலாளிகள், மனிதர்கள் பலியாவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. சுரங்கத்தில் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்து மடிந்தார்கள்.
ஆரம்ப காலத்தில் மட்டும், சராசரியாக ஒரு ஆண்டில் சுரங்கத்தில் செத்துப்போய், கண்டுபிடிக்க முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் பேர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. எஸ்.இராமசாமியின் தந்தை பெயர் சுப்பராயன். தமிழ்நாட்டில் வந்தவாசிக்கு அருகில் எச்சூர் என்னும் கிராமம்தான் இவர்களின் பூர்விகம். சுப்பராயன் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில், மைசூர் சுரங்கப் பகுதியில் பாறைகளை வெடி வைத்துத் தகர்த்து, அதிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பிரிவில் மேஸ்திரியாகப் பணியாற்றியிருக்கிறார்.
அப்போதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. வெடிக்கக் கூடாத இடத்தில், வெடிக்கக் கூடாத நேரத்தில் வெடி வெடித்ததில் சுப்பராயன் அதே இடத்தில் பலியாகிவிட்டார். அவருடன் வேலை செய்த தொழிலாளர்களில் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு தொழிலாளி தனது இரண்டு கண்களையும் இழந்துவிட்டார். அப்போது இராமசாமி பள்ளி இறுதியாண்டு மாணவர்.
தந்தையின் மரணத்தைக் கண்ணால் பார்த்த இராமசாமி, தனது இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்க்கிறார். இவை அனைத்தும் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. துணியால் மூடப்பட்ட உடல்கள் சுரங்கத்திலிருந்து தூக்கி வரப்படுவதை அறியாப் பருவத்தில் இவர் பலமுறை பார்த்திருக்கிறார். அவை அனைத்தும் வெடியில் சிக்கிச் சிதைந்து இறந்தவர்களின் சடலங்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்குத் தனக்குச் சில ஆண்டுகள் தேவைப்பட்டன என்கிறார் இராமசாமி.
தொழிலாளர்களின் உழைப்பால், ஒருகட்டத்தில் தங்க வயல், ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக மாறியது. இதற்கிடையில் பல்வேறு வளர்ச்சிகளை அந்த நகரம் அடைந்தது. ஜப்பானுக்கு அடுத்து ஆசியாவில் மின்மயமாக்கப்பட்ட இரண்டாவது நகரம் கோலார் தங்க வயல். இதற்குத் தேவையான மின்சாரத்தை எடுப்பதற்காகவே சிவசமுத்திர அருவியில் நீர் மின்நிலையம் அமைக்கப்பட்டது.
1905-ல் 27 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது. தேசியமயமாக்கப்பட்ட பின் 1956-ல் 900 டன்களுக்கு மேல் தங்கம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உற்பத்திச் செலவு கூடுதலாகிவிட்டது என்று, 2001-ல் சுரங்கம் மூடப்பட்டது. இதற்குள் வேறு சூழ்ச்சிகள் இருப்பதை அப்போதே தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள். சுரங்கம் மூடப்பட்ட தருணத்தில், இராமசாமி எவ்வளவு வேதனையை அனுபவித்தார் என்பதை இந்த நூல் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
கோலார் தங்க வயலைச் சார்ந்த ஆரம்ப கால வாழ்க்கையை இராமசாமி அப்படியே இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார். துரைமார்கள் பெரும் மரங்களடர்ந்த தோட்ட வீடுகளில் வாழ்ந்தார்கள். இவர்களுக்குத் தங்கச் சுரங்க நிர்வாகம் அடுப்பெரிக்க இலவசமாக விறகு கொடுத்தது. மின்சாரம் இலவசம். அதற்கு நேர்மாறாகத் தொழிலாளர் குடியிருப்புகள் இருந்தன. தொழிலாளர்களுக்குத் தென்னைமர மட்டைகளால் அமைந்த தட்டி வீடுகள். மின்சாரம் முற்றாகக் கிடையாது. மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே.
ஒரு குடும்பம் வாழ வேண்டிய இடத்தில் மூன்று குடும்பங்கள் வாழ்ந்தன என்று இராமசாமி குறிப்பிடுகிறார். நூற்றாண்டு காலப் பெருமைகளை உள்ளடக்கிய நகரம் கே.ஜி.எஃப். என்றும், இந்தப் பெருமைகள் அனைத்தையும் இன்று அங்குள்ள இளைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதியதாகவும் தோழர் இராமசாமி குறிப்பிடுகிறார். எதிர்காலத்தில் தங்கள் சந்ததியினர் தங்கள் கனவுகளை ஈடேற்றுவார்கள் என்ற உறுதி அதில் தெரிகிறது. இந்த நூலில் செங்கொடி சங்கம் பற்றிய விவரங்கள் கூடுதலாகக் கிடைக்கின்றன. நூலாசிரியர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி இரண்டிலும் அங்கம்வகித்துள்ளார்.
தொழிற் சங்கத்தின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி வலிமை பெற்ற கதையை நூல் விவரிக்கிறது. 1952, 1957, 1962 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோலார் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றது. கட்சி பிரிந்த பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருமுறை வெற்றிபெற்றது.
இதுபோன்ற ஏராளமான விவரங்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. கோலார் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆய்வுசெய்ய விரும்பும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த நூல் பெரிதும் உதவக் கூடும். மொத்தத்தில், கோலார் தங்க வயலில் ரத்தமும் சதையுமாகப் புதையுண்ட வரலாற்றைத் தோண்டி எடுக்க இந்த நூல் முயற்சி எடுத்துள்ளது.
- சி.மகேந்திரன், மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com
தங்கவயல் தொழிற்சங்க வரலாறு
எஸ்.இராமசாமி
விஷன் புக்ஸ் மஹால்
பாடி,
சென்னை-50
விலை: ரூ. 150
தொடர்புக்கு: 98400 33936