

ம், கொரில்லா நாவல்களால் தமிழ்ப் புனைவுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஷோபாசக்தி. அரசியல் அங்கதத்தைக் கையாளுவதில் தேர்ந்த படைப்பாளர். சிறுகதைகள், கட்டுரைகள், தொகுப்பு நூல்கள், நேர்காணல்கள், திரைப்பட நடிப்பு எனப் பன்முகம் கொண்டவர்.
அவரது அடுத்த நாவலான ‘ஸலாம் அலைக்’ ஜூன் 12 அன்று சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது. ராயப்பேட்டை அகமது வணிக வளாகத்தில் உள்ள கருப்புப் பிரதிகள் விற்பனையகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் ஷோபாசக்தியுடன் அமுதா, அத்தியா, குமரன் வளவன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.
ஆலா: அன்றாட இலக்கிய உலா
தமிழ்ச் சிற்றிதழ் உலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகச் செயல்பட்டுவரும் கெளதம சித்தார்த்தன், தற்போது புதிய முன்னெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். ‘ஆலா’ என்ற பெயரில் மொபைல்போன் செயலியை உருவாக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் கதை, கவிதை, கட்டுரை, திரைப்படம், இசை, ஓவியம் எனக் கலை சார்ந்த விஷயங்களையும், தொழில்நுட்பப் போக்குகளையும் அன்றாடம் தொகுத்துத் தருகிறது ‘ஆலா’.
பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட படைப்புகளையும் தேடி எடுத்து, அவற்றுக்கான இணைப்புகளையும் இந்தச் செயலியில் தருகிறார். தொழில்நுட்பம் மூலம் இலக்கியச் சூழலுக்குப் புத்துணர்வு ஊட்டுகிறார் சித்தார்த்தன். இலக்கிய ஆர்வமுள்ள வாசகர்களுக்கு நல்ல ஒரு தளமாக இந்தச் செயலி இருக்கும். ப்ளே ஸ்டோரில் AalaA என்ற பெயரில் இந்தச் செயலி கிடைக்கிறது.