

சங்க இலக்கியத்தையும் தொல்லியலையும் இணைத்து ஆராயும்போது, அந்த ஆய்வு கூடுதல் நம்பிக்கைக்கு உரியதாக மாறுகிறது. அவ்வகையில், கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறையில் 29 ஆண்டுகள் பணியாற்றிய அறிஞர் ர.பூங்குன்றன் எழுதியுள்ள ‘வேளிர் வரலாறு’ ஆய்வு நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
சங்க இலக்கியங்களும் கல்வெட்டுகளும் ‘வேளிர் வரலாறு’ எழுதுவதற்குத் தரவுகளை அளித்திருக்கின்றன. இவர் ஏற்கெனவே ‘தொல்குடி வேளிர் வேந்தர்’ என்ற ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். தொடர்ச்சியாக சங்க காலத் தொல்குடிகள் குறித்த ஆய்வுகளை ர.பூங்குன்றன் செய்துவருகிறார். சங்க காலச் சமூக ஆய்வுகள் பெரும்பாலும் பெருவேந்தர்கள் சார்ந்தே அமைகின்றன.
அதே காலத்தில் வாழ்ந்த தொல்குடிகளான பாணர்கள், வேளிர்கள், மறவர்கள், மழவர்கள், இளையர்கள், எயினர்கள் உள்ளிட்டோர் குறித்த மீள் வரலாற்று ஆய்வுகள் சமீப காலமாகவே நடைபெறுகின்றன. மு.ராகவையங்கார் ‘வேளிர் வரலாறு’ (1913) என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார். நூற்றாண்டுகளைக் கடந்து அதே பெயரில் ஓர் ஆய்வை நிகழ்த்த வேண்டிய தேவை மீண்டும் உருவாகியிருக்கிறது. மு.ரா.வின் ஆய்வில் சில குறைகள் இருப்பதை ர.பூங்குன்றன் சுட்டிக்காட்டுகிறார்.
மு.ரா. தம் ஆய்வுக்கு இலக்கியத் தரவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறார். ர.பூங்குன்றன் நடுகல், கல்வெட்டுகளின் துணையுடன் ஆய்வைச் செய்திருக்கிறார். வேளிர்கள் குறித்த புதிய வரலாற்றை எழுதியிருக்கிறார். ‘வேள்’ என்ற சொல்லை மு.ரா. புரிந்துகொண்டதிலேயே ஒரு சார்புத்தன்மை இருப்பதை ர.பூங்குன்றன் குறிப்பிடுகிறார். ‘வேளிர், வடக்கிலிருந்து வந்த யாதவர்கள்’ என்பது மு.ரா.வின் கருத்து. தமிழ் நிலத்தின் திணை மரபிலிருந்து சங்க காலத்திற்கு முன்பே உருவாகி வந்தவர்கள் வேளிர் என்பது ர.பூங்குன்றனின் ஆய்வு முடிவு. இவ்வாறு, முந்தைய ஆய்வு முடிவுகள் பலவற்றை இந்நூல் தகுந்த தரவுகளுடன் மறுக்கிறது.
பறம்புமலைத் தலைவனான வேள்பாரியை மூவேந்தரும் சேர்ந்து கொன்றனர் என்பது சங்கப் பாடல்களினூடாக அறிய முடிகிறது. இந்த ‘மூவேந்தர்’ என்ற சொல் சேர சோழ பாண்டியர்களைக் குறிக்கிறது என்பதே உரைகளிலிருந்து பெறும் தகவல். ‘மூவேந்தர்’ என்ற சொல் பாண்டியர் மரபைச் சார்ந்த மூவரையோ அல்லது சோழ மரபைச் சார்ந்த மூவரையோதான் குறிக்க வேண்டும்; சேர மரபைச் சார்ந்தவர்களாக இருக்க முடியாது; ஏனெனில், பாரி இறந்த பின் சேர மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் புகழ்ந்து கபிலர் பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்; நண்பனைக் கொன்றவனைப் புகழ்ந்து கபிலர் பாடியிருக்க மாட்டார் என்பது ர.பூங்குன்றனின் கருத்து.
மேலும், ஒரே பரம்பரையைச் சார்ந்த மன்னர்கள் பலர் ஒரே காலகட்டத்தில் ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்களுள் மூவர்தான் வேள்பாரி மீது படையெடுத்து வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ர.பூங்குன்றன் வருகிறார். வேள்பாரியோடு தொடர்புடைய இன்னொரு தகவலையும் இங்கு குறிப்பிடுவது அவசியம்.
பாரியின் இறப்பிற்குப் பிறகு, பாரி மகளிரை வேள் மரபைச் சார்ந்தவர்களிடம்தான் கபிலர் மணந்துகொள்ள வேண்டுகிறார். நன்னன் மரபைச் சார்ந்த விச்சிக்கோவிடம் வேண்டுகிறார்; அவன் மறுக்கவே மலையமான் திருமுடிக்காரியிடம் பாரி மகளிரை ஒப்படைக்கிறார். இந்நிகழ்விற்குப் பின்புலமாகச் சாதியம் செயல்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார் ர.பூங்குன்றன்.
வேந்தர் மரபென்பது தொல்குடிகளிலிருந்துதான் உருவானது என்பதைப் பல்வேறு ஆவணங்களின் வழியாக நிறுவியிருக்கிறார் ர.பூங்குன்றன். தொல்குடியின் தலைவனாக இருந்தவன்தான் பின்னாளில் மன்னனாக உயர்த்தப்பட்டிருக்கின்றான். சேர சோழ பாண்டியர்களின் எழுச்சிக்கு முன்பே வேளிர்களின் ஆட்சி தமிழகத்தில் நிலைபெற்றுவிட்டது. இது சங்க காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார் ர.பூங்குன்றன். ஆநிரை கவர்தலில் தலைவனாகச் செயல்பட்டவனை வேள் என்று அழைக்கும் மரபு பற்றிய தகவல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
மழவர்கள், மறவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்து மிக விரிவாகவே இந்நூலில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். தொல்குடி மன்னர், வேளிர் ஆகிய படிநிலையினர் உருவாவதற்கு மறவர், மழவர், இளையர், மள்ளர் போன்ற வீரநிலைக் குழுக்கள்தாம் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது போன்ற ஆய்வு முடிவுகளை இந்நூல் முன்வைக்கிறது. சில முடிவுகள் அனுமானங்களாக இருந்தாலும் நூலாசிரியர் முன்வைக்கும் தரவுகள் அவரது அனுமானத்திற்கு வலு சேர்க்கின்றன.
- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ramesh5480@gmail.com
வேளிர் வரலாறு
ர.பூங்குன்றன்
வெளியீடு: தடாகம்,
சென்னை– 41
விலை: ரூ.220
தொடர்புக்கு: 98400 70870