

புத்தகக் காட்சிக்கு வேகவேகமாக வந்துவிட்டு, ஒரு மூட்டை புத்தகத்தோடு யார் கண்ணிலும் படாமல் ஓடிவிட வேண்டும் என்று இயக்குநர் சசிகுமார் நினைத்தால் வாசகர்களை ஏமாற்றிவிடலாம்; நம்மை? சிக்கினார்.
“ஒவ்வொரு வருஷமும் மவுசு ஏறிக்கிட்டேபோற திருவிழாபோல, புத்தகக் காட்சியும் வளர்றது சந்தோஷமா இருக்கு. படிப்பு, நேரடி அனுபவங்கள் எல்லாத்தையும் தாண்டி புத்தக வாசிப்பு தர்ற விசாலமான பார்வைதான் என்னைப் போல சாதாரண ஆளை எல்லாம் நாலு பேர் பார்க்குற மனுஷனா மாத்தியிருக்குனு நான் நம்புறேன். என்னதான், இயக்கம், தயாரிப்பு, நடிப்புனு சினிமால எல்லா வேலைகள்லேயும் கால் பதிச்சாலும், வாசிப்பை மட்டும் நான் விடுறதே இல்லை.
நேரம் கிடைக்கும்போது, ‘இந்தப் புத்தகம் படிச்சீங்களா… நல்லாயிருக்கு' என்று யாராவது சொன்னால், உடனே வாங்கிப் படித்துவிடுவது என்னோட பழக்கம்.
வருஷந்தோறும் புத்தகக் காட்சி நடக்கும்போது, சென்னையில இருந்தா கண்டிப்பா வந்துடுவேன். இந்த வருஷம் புத்தகக் காட்சி எனக்கு இன்னும் விசேஷம். என்னோட முதல் படமான ‘சுப்பிரமணியபுரம்’ படத்தோட திரைக்கதை அமைப்பு ஆங்கிலத்துல புத்தகமா இந்தப் புத்தகக் காட்சிக்கு வந்திருக்கு. முன்னே எப்போதையும்விட, இந்தத் தடவை நிறையப் புத்தகங்கள் வாங்கினேன். அதுல முக்கியமான புத்தகங்கள்: மருத்துவர் கு.சிவராமனோட ‘ஆறாம் திணை’, கவிஞர் கார்த்திக் நேத்தாவோட‘தவளைக்கல் சிறுமி’, பரத்வாஜ் ரங்கனோட ‘மணிரத்னம்’, தாரிக் அலியோட ‘அடிப்படைவாதங்களின் மோதல்’.”