

பாரதிக்குப் பிந்தைய வளமான கவிதை மரபுக்கு உரியவர்கள் என்று ச.து.சு. யோகியார், திருலோக சீதாராம், தமிழ்ஒளி, பெரியசாமித் தூரன், கம்பதாசன் (1916-1973) ஆகியோரைக் குறிப்பிடுகிறார் கவிஞர் சிற்பி. கனவு, விழித்த விழிப்பு, முதல் முத்தம், அருணோதயம், தொழிலாளி, புதுக்குரல், குழந்தைச் செல்வம், பாட்டு முடியுமுன்னே எனப் பல படைப்புகளைத் தந்தவர் கம்பதாசன்.
கம்பதாசனின் ‘சிலர் விழிப்பார் சிலர் துயில்வார் – நான்/ விழித்துக் கொண்டே துயில்கின்றேன்’ எனும் வரிகள் கண்ணதாசனுக்கு தூண்டுதலாக இருந்தது எனலாம். காதலின் ரசனையையும் பிரிவையும் கம்பதாசன் தன் கவிதைகளில் எழுதியுள்ளார்.இவரது நெடுங்கவிதைகளில் மானுடப் பொதுவலி வார்க்கப்பட்டுள்ளது. சலவை செய்யாது உவமைகளை நேர்நிறுத்தி, உருவகங்களை நிலைநிறுத்தும் நேர்த்தி இவருக்குக் கைகூடியிருந்தது. வேணுகானம், ஆராய்ச்சி மணி, உதயணன், ஞானசௌந்தரி, மங்கையர்க்கரசி, வனசுந்தரி, தந்தை, கண்ணின் மணிகள் உட்பட ஏறத்தாழ 40 படங்களுக்கு கம்பதாசன் பாடல்கள் எழுதியுள்ளார்.
‘லோகந்தான் இங்கே சுழன்றே போதல் பாட்டாளியின் கை பலத்தாலே’ என்று உலக இயக்கத்தின் ஆணிவேரைப் பிடித்தவர் கம்பதாசன். 1961-ல் ‘அக்பர்’ படத்தில் ‘கண்களின் வெண்ணிலவே – உல்லாச/ காதல் தரும் மதுவே’ என்ற புகழ்பெற்ற வரிகளின் மூலம் காதலின் ஈர்ப்பை கம்பதாசன் எழுதினார். ஐம்பதுகளில் பெரும்புகழோடு உலாவந்து அறுபதுகளில் சூழ்ச்சிகளாலும் சாதிப் பாகுபாட்டாலும் படிப்படியாகத் திரைவெளியிலிருந்து வெளியே தள்ளப்பட்டுவிட்டார். திரைப் பாடல்களில் மறுமலர்ச்சித் தமிழையும் முதன்முதலில் முற்போக்குப் பாடல்களையும் தந்தவர் என இவரை ஆழமாக உணர்ந்த சிலோன் விஜயேந்திரன் கூறுகிறார்.
எஸ்.வி.வெங்கட்ராம், ஜி.இராமநாதன் உள்ளிட்டோர் இசையில், தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், டி.எம்.எஸ், பி.சுசீலா, லதாமங்கேஷ்கர் உள்ளிட்டோர் குரலில் கம்பதாசனது பாடல்கள் பரவியிருக்கின்றன.
‘முத்துச் சிமிக்கி’ சிறுகதை நூலும் ‘படுக்கை அறை’ நாவலும் ‘சிற்பி’, ‘ஜீவநாடகம்’, ‘ஆதிகவி’, ‘அருணகிரிநாதம்’ முதலிய நாடகங்களும் என கம்பதாசனின் நூல்களின் பட்டியல் நீள்கிறது. இன்னும் அவரது பல படைப்புகள் அச்சாகவில்லை என்று தெரிகிறது. புதிய தமிழில் அவர் படைத்திருக்கும் ‘சிலப்பதிகாரம்’, அகலிகை குறித்தான 14 பாடல்கள் கொண்ட ‘கற்கனி’ எனும் குறுங்காவியம் உள்ளிட்டவை இதழ்களிலும் நாடகங்களிலும் தேடித் திரட்ட வேண்டிய அவரது படைப்புகள். இவையெல்லாம் வெளியிடப்பட்டால் கம்பதாசன் இன்னும் கவனம் பெறுவார்.
மதுவைக் கைவிடாத வாழ்க்கை, நடிப்புத் துறையில் மணம்புரிந்துகொண்ட சித்ரலேகாவின் பிரிவு என்பவை கம்பதாசனின் சிதைவுக்குக் காரணங்களாகின. தான் ஈட்டிய பணத்தையெல்லாம் பலருக்கும் பகிர்ந்து பழகியவர் கடைசியில் வறுமைக்குள்ளானார். சி.சு.செல்லப்பா, பி.எஸ்.இராமையா உள்ளிட்டோரோடு நட்பு கொண்டவர் கம்பதாசன். பிறமொழிப் படைப்பாளர்களான ஹரீந்திரநாத் உள்ளிட்டோருடன் நட்பு கொண்டிருந்தவர் கம்பதாசன். ‘உருக்கும் வறுமையில் மூழ்கிடினும் – ரவி/ ஒளிபோல் மதிகொள் எழுத்தாளன்’ என எழுதியவரின் ஒளி மங்கிவிடக் கூடாது. அது தமிழின் பலவீனம்.
- வீரபாண்டியன், பருக்கை உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: vvraa.s@gmail.com
(இது கம்பதாசனின் 50-வது நினைவு ஆண்டு)