

ஆண்டுதோறும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில், நாட்டிலுள்ள காட்டுயிரியலர்கள், மாணவர்கள் ஒன்றுகூடி வெவ்வேறு தளங்களில் அத்துறையின் நடப்பு பற்றிப் பேசுவார்கள். நான் இந்தக் கூடுகைகளில் கவனித்தது ஏறக்குறைய அவர்கள் எல்லாருமே தங்கள் தாய்மொழியில் பரிச்சயம் இல்லாதவர்கள்.
புலமை ஆங்கிலத்தில் மட்டுமே. காட்டுயிர், இயற்கை பற்றிய அறிவியல் கருத்தாக்கங்கள், புதிய கண்டுபிடிப்புகள், காட்டுயிர் சார்ந்த விவாதங்கள், இவை சாமானிய மக்களுக்குப் போய்ச் சேராததற்கு இது ஒரு முக்கியக் காரணம். பசுமை நடைகள், பறவை அவதானிப்புப் பயிலரங்குகள் மூலம் இன்று காட்டுயிர் பற்றிய ஆர்வம் அதிகரித்திருந்தாலும் தரமான கட்டுரைகள், நூல்கள் அரிதாகவே வருகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக எனக்குக் குமரன் சதாசிவத்தின் எழுத்துகள் பரிச்சயம். சொல்ல வந்த அறிவியல் கருத்து களை வாசகர்களுக்கு எளிமையாகவும் கச்சிதமாகவும் விளக்கும் தன்மையுடையவை. இயற்கை சார்ந்த இவரது ஆங்கிலக் கட்டுரைகளை ‘ஜந்தர் மந்தர்’ போன்ற இதழ்களில் படிக்கும்போதெல்லாம் இம்மாதிரிப் படைப்புகள் தமிழில் வருவது எப்போது என்று நான் நினைப்பது உண்டு.
நமது ஏக்கத்தைப் போக்குவதுபோல் இரண்டு நூல்கள் நம் கைக்குக் கிடைத்துள்ளன: 1. காட்டின் குரல் கேட்கிறதா?, 2. இயற்கையைத் தேடும் கண்கள். முதல் நூலில் 24 கட்டுரைகள். இரண்டாவதில் 30. குமரன் கட்டுரைகளின் மொழியாக்கம் இவை. எல்லாமே முத்துமுத்தான படைப்புகள். ‘மரங்களுக்குப் பாலினம் உண்டா?’, ‘காட்டுயிர்களை யாரிடமிருந்து பாதுகாக்க வேண்டும்?’ என்பது போன்ற சில முக்கியமான கருத்தாக்கங்களை இக்கட்டுரைகள் மூலம் அறிமுகப்படுத்துகின்றார். குமரன் சதாசிவத்தின் சொற்சிக்கனம் நாம் பின்பற்ற வேண்டிய ஒன்று.
எல்லாக் கட்டுரைகளின் அடித்தளம் அறிவியல்தான். இது ஒரு முக்கியமான அம்சம். ஏனென்றால், இன்று நம் நாட்டில் பிராணி நலன் (Animal welfare) என்ற கருதுகோள், காட்டுயிர் பேணலில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆட்கொல்லி வேங்கையைப் பிடித்து உயிரியல் பூங்காவில் அடைத்துவிட வேண்டும் என்று கூறும் கோஷ்டியின் சிந்தாந்தம் இது. அறிவியல் உத்திகளைக் கொண்டுதான் காட்டுயிரை நம்மால் காப்பாற்ற முடியும்.
இந்த நூல்களின் மொழியாக்கம் துல்லியமாக உள்ளது. ஒரு நூலை மொழிபெயர்ப்பவருக்கு, இரண்டு மொழிகளில் மட்டுமல்ல, அந்தத் துறையிலும் ஈடுபாடு இருந்தால்தான் மொழிபெயர்ப்பு சரியாக அமையும். இதற்கு ஆதி வள்ளியப்பனின் மொழியாக்கங்கள் நல்ல எடுத்துக்காட்டு. பொருத்தமான சொற்களை, சரியான காட்டுயிர்ப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கின்றார். ஒப்புப்போலி, கணுக்காலி, தோற்றுவளரி போன்ற சிறப்பான உயிரியல் சொற்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
இந்தப் புத்தகங்களின் இன்னொரு முக்கியப் பரிமாணம் ஒளிப்படங்கள். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு படத்தைக் கொண்டிருக்கிறது. அதிலும் பெருவாரியானவை வண்ணப் படங்கள். நாட்டின் மிகச் சிறந்த ஒளிப்படக் கலைஞர்களான கல்யாண் வர்மா, ஆர்.ஜி.காந்தா, ஷந்தானு குவேஸ்கர் போன்றோர் பங்களிப்பு செய்துள்ளனர். இந்தப் படங்களைப் பெற எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. டிஜிட்டல் யுகத்தில் இது ஒரு பெரும் வசதி. குமரனின் படங்களும் இரு நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன. எரிக் ராமானுஜத்தின் பென்சில் ஓவியம் ஒன்றும் உண்டு. இவர் அண்மையில் காலமானது காட்டுயிர் இயக்கத்துக்கு இழப்பு.
புத்தகங்கள் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எழுத்துருக்கள் தேர்வும் சிறப்பு. நூல்களைக் கையில் எடுப்பதே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இவை போய்ச் சேர வேண்டிய முக்கியமான இடம் பள்ளிகள். மாணவர்களின் கண்களை நம்மைச் சுற்றியுள்ள புறவுலகைக் காணத் திறந்துவிடும் திறன் கொண்டவை இந்த நூல்கள். சுற்றுச்சூழல் பற்றிய மேம்பட்ட புரிதலை மாணவர்களுக்கு இவை அளிக்கும்.
- சு. தியடோர் பாஸ்கரன்,எழுத்தாளர், சூழலியலர்.
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
போரும் இடதுசாரிகளும்
மார்செல்லோ முஸ்ட்டோ தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை
என்சிபிஎச் வெளியீடு, சென்னை-50
விலை: ரூ.30, தொடர்புக்கு: 044 26359906