Published : 01 May 2016 01:18 PM
Last Updated : 01 May 2016 01:18 PM

ஏழு கன்னிமார்கள் கலையிலும் கதையிலும்

பாரிஸில் சென் நதிக்கரையில் நான் தங்கியிருந்த விடுதிக்கு வெகு அருகேயே, அக்கரையில், கீழைத்தேயக் கலைப் படைப்புக்களுக்குப் பெயர்பெற்ற ம்யூஸி கிமே (Musee Guimet) அருங்காட்சியகம் இருப்பதையறிந்து முதல் நாளே சென்றேன். மூன்று அரிய சோழர் கால சப்தமாதர் சிற்பங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன என்று பல ஆண்டுகளுக்கு முன் படித்தது என் நினைவில் பதிந்துவிட்டிருந்தது. நான் சென்றபோது மூன்று சிற்பங்களில் ஒன்றை மட்டுமே காட்சிப்படுத்தியிருந்தனர். நுழைந்ததும் இரண்டாவது அறையிலேயே அந்த ஒரு மீட்டர் உயர சாமுண்டீஸ்வரி சிற்பம் இருந்தது பிரமிக்க வைக்கும் உயிர்த் துடிப்புள்ள படைப்பு. மென்மையான ஒளிவீச்சு அச்சிலையின் எழிலைக் மேம்படுத்திக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. புடைப்புச் சிற்பமாக இருந்தாலும், ஏறக்குறைய முழுச் சிற்பம்போல் செதுக்கப்பட்டுள்ளது. மனிதரால் உருவாக்கப்பட்டதா என வியக்க வைக்கும் பிரதிமை. வெவ்வேறு கோணங்களில் படமெடுத்துக்கொண்டேன். வெளிநாட்டு அருங்காட்சியங்களில்தான் படமெடுக்கத் தடையில்லையே.

கர்நாடகா அய்ஹோலேயில் உள்ள சாளுக்கிய குடவரைக் கோயிலிலும் எல்லோராவிலும் இந்தத் தெய்வங்களைச் சிற்ப வடிவில் காணலாம். தமிழகத்தில் சில பல்லவ ஆலயங்களிலும் சோழர் கோவில்களிலும் சப்தமாதர் என்று குறிப்பிடப்படும் இவர்களுக்குச் சிற்றாலயங்கள் எழுப்பப்பட்டன. சில பெரிய கோயில்களைச் சுற்றிக் கட்டப்பட்ட எட்டு பரிவார தேவதைகளின் ஆலயங்களில் ஒன்றாக சப்தமாதர் ஆலயம் இடம் பெற்றிருந்தது. திருக்கட்டளையிலுள்ள சோழ மன்னன் முதலாம் ஆதித்யனால் கட்டப்பட்ட சுந்தரேசுவரர் ஆலயம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்தச் சிற்பங்களைச் சார்ந்த கல்வெட்டுகள் அரிதாகையால், சிற்ப நியதிகளையும் உருவ அமைதியையும் அணிகலன்களையும் வைத்தே அவற்றைப் பற்றிய காலக் கணிப்பு செய்ய வேண்டியிருக்கிறது. சில இடங்களில் இவர்களுக்கென்றே தனி வழிபாட்டிடங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் சிவன் வழிபாட்டைப் போற்றிய நாயன்மார்கள் காலத்திற்குப் பின், சப்தமாதர் வழிபாடு பின்னடைவு பெற்று, பின் மறைந்தே போனது. சோழர் காலத்திற்கப்புறம் சப்தமாதர்களின் சிற்பங்களையோ ஆலயங்களையோ காண்பது அரிது.

கடுந்தவத்திற்குப் பின் பிரம்மனிடம் இருந்து பெற்ற வரங்களால் திமிரடைந்திருந்த அந்தகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். அவர்கள் சிவனிடம் முறையிட, சிவன் எய்த அம்பினால் காயமுற்ற அசுரன் சிந்திய ஒவ்வொரு துளி உதிரமும் ஒரு அரக்கனாக மாறியது. அவர்களை அடக்க சிவன் தனது வாயைத் திறந்து தீ ஜுவாலையினால் ஒரு பெண்ணுருவைப் படைத்தார். மற்ற கடவுளரும் இவ்வாறே செய்து ஏழு மாதர் உருவாயினர் என்பதும், அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர் என்பதும் புராணக் கதை. சாமுண்டி, பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராஹி, கெளமாரி, இந்திராணி இவர்கள்தாம் ஏழு கன்னிமார் என்றறியப்படும் சப்தமாதர்கள். இவர்கள் ஆண் கடவுளரின் பெண் உருவங்கள். சிற்ப வடிவில் ஒரு குழுவாக இவர்கள் உருவாக்கப்படும்போது இவர்களுடன் கணேசரும், வீரபத்திரரும் இடம்பெற்றனர். ஆக, முழுமையான சப்தமாதர் சிற்பக் குழுவில் ஒன்பது உருவங்கள் இடம் பெற்றிருக்கும்..

சப்தமாதர் வழிபாடு இந்தியா முழுவதும் இருந்ததற்குச் சிற்ப, ஓவிய, செப்புப் படிமத் தடயங்கள் பல உண்டு. ஆனால் அவர்களுக்குத் தனிக் கோயில்கள் எழுப்பும் வழக்கம் தென்னிந்தியாவில் மட்டுமே இருந்தது, வரலாற்றாசியர் வின்சென்ட் ஸ்மித், இந்தியா ஒரு திறந்த வெளி அருங்காட்சியகம் என்று 1910 ஆண்டு வாக்கில் எழுதிவைத்திருந்தார். கேட்பாரற்றுக் கிடந்த இந்த ஆலயங்களில் உள்ள சிற்பங்கள் பல களவாடப்பட்டு வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. ராபர்ட் கிளைவ், பின்னர் மதராஸ் ராஜதானி கவர்னர் ஹோபர்ட் ஆகியோர் மாமல்லபுரத்திலிருந்த சிற்பங்களை எடுத்துச் சென்றனர் என்று சென்னையில் சில காலம் வசித்த கலை வரலாற்றாசிரியர் வில்லியம் வில்லட்ஸ் பதிவுசெய்திருக்கிறார். உலகின் பல அருங்காட்சியகங்களில் இந்த ஏழு சப்தமாதரில் யாராவது ஒருவரின் சிலையைக் காணலாம். சில மேலைநாட்டு ஆய்வாளர்கள் சப்தமாதர்களை ‘யோகினிகள்’ எனக் குறிப்பிடுகின்றனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களது கட்டுரைகளைப் படிக்கும்போது மயக்கம் உண்டாகும்.

பாரிஸ் அருங்காட்சியகதிலிருக்கும் சப்தமாதர் குழுவைச் சேர்ந்த சிற்பம் ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது. ஜெர்மனியிலுள்ள வுப்பர்ட்டல் அருங்காட்சியத் தில் ஒன்றும், அமெரிக்காவில் கான்சாஸ் நகரில் ஒன்றும் உள்ளது. இந்தக் குழுவைச் சேர்ந்த மற்ற சிற்பங்கள் எங்கிருக்கின்றன என்றோ, இவை முதலில் எந்த ஆலயத்தில் இருந்தன என்றோ எந்த விவரமும் இல்லை.

சென்னைக்கருகில் சப்தமாதர் சிற்பங்களைக் காண வேண்டுமென்றால் மாமல்லபுரம் செல்லுங்கள். அங்கே, இன்றைய கிளை நூலகத்திற்குப் பின்புறம் சப்தமாதர் குழு ஒன்றின் சிற்பங்கள் ஒரு சிறிய வளாகத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள சாமுண்டீஸ்வரி சிற்பம், பின்னப்பட்ட சிலை என்றாலும், சிறப்பு வாய்ந்தது. பல்லவர் காலக் கல்வெட்டுகளையும் சிற்பங்களையும் ஆராய்ந்த மைக்கேல் லாக்வுட், இவை ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் தமிழக சப்தமாதர் சிற்பங்களிலேயே இதுதான் தொன்மையானது என்றும் கூறுகிறார். (அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் வசிக்கும் பேராசிரியர் லாக்வுட் தன் பணிக் காலம் முழுவதிலும் மதராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவம் போதித்தார். இவர் சமஸ்கிருத விற்பன்னர். பல்லவர் கலை வரலாறு பற்றி நூல்கள் எழுதியுள்ளார்.) திருத்தணியில் இன்றும் வழிபாட்டிலுள்ள பல்லவர் கால வீராட்டனேஸ்வரர் கோயிலிலும் ஒரு முழுமையான சப்தமாதர் குழுச் சிற்பங்கள் உள்ளன

ஆகம ஆலயங்களிலும் இடம்பெற்றிருந்த இந்த ஏழு பெண்கள் கருத்தாக்கம் கிராம தேவதைகளின் உலகில் இன்றும் இருப்பதைக் காணலாம். தமிழ்நாட்டில் ஏரிக்கரைகளிலும் வயல் பகுதிகளிலும் தரையில் ஏழு கூம்பு வடிவக் கற்கள் வரிசையாகப் பதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். மக்கள் இந்தத் தெய்வங்களை ஏழு கன்னிமார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். சில இடங்களில் இவற்றுக்கு மேல் கூரை போடப்பட்டிருக்கும். இவை பூஜிக்கப்படுவதின் தடயங்களையும் பார்க்கலாம். குங்குமம் இடப்பட்டிருக்கும். சில இடங்களில் கோழி பலியாகக் கொடுக்கப்பட்ட அடையாளங்கள் இருக்கும். இந்த வழிபாட்டிடங்களுக்கு, செல்லியம்மன் கோவில், வக்கிரகாளி கோவில், பிடாரி கோவில் எனப் பல பெயர்கள் புழக்கத்திலிருக்கின்றன. ஆந்திராவிலும் ஏழு கன்னிமார் வழிபாடு பிரபலம். நம்மூர் மாரியம்மன் போல, இந்த ஏழு பேரில் ஒருவரான பொலரம்மா, கொள்ளை நோயான பெரியம்மையைக் கட்டுப்படுத்துகிறார் என்பது நம்பிக்கை.

கட்டுரையாளர் கானுயிர் ஆர்வலர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x