

தொண்ணூறுகளில் தமிழ் அறிவுலகில் மிகவும் தீவிரமாக இயங்கிய கலை, இலக்கிய, சமூக விமர்சகர்களில் ஒருவர் கோ.கேசவன். இலக்கியம், தலித்தியம், மார்க்ஸியம் குறித்து இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். வெளிவந்த காலத்திலேயே பெரிதும் விவாதிக்கப்பட்ட அவரது புத்தகங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மறுபதிப்பு காணவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்புத்தகங்கள் மூன்று பெருந்தொகுதிகளாக கோ.கேசவன் அறக்கட்டளை சார்பில் தற்போது வெளியாகவுள்ளன. மொத்தப் பக்கங்கள் 2,652. இன்று (மே 28) காலை 9 மணிக்கு சென்னை திருவான்மியூர் ஹாலிடே இன் ஹோட்டலில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், இரா.நல்லகண்ணு, நீதிபதி கே.சந்துரு, தொல்.திருமாவளவன், பேராசிரியர்கள் பா.கல்யாணி, வீ.அரசு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இரா.ஜவஹர் நினைவேந்தல்
மூத்த பத்திரிகையாளரும் மார்க்ஸியருமான இரா.ஜவஹரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை அம்பத்தூர் ஹெச்.பி.எம். பாரடைஸ் கல்யாண மஹாலில் இன்று (மே 28) மாலை 4.30-க்குத் தொடங்கி நடைபெறுகிறது. ‘கம்யூனிசம் நேற்று இன்று நாளை’, ‘மகளிர் தினம் உண்மை வரலாறு’ உள்ளிட்ட நூல்களை ஜவஹர் எழுதியுள்ளார். அவரின் வாழ்வும் பணியும் குறித்த ஆவணப் படம் திரையிடப்படுவதோடு, நினைவு மலரும் வெளியிடப்பட உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நினைவு மலரை வெளியிட, பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபால் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் இரா.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிதம்பரம் மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், தமிழ்நாடு காங்கிரஸின் ஊடகத் துறைத் தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜவஹர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
புத்தகக்காட்சிகள்
கே.கே.நகர் புத்தகக்காட்சி: சென்னை கே.கே.நகர் புத்தகக்காட்சி மே 13 அன்று தொடங்கியது. இந்தப் புத்தகக்காட்சி ஜூன் 12 வரை நடைபெறுகிறது. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: ஸ்ரீவிஸ்வகர்மா மினி மஹால், அசோக் பில்லர் சாலை, கே.கே.நகர். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9884515879.
ராஜபாளையம் புத்தகக்காட்சி: மதுரை மீனாட்சி புக் ஷாப்பும் முன்னேற்றப் பதிப்பகமும் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி மே 20 அன்று ராஜபாளையத்தில் தொடங்கியது. இந்தப் புத்தகக்காட்சி ஜூன் 5 வரை நடைபெறுகிறது. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: காந்தி கலை மன்றம். நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9443262763.