

நமது வாழ்வின் சாட்சியாகுபவை கதைகள். செந்தில் ஜெகன்நாதன் தனது வாழ்வின் காலக்கடிகாரத்தில் பயணித்து, தான் வளர்ந்த நிலத்தின் கதைகளை எழுதுவதில் அனுபவம் மிக்கவராக இருக்கிறார். ஒருசில கதைகளைத் தவிர, நிறைவான கதைகளைக் கொண்ட தொகுப்பாக இவரின் ‘மழைக்கண்’ இருக்கிறது. ‘மழைக்கண்’, ‘நெருநல் உளனொருத்தி’, ‘நித்தியமானவன்’, ‘காகளம்’ போன்ற கதைகள் செந்தில் ஜெகன்நாதனின் சிறுகதை வளத்துக்கான சான்று.
வேளாண் சமூகத்திலிருந்து கதை எழுத வரும் ஒருவர் தன்னுடைய கதைகளில் நிலத்தின் புழுதியைக் கிளப்பாமல் எழுத முடியாது. பெரும்பாலான கதைகள் வேளாண் முறைகளில் இருந்து வரும் வாக்கியங்களைக் கொண்டுள்ளன. கூடவே, சினிமாவில் உதவி இயக்குநராகப் பணிபுரிபவர் என்பதால், விவரணைகளின் வழி காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்த இவரால் முடிகிறது.
சினிமாவில் வாய்ப்பு என்பது வரத்துக்கு நிகரானது. வரம் என்றாலும்கூட அதுவும் சரியான நேரத்தில், சரியானவர்களுக்குச் சென்றுசேர்வதும் இல்லை. ‘போலீஸாக நடிக்க வேண்டியவர் பிணமாக, பிணமாக நடிக்க வேண்டியவர் போலீஸாகவும் இங்கே நடிக்க வைக்கப்படுகிறார்கள்’ என்று ஒரு கதையில் வருகிறது. பிணமாக நடிப்பவர் எல்லாம் முடிந்த பிறகு கேமராவைப் பார்த்து மூன்று தடவை சிரிக்க வேண்டும். இது போன்ற துறைசார்ந்த வழக்கங்களைப் பிறருக்கு அறிமுகம் செய்வதற்கு செந்தில் தன்னுடைய கதைகளை ஊடகங்களாகப் பயன்படுத்திக்கொள்கிறார். ‘ஆடிஷன்’ என்ற கதையும்கூட அவர் சார்ந்த சினிமா துறையைக் களமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.
மொழி நடையில் செந்தில் அவசரம் காட்டவில்லை. நிதானமாகச் செல்லும் கதையில் தேவையான இடத்தில் வரும் சில வாசகங்கள் பதற்றத்தைத் தந்துவிடுகின்றன. ‘காகளம்’, ‘மழைக்கண்’, ‘நெருநல் உளனொருத்தி’ கதைகள் வழியே தனக்கு அணுக்கமான நிலத்துக்கு வாசகர்களையும் பயணிக்க வைக்கிறார்.
‘மழைக்கண்’ கதை மிகவும் நுட்பமானது. ஒரு குடும்பத்தின் பெண் நோயுறும்போது அந்தக் குடும்பமே அவதியுறுகிறது. தலைமைத்துவமிக்க ஒரு ஆண் நோயுற்றால்கூட அவருக்கு ஒரு அறை, சில பாத்திரங்கள், தனிமை மட்டுமே போதுமானதாகிறது. இங்கு ஒரு பெண் நோயுற்றால் அவள் குடும்பத்தின் மைய அச்சாணியாக இருந்து, கால்களைச் சுற்றிக்கொண்டிருக்கும் சமையல் கடமைகளை மூன்று வேளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. அவளால் உணவு தயாரிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. இக்கதையின் மூலம் பேசப்படும் பாலின அரசியல் முக்கியமானது. வேளாண் தொழில், பலவிதமான கள ஆபத்துகளையும் உள்ளடக்கியது. ஒரு பூச்சிக்கடி, அதையொட்டிய நோய், மருத்துவமனைகள் என்று கதையின் நகர்வில் மருத்துவம் சார்ந்த அறிவியல், காரணகாரியப் பிழைகள் இல்லாமல் கொண்டுசெல்கிறார் செந்தில் ஜெகன்நாதன்.
‘காகளம்’ கதையின் பின்னணியில் ஒரு இசைத்தட்டு சுழன்றுகொண்டே இருக்கிறது. மளிகைக் கடைத் தொழில், முதலாளி-தொழிலாளி உறவு, தொழில் துரோகம், சரிவு, லாபம், அதனைத் தொடர்ந்து வரும் குற்றவுணர்ச்சி, குற்றவுணர்வை வெற்றியால் கடந்துபோதல் அல்லது இல்லாமல் செய்தல் என்று பல கோணங்களில் பேசும் கதை இது.
இந்தக் கதையின் பின்னணியில் இசைக்கப்படும் பாடல்கள், அவற்றின் தத்துவப் பின்னணியைக் கதாபாத்திரங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் விதம் ஆகியவை வாசிப்பின் பரவசத்தை உறுதிசெய்கின்றன. இன்னும் கூடுதலாக, அசலான கதைகளை செந்தில் ஜெகன்நாதன் தருவார் என்பதற்கான நம்பிக்கையை இத்தொகுப்பு தருகிறது. தான் பணிபுரியும் களத்தை, அதன் பரிச்சயமில்லாத முகங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் கதைகளில் வெறும் சம்பவங்களே மேலோங்கியிருக்கின்றன. அதேநேரம், நிலத்தின்பாற்பட்டு கிளர்ந்தெழுந்த கதைகளில் இவரது எழுத்தும் கதைசொல்லல் முறையும் உயரத்தை அடைகின்றன.
மழைக்கண்
செந்தில் ஜெகன்நாதன்
வெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை - 606601
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9445870995
- ஸ்டாலின் சரவணன், ‘ரொட்டிகளை விளைவிப்பவன்' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். தொடர்புக்கு: stalinsaravanan@gmail.co