

அன்றாட வாழ்வில் கொஞ்சமாக உணரப்படும் மகிழ்ச்சியான தருணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுவது மிக அரிதாகவே நிகழ்கின்றன. இவ்வகைமையில் நர்சிம் எழுதியுள்ள நாவல் ‘மிளிர்மன எழில் மதி.’ எழில் செழியன் - மதி; அதிபன் - தென்றல் என இரு காதல் இணையர்களின் கதைதான் நாவல்.
தொல் சமூகம் பெண்களை மையமாகக் கொண்டே இயங்கியது. தனக்குத் துணையாகத் தகுதியான ஆண்களை அவரே தேர்ந்தெடுத்துக்கொண்டார். அந்நிலை இன்றும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட நாவல்தான் இது. செழியனும் மதியும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். இவர்களுக்கு இடையிலான காதல் திருமணத்தில் முடிய பணிச்சூழலே தடையாக இருக்கிறது.
செழியன் மதியைத் திருமணம் செய்துகொள்வதற்காக வேலையை விடுகிறார். யதார்த்தத்தில் பெண்கள்தான் திருமணத்துக்காகப் பணியைத் துறப்பார்கள். அதேபோன்று அதிபனின் ஆதிக்கத்தைச் சகித்துக்கொள்ளாமல் தென்றல் வேறொரு வாழ்க்கையைத் தேடிக்கொள்கிறார். இறுதியில் கணவரைப் பிரிந்து மகனுடன் மீண்டும் அதிபனிடமே வருகிறார். நவீன வசதிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் தலைமுறையினர் மனநிலையைத் துல்லியமான உரையாடல்களுடன் புனைவாக மாற்றியிருக்கிறார் நர்சிம். பெண்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. தம் வாழ்க்கையைத் தாங்களே முடிவு செய்துகொள்ளும், நவீன சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்ட ஒரு தலைமுறை உருவாகிவிட்டது.
அடுத்தடுத்த பெரிய திருப்பங்கள் புனைவில் இல்லையென்றாலும் வாசிப்பதற்கு அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. காதலிக்கும்போது இருக்கும் இருவருக்குமான அதிகாரம், திருமணத்துக்குப் பிறகு ஆண்மையப்பட்டதாக மாறிவிடுகிறது. தென்றல் இதனை உணர்ந்தே நண்பர்களாக இருக்கலாம் என்று அதிபனிடம் கூறுகிறார். முதல் கணவருடனும் நட்பைத் தொடர்கிறார். இதனைத்தான் நாவல் மையப்படுத்திப் பேசுகிறது.
அதிபனும் செழியனும் இறுதியில் தம் இணையரைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களுடைய உண்மையான அன்பு இவர்களிடையே ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நாவலின் கதாபாத்திரப் பெயர்கள் செவ்வியல் தன்மை கொண்டவை. ஆனால், அவர்களின் உரையாடல்கள் பல நேரங்களில் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. இது தற்காலத் தலைமுறையின் குறியீடு. செழியன் குறித்து சக பணியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அறிவு பிம்பத்துக்குப் போதிய தரவுகள் புனைவில் இல்லை என்பது பலவீனம். தொழில்நுட்பம் மற்றும் அலுவலக மேலாண்மை சார்ந்து இந்த நாவல் ஆச்சரியமான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறது.
வாழ்க்கை மனிதர்களுக்குத் துயரத்தை மட்டுமே அளிப்பதில்லை. அது தரும் மகிழ்ச்சியான தருணங்களைத் தவற விடுகிறோம் அவ்வளவுதான். அதிபன் இதனைத் தாமதமாகப் புரிந்துகொள்கிறார்; செழியன் சரியான நேரத்தில் உணர்கிறார். இறுதியில் எல்லாம் சுபம். எல்லாவற்றிலும் தனக்கு இணையான காதலியரைப் பெற்ற காதலர்களின் மனநிலையை அவ்வளவு நுணுக்கங்களுடன் பேசுகிறது நாவல். மொபைல், வாட்ஸப், கடல் இம்மூன்றும் நாவலின் இயக்கத்துக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன. நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் இடம்பெற்றுள்ள கவிதைகள் அந்த அத்தியாயத்தின் சாரத்தை அழகாக்கித் தந்திருக்கின்றன. நர்சிம் இயல்பில் ஒரு கவிஞரும்கூட.
- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: ramesh5480@gmail.com
மிளிர்மன எழில் மதி
நர்சிம்
வாசகசாலை பதிப்பகம், சென்னை – 73, விலை: ரூ.300
தொடர்புக்கு: 99426 33833