

அரிமளம் மணி அய்யர் 1925-1989
இசைக் கலைஞர் அரிமளம் மணி அய்யர் என்ற பி.எஸ்.வி. சுப்ரமணியம் அவர்களின் 25-ம் ஆண்டு நினைவேந்தல் என்று தலைப்பிட்டு, புதுச்சேரியில் இசைக்குறுவட்டு வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.
அகில இந்திய வானொலியில் 1957 தொடங்கி தன் இறுதிக் காலமான 1989 வரை அரங்கிசை வழங்கிக் கொண்டிருந்தார் மணி அய்யர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடல்கள், பிறமொழிப் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். அபூர்வ ராகங்கள் சிலவற்றிற்குத் தமிழில் தில்லானாக்களை இயற்றியவர்.திருவள்ளுவர் ஈராயிரத் தாண்டு விழாவை ஒட்டி திருக்குறள் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியிருந்தார். 1978-ல் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்து, அங்கேயே தன் இசைப் பயணத்தை முடித்துக்கொண்டார்.
இசையை மட்டுமே நம்பியிருந்த ஒரு இசைஞர் சாதி, மதம், இனம் பாராமல் இசை யாப்புகள், அப்பியாசங்கள் மட்டுமே தெரிந்திருந்த ஒருவர், கவனிக்கப்படாமல் ஊர் விட்டு ஊர் வந்து, தனது ஐம்பதைக் கடந்த வயதில் குடும்பத்தோடு; குடிபெயர்ந்து வருமளவு அவரை வறுமை விடாது துரத்தியது.
இவர் குறித்த நிகழ்வு என்று அறிந்த பின்பு, மனம் புதுச்சேரிக்கு உந்தித் தள்ளியது. நிகழ்வின் மையமாக அரிமளம் மணி அய்யர் 1979-1989 இடையே பாடிய சில பாடல்களின் குறுவட்டு, கோல்டன் மெலோடிஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பல ராகங்களில் தெலுங்கு, தமிழில் பாடியிருக்கும் செவ்வியல் இசை சார்ந்த பாடல்களின் தொகுப்பு இது.
தமிழிசை அல்லது செவ்வியல் இசையை நமது பட்டறிவில் மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன், கே.ஜே. ஏசுதாஸ் வழியாக அறிந்திருக்கிறோம்.சோமுவின் குரல் மேலேறி நின்று உயர்ந்து பாடும்; ஏசுதாஸ் குரல் கீழிறங்கி நின்று கமுக்கமாய் பரவசம் தரவல்லது. சீர்காழியின் குரலோ இடையில் நின்றுலாவும். இவர்கள் தத்தம் பாட்டிற்கு முன் வீடு கட்டி நின்று விளையாடுவதோ; ஆடுகளத்தின் உள்களத்திற்குள் பட்டென போகாமல், வெளியரங்கில் நின்றுப் பாடி போக்கு காட்டுவது போன்ற பாணியோ இவர்களிடம் குறைவு; ஒரு பாடலுக்கு விதவிதமாய் வர்ணங்களை மீட்டுவதும் குறைவு என்றும் சொல்லலாம்.
அரிமளம் மணி அய்யரின் இசையில் இவை யாவற்றையும் கலந்து காண இயலும். மேலேறி நின்றுலாவுவது அதிகம் இல்லை என்றாலும் கீழிறங்கிப் பாடும்பொழுது, குறிப்பிட்ட பூவை வட்டமிடும் வண்ணத்துப் பூச்சிபோல, புள்ளியில் சுற்றி நின்று உலாவுவது, அவரோகணமாய் இறங்குகிறோமென யாரும் அறியாவண்ணம், நீருக்குள் நழுவிச் செல்வது போல, இறங்கி நின்று பாடுவதையும் உணரலாம்.
அரிமளம் மணி அய்யர் தொடங்கி தமிழ் நாடெங்கும் பொதுவெளியின் கவனம் பெறாத இசைவாணர்களை தேடித் தேடி அறிவோம்; அவர்களின் கலையறிவை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்!