

உலகின் தலைசிறந்த நூல்களுள் ஒன்றான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர், அதில் அன்புக்கென்று ‘அன்புடைமை’ என்னும் தனி அதிகாரத்தை ஒதுக்கியிருக்கிறார். ‘அன்பே சிவம்’ என்கிறது சைவ சமய நெறி. ‘அன்பென்று கொட்டு முரசே’ என்று மகாகவி பாரதியும் அன்பைப் போற்றும் பல பாடல்களைப் படைத்துள்ளார். இப்படியாக தமிழ்ச் சான்றோர்கள், ஆன்றோர்களின் வாக்குகளை முன்வைத்து அன்பின் மகத்துவத்தை விளக்குகிறது இந்த நூல்.
அன்பால் உயர்வோம், கமலா கந்தசாமி
வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை - 49, விலை: ரூ.35,
தொடர்புக்கு: 94440 47790
கனடாவில் வாழும் புலம்பெயர் இலங்கை எழுத்தாளர் குருஅரவிந்தனின் மூன்று நெடுங்கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. நூலின் தலைப்பான ‘ஆறாம் நிலத்திணை’ என்னும் கட்டுரையில், கனடா போன்ற பனி படர்ந்த பகுதிகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்வதால் தமிழர்களின் ஐந்து நிலத்திணைகளுடன் பனிநிலம் என்பது ஆறாம் நிலத்திணையாகச் சேர்க்கப்பட வேண்டும் என்னும் கருத்தை நூலாசிரியர் முன்வைக்கிறார்.
ஆறாம் நிலத்திணை, குருஅரவிந்தன்
வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்,
திருச்சி - 620 003, விலை: ரூ.150,
தொடர்புக்கு: 94432 84823
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் பிறந்து, கொல்கத்தா ஐஐஎம்-ல் எம்பிஏ., பட்டம் பெற்று, தனியார் நிறுவனங்களில் மேலாண்மைப் பிரிவில் உயர்பொறுப்பு வகித்துள்ள ப.சொக்கலிங்கத்தின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு இது. ‘அஞ்சறைப் பெட்டி’ என்னும் தலைப்புக்கு ஏற்ப இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளை பூங்கா, காதல், இயற்கை, மெரினா, சமூகம் ஆகிய ஐந்து அறைகளாக (பாகங்கள்) பிரித்தளித்திருக்கிறார்.
அஞ்சறைப் பெட்டி, ப.சொக்கலிங்கம்
கோயம்பேடு, சென்னை - 600 107
விலை: ரூ.175, தொடர்புக்கு: 99400 84290
பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு, அனைத்து உள்ளாட்சிப் பதவிகளுக்கும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கின்றனர். இந்தச் சூழலில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கும் உதவக்கூடியவகையில், பல்வேறு தகவல்களை வழங்கும் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக ‘உள்ளாட்சி முரசு’ என்னும் இதழில் நூலாசிரியர் எழுதிய தலையங்கங்களே இந்த நூலில் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன.
அறிவோம் உள்ளாட்சி நடத்துவோம் நல்லாட்சி
பி.எஸ்.மருதநாயகம்,
வெளியீடு: உள்ளாட்சி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.280, தொடர்புக்கு - #17/9, TNSCB, அய்யப்பாக்கம், அம்பத்தூர் - 600058
உமறுப்புலவர், குணங்குடி மஸ்தான் சாகிபு, கா.மு.ஷெரீப் உள்ளிட்ட தமிழ் இலக்கியத்துக்கு அரும் பங்காற்றிய 16 இஸ்லாமிய ஆளுமைகள் குறித்தும் அவர்களின் பங்களிப்பைப் பற்றியும் அறிமுகப்படுத்தும் நூல். சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மு.மு.இஸ்மாயில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகிய பிற துறை ஆளுமைகளின் இலக்கியப் பங்களிப்புகளும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர்
எஸ்.சேகு ஜமாலுதீன், வெளியீடு: வானதி பதிப்பகம், சென்னை - 17, விலை: ரூ.175,
தொடர்புக்கு: 044 2434 2810
- தொகுப்பு: கோபால்