360 - ‘ஆயல்’ விருதுகள்
‘ஆயல் கலை இலக்கியப் பண்பாட்டுக் களம்' சார்பாக ‘ஆயல்’ இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. வாழ்நாள் சாதனையாளருக்கான ஆயல் விருது மார்க்சிய-பெரியாரிய சிந்தனையாளர், செயல்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்ட எஸ்.வி.ராஜதுரைக்கு வழங்கப்படவுள்ளது. புனைவிலக்கியத்துக்கான ஆயல் விருது தேவிபாரதிக்கு வழங்கப்படவுள்ளது. ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ்-மகராஜ்’, ‘நீர்வழிப் படூஉம்’ ஆகிய நாவல்களும் ‘பிறகொரு இரவு’, ‘கறுப்பு வெள்ளைக் கடவுள்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் தமிழுக்கு தேவிபாரதியின் முக்கியமான பங்களிப்புகள்.
கவிதைக்கான ஆயல் விருது சம காலத்தின் மிக முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான யவனிகா ஸ்ரீராமுக்கு வழங்கப்படவுள்ளது. ‘கடவுளின் நிறுவனம்’, ‘தலைமறைவுக் காலம்’, ‘யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் தமிழுக்கு இவரது பங்களிப்பு. வாழ்நாள் சாதனையாளர் விருது ஒரு லட்சம் ரூபாயையும் புனைவிலக்கியத்துக்கான விருது ஐம்பதாயிரம் ரூபாயையும் கவிதை இலக்கியத்துக்கான விருது ஐம்பதாயிரம் ரூபாயையும் கொண்டது. ஜூன் 4, 2022 அன்று கோவை ராஜஸ்தானி சங்க அரங்கில் விருது விழாவும் இலக்கியக் கூடுகையும் நடைபெறவிருக்கின்றன. விருதாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
அர்ச்சனாவுக்கு மற்றுமொரு அங்கீகாரம்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) மதங்கள் சார்ந்த ஆய்வுகளுக்கும் ஒப்பிலக்கியத்துக்குமான இணைப் பேராசிரியராக இருக்கும் அர்ச்சனா வெங்கடேசன் ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்டு சயன்ஸஸ்’ (American Academy of Arts and Sciences) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நவீன அமெரிக்காவை நிர்மாணித்த பெஞ்சமின் ஃபிராங்க்ளின், தாமஸ் ஜெஃபர்ஸன், ஜார்ஜ் வாஷிங்டன் உள்ளிட்டோரால் 1780-ல் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. எமெர்ஸன், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், டார்வின், ஐன்ஸ்டைன், சர்ச்சில், காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ், மண்டேலா, அகிரா குரசோவா உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பல ஆளுமைகள் இந்த அகாடமியின் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆண்டாளையும் நம்மாழ்வாரையும் அழகான ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றிருப்பவர் அர்ச்சனா வெங்கடேசன். நம்மாழ்வாரின் ‘திருவாய்மொழி’யை ‘எண்ட்லெஸ் சாங்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அர்ச்சனா மொழிபெயர்த்திருக்கிறார். இந்த மொழிபெயர்ப்புக்காக ‘லூஸியன் ஸ்ட்ரைக் ஏசியன் ட்ரான்ஸ்லேஷன் பிரைஸ்’ என்ற விருதையும் அர்ச்சனா சமீபத்தில் பெற்றிருக்கிறார். தற்போது ‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி’க்காக கம்ப ராமாயண மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார். அர்ச்சனாவுக்கு வாழ்த்துகள்!
‘இயல்’ விருதுகள்
கனடாவில் கடந்த 21 ஆண்டுகளாக இயங்கிவரும் ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ அமைப்பானது உலகெங்கும் தமிழுக்குப் பங்களிப்பு செய்துவரும் அறிஞர்கள், படைப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் ‘இயல்’ விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. 2021-க்கான இயல் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரலாறு, மொழி, இலக்கியம், பண்பாடு, மொழிபெயர்ப்பு என்று கடந்த 40 ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிவருபவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. புனைகதைக்கான இயல் விருது புலம்பெயர் எழுத்தாளர் பா.அ.ஜெயகரனின் ‘பா.அ.ஜெயகரன் கதைகள்’ என்ற நூலுக்கு வழங்கப்படவிருக்கிறது. நாடகம், கவிதை, சிறுகதை என்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கிவருபவர் பா.அ.ஜெயகரன்.
அபுனைவு நூலுக்கான விருது ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலுக்கு வழங்கப்படுகிறது. வழக்கறிஞராகப் பணியாற்றியபோதும் நீதிபதியாகப் பணியாற்றியபோதும் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகளுக்காக மகத்தான சேவை செய்திருப்பவர் சந்துரு. கவிதைக்கான விருது ஆழியாள் எழுதிய ‘நெடுமரங்களாய் வாழ்தல்’ நூலுக்கு வழங்கப்படுகிறது.
புலம்பெயர் ஈழத் தமிழ்க் கவிஞரான ஆழியாள் இதுவரை ‘உரத்துப் பேசு’, ‘துவிதம்’ உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்புக்கான விருது, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மார்த்தா ஆன் செல்பி மொழிபெயர்த்த திலீப் குமாரின் ‘Cat in the Agraharam and Other Stories’ நூலுக்கு வழங்கப்படுகிறது. ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குப் பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் மார்த்தா ஆன் செல்பி சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கிறார். ‘இயல்’ விருதாளர்களுக்கு வாழ்த்துகள்!
