

சைவ சித்தாந்த சாத்திரங்களின் தலைமை நூலான சிவஞான போதத்தின் மங்கல வாழ்த்து இப்படித் தொடங்குகிறது: ‘கல்ஆல் நிழல் மலைவு இல்லார்’. மயக்கங்களை, மருட்சியை நீக்கும் தென்முக நம்பியாகிய சிவனார் கல்ஆல மர நிழலில் உட்கார்ந்திருக்கிறார். சிவனாரின் இருப்பிடத் தடயம் சிக்கிவிட்டது சிறப்பு. ஆனால், கல்ஆல மரம் என்பது எது?
‘நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சு வச்சேன்’ என்று தொடங்குகிறது வைரமுத்துவின் திரைப் பாட்டொன்று. ‘இச்சி மரத்து மேல இலைகூடத் தூங்கிருச்சே’ என்று அதில் ஒரு வரி. இச்சி மரம் என்பது எது? கல்ஆல மரம்தான் இச்சி மரம். எவ்வாறு கொண்டுகூட்டியது இது?
‘இத்தி தன்னின் கீழ்இரு மூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே போற்றி’ என்று திருவாசகத்தின் போற்றித் திருவகவலில் ஒரு வரி. அதற்கு உரை எழுதும் உரையாசிரியர் ப.சரவணன் “கல்ஆல (இத்தி) மரத்தின் கீழ் இயக்கியர் அறுவர்க்கும் வெள்ளை யானைக்கும் (அத்தி) அருளிய அரசே!” என்று எழுதிவிட்டு, இத்தி எது என்றொரு குறிப்புரையும் எழுதுகிறார்: “இத்தி மரம் எனப்படும் இது, இந்நாளில் ‘இச்சி’ மரம் என்று அழைக்கப்படுகிறது. குறிஞ்சி நிலத்தில் மிகுதியாகக் காணப்படும் இம்மரம், கல்லையும் பிளந்துகொண்டு முளைத்து எழுமாம். அதனால் ‘கல்லிவர் இத்தி’ (ஐங்குறு.3) என்று சங்க நூலில் அழைக்கப்படுகிறது.”
இறை நம்பும் கொள்கையர் இத்தி மரத்தின் கீழ் இருப்பதைச் சுட்ட, இறை நம்பாக் கொள்கையர் இச்சி மரத்தின் மேல் இருப்பதைச் சுட்ட, இரு சுட்டுக்கும் இடமாய் நின்றது கல்ஆல மரம்தான் என்பதைத் துலக்கித் தந்தது சரவணனின் உரை.
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்று இறையனாருக்கு ஐந்து தொழில்கள் காட்டுகிறது தமிழ்ச் சைவமரபு. இவற்றில் படைப்பு வேலை நடந்தால்தான் மற்ற வேலைகள் நடக்கும். அனைத்தையும் அழித்துவிட்டால் பிறகு மீண்டும் படைக்கும் வரை இறையனாருக்கு ஓய்வுதான். காக்கவும் அழிக்கவும் அருளவும் மறைக்கவும் ஒன்றுமில்லாமல் ஒடுங்கிவிட்ட ஓய்வுக் காலத்தில், ஒற்றை ஆளாக இருந்துகொண்டு என்ன செய்வார் இறையனார்? - மனோன்மணீயம் சுந்தரனாருக்கு இப்படி ஒரு கேள்வி வந்திருக்கிறது. எண்ணிப் பார்த்துவிட்டுச் சுந்தரனார் சொல்கிறார்: ‘திருவாசகம் படிப்பாராய் இருக்கும்... வேறென்ன?’
‘சாத்திரங்களில் சிறந்தது திருமந்திரம்; தோத்திரங்களில் சிறந்தது திருவாசகம். இவற்றை ஊன்றிப் பார்க்கவும்’ என்று உபதேசக் குறிப்பு வழங்குகிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.
இவ்வண்ணம் பெரியவர்களால் முன்னுரைக்கப்படும் திருவாசகம் என்னும் தேனுக்குத் தானும் ஓர் உரை எழுதியிருக்கிறார் ப.சரவணன். சரவணனின் திருவாசக உரை எளிய உரை ஆவது எப்படி? சிலவற்றை இழுத்து வைத்துக்கொண்டு அவர் விளக்கும் விதத்தால். மேற்சொன்ன கல்ஆல மரமாகிய இத்தி மரம் என்னும் இச்சி மரத் தொடர்பில் அவர் எழுதியிருக்கும் உரைக் குறிப்பு இதற்குச் சான்று. மற்றொரு சான்றும் காட்ட வேண்டுமென்றால் இதைக் கருதலாம்: மணிவாசகர் பல இடங்களில் தம்மை ‘நாயினும் கீழாய்’ இறக்கிக்கொள்வார்.
ஏன்? நாய் எலும்பு கடிக்கும்போது எலும்பு வாயில் குத்திக் காயமாகி நாயின் வாயிலிருந்து ரத்தம் வரும்; அதை எலும்பிலிருந்து வரும் ரத்தமாகக் கருதி, நாய் அதைச் சுவைத்து மீண்டும் மீண்டும் எலும்பைக் கடிக்கும். குறிக்கோள் இல்லாமல் இங்கும் அங்கும் அலையும். உயிரும் அதுபோலத்தான். தனக்குத் துன்பம் தருபவற்றைக்கூட இன்பங்கள் என்று கருதி அவற்றிலேயே ஈடுபட்டுத் திளைக்கும். நோக்கம் எது என்ற தெளிவில்லாமல் உழலும். ஆகவே நாயும் உயிரும் நிகர். ஆனால், உயிர் நாயினும் கீழாவது எப்படி? நாய் நன்றி உள்ளது. எவ்வளவு தண்டித்தாலும் தலைவனிடம் அன்பு காட்டும். உயிர் காட்டாது. ஆகவே, மணிவாசகர் பார்வையில் நாயினும் கீழாகிறது உயிர் என்று எளிமையாய்க் குறிப்புரைக்கிறார் சரவணன்.
நல்லது. சரவணனின் திருவாசக உரை செவ்வுரை ஆவது எப்படி? ‘ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ’ என்னும் வரிக்கு உரை எழுதுவதில் ஒரு சிக்கல் எழும். ஆழி என்றால் சக்கரம், கடல். சக்கரத்தைக் கையில் வைத்திருப்பவர் திருமால். திருப்பாற்கடலில் அறிதுயில் கொண்டிருப்பவரும் அவரே. மணிவாசகரை ஆளுங்கட்சியரான சிவனாரின் அன்புக்கு வழி தேடும் நூல், மாற்றுக் கட்சியரான திருமாலின் அன்புக்கு ஆளாவதைப் பற்றியா பேசும்? இச்சிக்கலை எளிதாகத் தாண்டிக் கடக்கிறார் சரவணன்:
‘அருட்கடல் ஆகிய சிவபெருமானிடத்து நீ அன்பு செய்யும் வழிமுறை இப்படித்தானா?’ தன் உரையில் இவ்வாறு உரைத்துவிட்டுக் குறிப்புரையில் மாற்று உரைகளையும் சுட்டிக்காட்டி விடுகிறார்: ‘திருமால் சிவனைத் தனது இதயத்தில் வைத்து வழிபட்டவாறே திருப்பாற்கடலில் துயில் கொள்வதுபோல, நீயும் உறக்கத்திலேயே வழிபடுகிறாய் போலும்’ என்றும் பலவாறு பொருள் உரைப்பார்கள். சரவணன் திருவாசகத்துக்குத் தனது உரை வழங்குவதோடு நில்லாது பிறர் உரைகளையும் சுட்டிக்காட்டுவது, இந்த நூலைச் சில இடங்களில் உரைக் கொத்தாகவும் வேறு சில இடங்களில் உரை வேற்றுமை நூலாகவும் ஆக்குவது இதன் தனிச் சிறப்பு.
சில கோளாறுகளும் உண்டு. சரவணன் பயன்படுத்தும் ‘மதுகை’, ‘கான்றது’ போன்ற சில சொற்கள் இன்றைய நடப்பில் வழக்கொழிந்துவிட்டவை. மற்றொன்று: திருவண்டப் பகுதியில் வரும் ‘இல்நுழை கதிரின் துன்அணு’ என்னும் வரிக்கு அண்டங்கள் என்பவை ‘இல்லத்தினுள் நுழைகின்ற சூரிய ஒளியில் நெருங்கியிருக்கின்ற அணுக்களைப் போலச் சிறியனவாகக் காட்சியளிக்கின்றன’ என்பது சரவணன் எழுதும் உரை. இதுவே போதுமானதும் எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியதும்தான். என்றாலும், அத்தோடு விடாமல் அதை விளக்குவதற்குச் சம்ஸ்கிருதத்தை இழுத்துக்கொண்டு வருகிறார் சரவணன். இதனை ‘ஜால சூர்ய மரீசஸ்தம் சூட்சுமம் ரஜ’ என்பார் வடமொழியாளர். (ஜால – துவாரம்; ரஜ – நுட்பமான தூசி).
எல்லோரும் பார்த்தறிந்த எளிய ஒப்புமையை விளக்க வடமொழியைத் துணைக்கு இழுப்பது தேவையற்றதும், எளிய தமிழ் உரைத் தன்மையைச் சங்கடப்படுத்துவதும் ஆகும்.
இவை இருக்க, உரையாசிரியர் சரவணன் ஒரு பதிப்பாசிரியராகவும் மிளிரும் இடங்கள் இந்த நூலில் நிறைய உண்டு: திருவாசக வரிகளில் வரும் புராணக் கதைக் குறிப்புகளை எடுத்தெடுத்து விளக்கும் வகைமை; திருவாசகத்தில் இடம்பெறும் கதைக் குறிப்புகள், திருத்தலங்கள், உவமைகள் ஆகியவற்றைத் தொகுத்துப் பதிக எண்ணோடும் பட்டியலாக்கிய முறைமை; சைவ சித்தாந்தக் கலைச் சொற்களுக்கான விளக்கப் பட்டியல் வழங்கிய சீர்மை ஆகியன சில.
சைவ இலக்கியப் பரப்பில் உரைவளம் குறைவு. சைவத்தைப் புதிய காலத்தில் பொருத்திப் புரிந்துகொள்ளப் புதிய உரைகள் தேவைப்படுகின்றன. திருவாசகத்துக்கு ப.சரவணன் எழுதிய உரைக்கு ஒரு போற்றி.
திருவாசகம் எல்லோருக்குமான எளிய உரை,
ப.சரவணன், சந்தியா பதிப்பகம்,
சென்னை,
விலை: ரூ.750
- கரு.ஆறுமுகத்தமிழன், ‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: arumugatamilan@gmail.com