ஜப்பானிய நிலமும் மனித மனங்களும்

ஜப்பானிய நிலமும் மனித மனங்களும்
Updated on
2 min read

மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் தமிழ்ப் புனைவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. உள்ளடக்கத்தைக் காட்டிலும் விவரிப்பு மொழியில்தான் அவற்றின் தாக்கம் அதிகம். ஆனால், அந்த நடை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுப் பக்குவம் அடைவதற்குப் பதிலாக இறுக்கமாகிவிட்டது.

இந்த அயர்ச்சியால், எளிமையான யதார்த்தவாதக் கதைகளைப் பார்க்கும்போது அவ்வளவு ஆசுவாசம். அப்படியான ஒரு கதைத் தொகுப்புதான் ரா.செந்தில்குமாரின் ‘இசூமியின் நறுமணம்’. மன்னார்குடியும் ஜப்பானும்தான் கதையின் நிலங்கள். தன் அனுபவங்களை, சுற்றி நடந்த வாழ்க்கை விசித்திரங்களை மதித்து, அதற்கு ஆர்ப்பாட்டமில்லாத ஒரு மொழியைக் கண்டுபிடித்துக் கதையாகச் சொல்லியுள்ளார் செந்தில்.

ஆண் - பெண் உறவுகளைச் சித்தரிப்பதில் இந்தக் கதைகளில் ஒரு நிதானம் இருக்கிறது. ‘கனவுகளில் தொடர்பவள்’ கதையில் வரும் இசூமி என்ற பெண்ணுக்கும் கதைசொல்லிக்குமான உறவு இதற்கு உதாரணம். ‘மலரினும் மெல்லிது’, ‘தானிவத்தாரி’ போன்ற கதைகளிலும் இதை உணர முடிகிறது. பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும் மனத்தின் ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தியிருக்கிறார்.

நிழல் நயன்தாராவுக்குப் பதிலாக நிகழ் சகோதரிகளைப் பார்க்க வாழ்ந்துகெட்ட மடத்து வீட்டுக்கு இளைஞர்கள் போகும் கதையில், பிரசாத் கதாபாத்திரத்தின் வழியாக வாசகர்களின் நுழைவைச் சாத்தியப்படுத்துகிறார் செந்தில். நண்பர்கள் அநாகரிகமாகப் பெண்களிடம் நடந்துகொள்கிறார்கள் என்று பிரகாஷைப் பற்றி நாமும் கதைசொல்லியும் நினைக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக பிரகாஷை அநாகரிகமாகப் பேசும் அருண் இடத்துக்கு நகர்த்தி, நம்மைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறார் கதைசொல்லி. மானக்கேடாகிப் போகிறது. விருப்பம் பெருத்து வெளியே குதித்துவிடுகிறது.

‘மலரினும் மெல்லிது’ கதையில் காதலியின் திருமணத்துக்குப் பரிசளிக்கச் செல்லும் காதலன், தன் நினைவைத் தூண்டும் பரிசை அளிக்கப் படாதபாடு படுகிறான். இந்தக் குரூரத்தை வாசகருக்கும் கடத்திவிடுகிறார் செந்தில். ஆனால் பெண்கள், ஆண்கள் மிகப் பெரிதாக நினைக்கும் பிரச்சினைகளை மிக எளிதாகக் கடந்துவிடுகிறார்கள். கதைசொல்லியால் ரதிமீனா பேருந்துக்கு முன்பதிவுதான் செய்ய முடிகிறது. இந்தக் கதை இரு வேறு கதைகளால் பின்னப்பட்டிருக்கிறது. தனிக் கதைகளாகவே அவை சுவாரசியம் அளிக்கும் எனத் தோன்றுகிறது. ‘இசூமியின் நறுமணம்’ கதையில் தந்தையின் நினைவில் இருக்கும் மகளின் வாசனையையும் விவரித்த விதம், மனத்தின் விசித்திரங்களைச் சொல்லும் செந்திலின் மொழிக்குச் சான்று.

கதையின் பிற்பாதியில் வெடிக்கவுள்ள துப்பாக்கியைக் கதையின் தொடக்கத்திலேயே வாசகர்களிடம் எடுத்துக் காண்பித்துவிடுகிறார் செந்தில். விவரிப்பில், குண்டுகள் ஒவ்வொன்றையும் நிரப்புகிறார். இது சுவாரசியமான பாணி. ‘மடத்து வீடு’ கதையில் வாடாமல்லி ரவிக்கை அணிந்த பெண் சிலைகள், ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ கதையில் தற்கொலை, ‘தானிவத்தாரி’யில் உவாகி ஆகியவை உதாரணங்கள். சுவாரசியமாகச் சொல்லப்பட்ட சில கதைகளின் திட்டமிடல் அதை ஒரு தேய்வழக்கான வடிவத்துக்குள் சிக்கவைத்துவிடுகிறது. உதாரணமாக, ‘மயக்குறு மக்கள்’ கதையில், அம்மாவின் பையில் கண்டுபிடிக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள். இந்தக் கதையில் ஜப்பானியப் பின்புல விவரிப்பு தந்த உணர்ச்சியை அம்மா கதாபாத்திர வடிவமைப்பால் உருவாக்க முடியவில்லை.

‘செர்ரி ஃப்ளாசம்’ கதையின் சம்யுக்தாவைப் போல் செந்திலுக்கு ஜப்பான் நிலங்கள், மொழி, கலாச்சாரத்தின் மீது உள்ள தீராக் காதல், அப்படியே வெளிப்பட்டுள்ளது. ‘மயக்குறு மக்கள்’ கதையில் அம்மாவைத் தேடி அலையும்போது, அந்த நிலத்தின் காதலை செந்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது தீவிரத்துக்குச் சான்று. மது விடுதிகள், சிங்கில் மால்ட் விஸ்கி, ஒயின், ஜப்பானிய மணம், குட்டையான பெண்கள் (ஜப்பானிய ஆண்களுக்குப் பெரிதாக இடம் கொடுக்கப்படவில்லை), பறவைகள், மரங்கள், பூக்கள், காபி மேசைகள் என இன்றைய ஜப்பானின் முழுமையான சித்திரத்தை இந்தக் கதைகளுக்குள் வரைந்திருக்கிறார். இந்த அம்சங்களும் சொல்முறையும் செந்தில்குமாரின் கதைகளைத் தமிழில் கவனிக்கத்தக்க கதைகளாக்குகின்றன.

- மண்குதிரை, தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

இசூமியின் நறுமணம்

(சிறுகதைகள்)

ரா.செந்தில்குமார்

வெளியீடு: யாவரும் பதிப்பகம்

விலை: ரூ.170

தொடர்புக்கு: 9042461472

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in