

தாயைக் குறித்த சித்தரிப்புகள் உலக இலக்கியங்கள் அனைத் திலும் நெகிழ்வுடையதாகவும், ஊற்று நீர்போல குளிர்ச்சியும் பரிசுத்த மானதாகவுமே படைக்கப்படுகின்றன. அது அப்படித்தான் இருக்க முடியும். கண்ணில் காணாத தன் குழந்தையை வயிற்றுக்குள் வைத்து உயிரும் உணவும் கொடுத்து வளர்ப்பவள் அல்லவா அவள். மனித குலத்தின் விழிகளைத் திறந்து உலகைப் பார்க்கக் கற்றுக் கொடுப்பவர்கள் தாய்களே!
மொழியைத் தாயோடு இணைத்துப் பேசுவது தமிழினம். அடிப்படையில் சட்டென உணர்ச்சிவசப்படுதல் தமிழர் பண்பு! இது படைப்பிலும் வெளிப்படவே செய்கிறது. எண்ணற்ற தமிழ்க் கதைகள் தாயை, தாய்மையை மிக உன்னதமாகவே வெளிப்படுத்துகின்றன. இது இயற்கைதான். என்றாலும் தாய்மார்கள் மனுஷிகள். ரத்தமும், சதையும் அதனாலேயே உணர்ச்சிகளும் கொண்டவர்களும் ஆவார்கள். அந்த மனுஷ அம்சங்களைக் கொண்ட வகை மாதிரி கதைகளே வளரும் மொழிக்கும் இலக்கியத்துக்கும் தேவை. அம்மாவைப் பூஜை அறையில் இருந்து வெளியே அழைத்துவந்து சமூக மயமும் அரசியல் மயமும்படுத்தும் கதைகளே இன்றைய தேவை.
எழுத்தாளர் அகர முதல்வன் அதை உணர்ந்திருக்கிறார். அவருடைய ‘இரண்டாம் லெப்ரினன்ட்’ எனும் தலைப்பிட்ட சிறுகதைத் தொகுப்பில் உள்ள, அதே தலைப்பு கொண்ட ஒரு கதையில் அப்படியான ஒரு தாயை, சமூகமயமும் அரசியல் உணர்வும் கொண்ட ஒரு மனுஷியை அவர் படைத்துக் காட்டியுள்ளார்
பின்நேரம் சூரியன் கீழ் இறங்கிக் கொண்டிருக்கிறது. பிரதேச அரசியல் துறைப் பொறுப்பாளர், அந்த மரணச் செய்தியைச் சொல்லிவிட்டு அடுத்த வேலைகளில் ஈடுபடுகிறார். சிவா அண்ணாவின் தம்பி அலை யரசன் இன்று காலை மன்னாரில் நடந்த சண்டையில் வீரசாவு அடைந் திருக்கிறான். சிவா அண்ணா மயக்கம் மீளவில்லை. தாயும் தங்கச்சி யும் அழுவது யுத்த பூமியையே கலங் கடித்திருக்கும். சுகந்தி, திருமணத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறாள்.
இறந்துபோன அலையரசன் என்கிற சுகந்தனின் கடைசித் தம்பி சுதன், இயக்க அலுவலகத்தில் பணிபுரிகிறவன். செய்தி அறிந்து வந்து கதறுகிறான். தாய் தன் பிள்ளைகளிடம் இறந்துபோன தன் மகனைக் குறித்துப் பேசுகிறான்.
வீரச் சாவு வீடுகளில் போடப்படும் பந்தல் அரசியல்துறைப் போராளி களால் போடப்பட்டு, சுற்றிவர சிவப்பு மஞ்சள் நிறத்தில் எழுச்சி கொடிகள் கட்டப்பட்டன. வீட்டின் முன்னே வாகனம் ஒன்றில் இருந்து, தியாகம் செய்த அலையரசனின் உடல் இறக்கப்பட்டு, வாங்கில் கொண்டுபோய் வைத்தார்கள். வீடே கதறியது. தாய் தன் பிள்ளையை முகம் ஒத்தி கொஞ்சி அழத் துடித்தாள். களம் இருந்து விடுமுறையில் வருவ தாய் சொன்ன பிள்ளை வித்துடலாய் வந்திருப்பதை நினைத்து அவள் விதியை நொந்தாள்.
‘‘அண்ணா எங்கள விட்டுட்டுப் போயிட்டியே…’’ என்று அலையரசனின் பாதங்களில் தலையை வைத்து சுகந்தி அழுதாள். அவனைச் சுமந்த கருவறையின் உயிர்ப்பில் தீக்கங்கு மிளாசியது. தாய் அழுகிறாள். புலிச் சீருடை அணிந்து பெட்டிக்குள் கிடக்கும் தனது பிள்ளையின் உள்ளங்கைகளை எடுத்து தன் முகத்தில் ஒத்திக் கண்களை மூடுகிறாள். தன் பிள்ளையின் மரணக் காயம் எங்கெனத் தேடித் தேடி அழுகிறாள்.
ஒரு கிழமைக்கு முன்தான் அலையரசன் கொடுத்துவிட்ட கடிதம் வந்து சேர்ந்தது. அதில் ‘அம்மா எனக்காக விரதம் பிடிச்சு உடம்பைக் கெடுக்காதேங்கோ... மண்ணுக்காகத் தான் நான் போராடிக் கொண்டிருக் கிறேன். நீங்கள் கவலைப்படும்படியாய் என் சாவு இருக்காது. மண்ணுக்கும் மக்களுக்கும் விடுதலை வேண்டித்தானே நிற்கிறேன்... நீங்கள் தந்துவிட்ட பண்டி வத்தல் சாப்பிட்டு முடிச்சாச்சு. அடுத்த முறை வரும்போது மாட்டிறைச்சி வத்தல்தான் கொண்டு வர வேணும். சுகந்தியை நேற்று கனவில் கண்டன். அவளுக்கு ஆம்பிளைப் பிள்ளை பிறந்தது மாதிரி கனவு. எனக்கு மருமகன் பிறந்தால் என்னோடு நீண்டு வீரச் சாவு அடைஞ்ச பூவழகன் பெயரைத்தான் வைக்க வேணும் என்று நினைச்சு இருக்கிறன்...’
இப்போது அலையரசன் வித்துடலில் புகழ் உடலாய்க் கிடந்தான். அவ்வுடலை அவன் படித்த பள்ளிக்கூடத்தில் கொண்டுவந்து கிடத்தினார்கள். அவனுக்குப் படிப்பித்த ஆசிரியர்களும் கண்கலங்கி வணங்கினார்கள்.
‘நமது தேசத்தின் வரைபடத்தில் நீயுமொரு கோடு’ என்று புகழஞ்சலி செலுத்தப்பட்டது. தன் பிள்ளையின் புகழ் கேட்டு விம்மிதம் உற்று தாய் அழுதுகொண்டே இருந்தாள். சுகந்தன் என்கிற அலையரசனின் உடல் வெட்டப்பட்ட குழிக்குள் இறக்கப்பட்டது. தன் மகனின் உடம்பில் மண் அள்ளிப்போட மறுத்தாள் தாய். எட்டு மாதம் கழிய இடம்பெயர்ந்திருந்த காணியொன்றில் அலையரசனின் பெரிய படமொன்றை புதைத்த அந்த தாய், அப்படத்தின் மேல் மண் அள்ளிப்போட்டு மூடிய அம்மா, நிமிர்ந்து சொன்னாள்: ‘‘நீங்கள் நாடு பிடிச்சால்தான் இந்தப் படத்தை வெளியால எடுக்கலாம், தம்பி!’’
அகர முதல்வன் எழுதி, ‘தோழமை’ வெளியீடு பதிப்பித்திருக்கும் ‘இரண் டாம் லெப்ரினன்ட்’ எனும் இச்சிறுகதைத் தொகுதி ஈழ யுத்தக் காலத்தையும் அதற்குப் பிரதான கொடுங்காலத்தையும் போராளிகள் பக்கம் நின்று, நுட்பமுடனும் மிகுந்த வீரியமுடனும் பேசுகின்றன. போராளிகள் என்பவர்கள் தியாகிகள். தாய் மண்ணின் விடுதலைக்கு வித்தாக மரித்தவர்கள், விடுதலை பெறும் தேசத்துக்கு உயிர் கொடுத்தவர்கள், யுகம் யுகமாகப் பேசப்படப் போகிறவர்கள். அந்நிரந்தர புகழுக்கு வார்த்தைகள் வழங்குகிறவை, அகர முதல்வனின் கதைகள். (தோழமை வெளியீடு, 19/665, 48-ம் தெரு, 9-வது செக்டார் , கே.கே.நகர், சென்னை - 78.)
‘மாமிசம்’ என்ற பெயரில், பல் வேறு நாடுகளைச் சேர்ந்த ஒன்பது கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார் ரவிக் குமார்.
கதைத் தேர்வும் மொழிபெயர்ப்பும் மேதைமை கொண்டதாக இருக்கிறது. அனைத்தும் அரசியல் கதைகள். பசியால் சாகிறவர்கள், அகதிகள் பால் செய்யும் வன்கொடுமை, சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயகத்தின் பெயரால் கொல்லப்படும் சாதாரண மனிதர்கள் பற்றிய கதைகள், ஆகச்சிறந்த அக்கதைகளில் இருந்து ‘அம்மா’ என்று ஒரு கதை. ஒரு தாய், தன் மகனைக் கொல்கிற கதை.
மடகாஸ்கர் தீவில் பிறந்து இப்போது பாரீசில் வாழும் மிக்கேல் ரகோடசன், ஆப்பிரிக்கப் பெண் எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர். அவர் எழுதிய கதை இது.
காயத்தில் இருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. ரத்தம், சீழ், வியர்வை. அம்மா வியர்வையைத் துடைத்தாள்.
‘‘என் மகன் நோயுற்று வந்திருக் கிறான்’’ அவள் சொல்வாள்.
‘‘வலிக்குது அம்மா.’’
‘‘தெரியும் மகனே. அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி நாம் பேசக் கூடாது, மகனே.’’
மரணத்துக்கு ஒப்புதல் தந்தா யிற்று, அவன் ரத்தம், விந்து, மலம் ஆகியவற்றுக்கிடையில் கிடத்தப் பட்டிருந்தான்.
அந்தத் தாய் கதவையும் ஜன்னல் களையும் மூடிவிட்டிருந்தாள்.
‘‘உன் துயரத்தை யாரும் பார்க்கக்கூடாது. உன் அலறலை யாரும் கேட்கக்கூடாது. தூங்கு மகனே!’’
‘‘ஆண்கள் உன்னை விரும்பினார்கள். பெண்கள் உன்னை நேசித்தார்கள். அழாதே… நேசத்தைப் பாரு.’’
தாய் கூந்தலை அவிழ்த்துவிட்டாள், துக்கம் அனுசரிப்பது போல.
‘‘நான் உன்னை அழைத்துச் செல்லப்போகிறேன். வெகு தொலைவில் உள்ள ஓர் இடத்துக்கு…’’
தாய் மகனை படுக்கையில் நிமிர்ந்து உட்காரச் செய்தாள். வெண்மையான் ஒரு சட்டையை அணிவித்தாள்.
‘‘என் மகன் வருந்தக்கூடாது.’’
தாய் மகனை மெதுவாக அழைத்துச் சென்றாள்.
கடலில் அவர்கள் நடக்கத் தொடங்கி னார்கள்,
மகனின் தலையைத் தன் மார்போடு வைத்து அழுத்தினாள். தண்ணீர் அளவுக்கு வரும் வரை அமுத்தினாள்.
அவள் ஒரு தாலாட்டுப் பாடலைப் பாடினாள்.
தண்ணீர் அந்த இளைஞனைத் தழுவி யது. தாய், தன் மகனுடைய தலையைத் தண்ணீருக்குள் வைத்து அமுத்தினாள்.
மகனின் படத்தை மண்ணில் புதைத் தவளும், மகனின் தலையை நீரில் அமுத்திக் கொன்றவளும் தாய்கள்தான்.
அன்பும் அருளுமே அல்லது தாய் களே இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். சகல துயரங் களும், சகல கொடுங்கோன்மைகளும் தாயின் விரல் நகத்தின் கீழ் நசுக்கப் படுகின்றன.
தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க் கும், புதிய பொருள் வழங்கும் ‘மாமிசம்’ சிறுகதைத் தொகுப்பை ‘மணற்கேணி’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- நதி நகரும்…