Last Updated : 07 May, 2016 09:55 AM

 

Published : 07 May 2016 09:55 AM
Last Updated : 07 May 2016 09:55 AM

பாகிஸ்தானில் கொற்கை, வஞ்சி, தொண்டி...

வெறும் 170 பக்கங்கள் கொண்டதுதான் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ புத்தகம். அதில் அகழ்வாய்வு, மொழியியல், புவியியல், மேலும் சமூகவியல் போன்றவற்றின் அடிப்படையில் சிந்துவெளிப் பண்பாட்டைப் பற்றிய உறுதியான சான்றாதாரங்களையும் கோட்பாடுகளையும் ஒருங்கிணைத்துத் தன்னுடைய முடிவுகளை அழுத்தமாக முன்வைக்கிறார் பாலகிருஷ்ணன்.

தன்னுடைய புதிய கருத்துகளை மொழியியல், சிந்துவெளி நகர அமைப்பு ஆகிய இரண்டு அடிப்படைகளின் மேல் நிறுத்தி விவாதிக்கிறார் பாலகிருஷ்ணன். தமிழில், அநேகமாக அனைத்து திராவிட மொழிகளிலும், மேல் என்றால் மேற்கு, கீழ் என்றால் கிழக்கு என்ற பொருள் இயல்பானது. இந்த மொழியியல்பின் அடிப்படையிலான எண்ண ஓட்டத்தில் தங்கள் நகர அமைப்புகளை சிந்துவெளி மக்கள் உருவாக்கியுள்ளனர். இதற்கான ஆதாரங்களை ஈரான், ஆஃப்கானிஸ்தான், பலோசிஸ்தான், பாகிஸ்தான் முதல் இந்தியாவின் மகாராஷ்டிரம் வரை அமைந்திருக்கும் பகுதிகளில் உள்ள சிந்துவெளி நாகரிகத் தடய நகரங்களின் மூலைமுடுக்குகளைத் தேடி, தரவுகளையும் தகவல்களையும் அலசி வடிகட்டித்தருகிறார் பாலகிருஷ்ணன். அகழ்வாய்வின் மூலம் நமக்குத் தெரியவந்திருக்கும் மாநகரங்களான மொஹஞ்சதாரோ-ஹரப்பாவும் சரி, சிறு நகரங்களான ஸூர்கோட்டா மற்றும் ஸூட்காஜென்தோர் ஆனாலும் சரி, அனைத்து சிந்து சமவெளி நகரங்களிலும் மேடான, உயர்ந்த மேற்குப் பகுதிக் கட்டிட அமைப்புகளும், தாழ்வான கிழக்குப் பகுதிக் குடியமைப்புகளும் காணப்படுகின்றன. இந்த அமைப்புகள் எதேச்சையானவை அல்ல. முன்யோசனையின் விளைவு என்று முறையான ஆதாரங்களைக் கொண்டு வாதிடுகிறார் பாலகிருஷ்ணன்.

மேல்-கீழ், முன்-பின்

திராவிட மொழிகளில் மட்டுமே புவிமைய (topo-centric) அடிப்படையில் திசை சுட்டும் சொற்கள் அமைந்துள்ளன. சம்ஸ்கிருதம் மற்றும் அது சார்ந்த இந்தோ-ஆரிய மொழிகளில் திசை சுட்டும் சொற்கள் மனிதமைய (anthropo-centric) ரீதியில் அமைந்திருப்பதை பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். மனிதமைய நோக்கின் காரணமாக, இந்தோ-ஆரிய மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோரின் சிந்தனையில் கிழக்கு என்பது ‘முன்’ என்றும், மேற்கு என்பது ‘பின்’ என்றும் உணரப்படுகின்றன. இந்த உணர்வு சிந்துவெளி நகர அமைப்பில் வெளிப்படுவதில்லை என்பதை ஒப்பிட்டுக் காண்பிக்கிறார் பாலகிருஷ்ணன். சிந்துவெளி ஊர்ப் பெயர்களிலும் ‘முன் - பின்’ தடயம் காணப்படவில்லை. மாறாக, ‘மேல் கீழ்’ பெயர்கள் ஏராளமாகத் தென்படுகின்றன என்ற உண்மையைப் புள்ளிவிவரப்படுத்தி அட்டவணைகள், அட்ச-தீர்க்க ரேகைகளுடன் வழங்குகிறார்.

‘மேல் கீழ்’ நகர அமைப்பு, சிந்துவெளிப் பண்பாட்டின் முன்னோடியாகக் கருதப்படும் மெஹர்கர் குடியிருப்பிலிருந்தே தொடங்கிவிடுவதையும் நமக்கு விளக்குகிறார் ஆசிரியர். ஒவ்வொரு நகர அமைப்பையும், அகழ்வாய்வு தரும் வரைபடங்களை கணினி மென்பொருள்களின் உதவியைக் கொண்டு சற்றே சீர்திருத்தி நமக்குத் தருகிறார். இந்த வரைபடங்கள் கிடைமட்ட வரைபடங்களாகவே (plan) தரப்பட்டுள்ளன. உயரம் குறிக்கும் வரைபடங்களாக இவற்றைத் தந்திருந்தால் ஆசிரியர் நமக்கு விளக்க நினைக்கும் ‘மேல் கீழ்’ விளக்கம் இன்னும் துல்லியமாக வெளிப்பட்டிருக்கும்.

ஊர்ப் பெயர்கள்

மக்கள் ஓரிடத்தை விட்டு வேறிடம் செல்ல அவசியம் நேரும்போது தங்கள் ஊர்ப் பெயர்களைத் தம்முடன் எடுத்துச்சென்று, புகுந்த இடத்துக்கு அந்தப் பெயரைச் சூட்டுவது மனித இயல்பு. இந்த இயல்பை உன்னிப்பாகக் கவனித்து, உலகமெங்கும் காலம்காலமாக ஊர்ப்பெயர்கள் ஊர் விட்டு ஊர் செல்வதை ஆழமாக ஆராய்ந்தவர் பாலகிருஷ்ணன். அவற்றில், சிந்து சமவெளியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ஊர்ப்பெயர்களை மட்டும் முத்துமுத்தாக எடுத்துக் கோத்துத் தருகிறார். கொற்கை, வஞ்சி, தொண்டி என்று சங்க இலக்கியம் சொல்லும் முக்கியமான ஊர்ப் பெயர்களை பாகிஸ்தானில் தான் கண்டறிந்திருப்பதை நமக்குத் தெரிவிக்கிறார்.

மலையும் கோட்டையும்

திருவண்ணா‘மலை’, மேக‘மலை’ என்று தமிழ்நாட்டில் ‘மலை’யைப் பின்னொட்டாகக் கொண்ட ஊர்ப்பெயர்கள் அநேகம். இத்தகைய ‘மலை’ப் பெயர்கள் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், பிஹார், இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற இந்திய மாநிலங்களிலும் வெகுவாகக் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் ‘குன்று’ப் பெயர்களும் ஏராளம். அது மட்டுமில்லை. உயரமானவற்றை ‘மலை’ என்றும், மலைகளைவிட உயரம் குறைந்தவற்றை ‘குன்று’ என்றும் தமிழில் நாம் சொல்வது போலவே, வடக்கில் ‘மலை’ப் பெயர்களைக் கொண்ட நகரங்கள் உயரத்திலும், ‘குன்று’ப் பெயர்களைக் கொண்ட ஊர்கள் குறைந்த உயரத்திலும் காணப்படுகின்றன.

அடுத்தது, கோட்டை. பட்டுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை போல பதான்கோட், சியால்கோட் போன்ற பல ஊர்ப்பெயர்கள் வடமேற்குப் பிரதேசங்களில் பரவலாகத் தென்படுகின்றன. மேட்டில் கோட்டை அமைத்து ஊராட்சி செய்வதென்பது தொன்றுதொட்ட திராவிடப் பண்பாடு என்பது புலனாகிறது.

வேர்நிலைத் தொடர்பு

‘சிந்துவெளி விட்ட இடத்துக்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்துக்கும் ஒரு வேர்நிலைத் தொடர்பு’ இருப்பதை விரிவாக விளக்கும் கட்டுரையாக இந்த ஆராய்ச்சி நூலை பாலகிருஷ்ணன் வழங்குகிறார். தமிழுக்குப் பெருங்கொடை இந்த நூல் என்றே சொல்ல வேண்டும். சிந்துவெளி சித்திர எழுத்துகளைப் பற்றிய ஆய்வுகளின் ஜாம்பவானாகக் கருதப்படும் ஐராவதம் மகாதேவன் இந்த நூலுக்குப் பணிந்துரை வழங்கியிருப்பது நூலின் நம்பகத்தன்மைக்கு உறுதியான சான்று. பாலகிருஷ்ணன் இந்நூலைத் தமிழில் வெளியிடுவதற்கு முன், தன் கோட்பாடுகளைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதி ஆய்விதழ்களில் வெளியிட்டார். ‘இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் எளிய தமிழில், ஒவ்வொரு தமிழருக்கும் போய்ச்சேர வேண்டும்’ என்ற எண்ணத்துடன் தமிழிலும் வெளியிட்டிருக்கிறார். தமிழிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, இன்று ஒடிஷா மாநில நிதித்துறைச் செயலராகவும், மேலும் வேறு பல பொறுப்புகளையும் ஏற்றுப் பணிபுரிந்துவரும் பாலகிருஷ்ணனுக்கு இந்த நூலுக்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்.

கடைசியாக ஒரு வினா. இந்நூலில் ஒரு முறைகூட பாலகிருஷ்ணன் சிந்துவெளிப் பண்பாட்டின் மொழியை திராவிட மொழி என்று அழைக்க மறுக்கிறார். அதே நேரத்தில் சிந்து மொழி திராவிட மொழியே என்ற கருதுகோளை முன்வைக்கும் ஐராவதம் மகாதேவன் மற்றும் அஸ்கோ பர்ப்போலாவின் பல அடிப்படைக் கருத்துகளை ஆங்காங்கே தழுவிக்கொள்கிறார். ஏன் இந்தத் தயக்கம்?

- எம்.வி. பாஸ்கர், கலை ஆவணமாக்குநர், ‘ஊர்’ என்ற ஆவணப் படத்தின் இயக்குநர். தொடர்புக்கு: mvbhaskar@mac.com

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

ஆர். பாலகிருஷ்ணன்.

விலை: ரூ. 150,

வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை-18.

தொடர்புக்கு: 044- 2433 2424

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x