

கி.பி. 8-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் நெடுமாறனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது ‘பாண்டிக்கோவை’. இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ‘இறையனார் களவியல்’ என்னும் இலக்கண நூலுக்கு உரை எழுதிய நக்கீரர், அதில் ‘பாண்டிக்கோவை’ பாடல்களை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
அதாவது, ‘இறையனார் களவியல்’ இலக்கண நூலுக்கு எடுத்துக்காட்டு இலக்கிய நூலாக ‘பாண்டிக்கோவை’ அமைந்துள்ளது. தமிழியலுக்கும் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிக்கும் அமெரிக்க அறிஞர்கள், பேராசிரியர்கள் பலர் பெரும் பங்களித்துள்ளனர். சிகாகோவில் வசிக்கும் டேவிட்.சி.பக் அவர்களுள் ஒருவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய கே.பரமசிவம், தமிழாய்வில் ஈடுபட்ட பல அமெரிக்க அறிஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.
பேராசிரியர்கள் டேவிட், பரமசிவம் இருவரும் இணைந்து ‘இறையனார் களவியல்’ நூலை உரையுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றனர். அது ‘தி ஸ்டடி ஆஃப் ஸ்டோலன் லவ்’ (The Study of Stolen love) என்னும் தலைப்பில் நூலாக வெளியானது. இவர்கள் இருவரும் இணைந்து ‘பாண்டிக்கோவை’ செய்யுள்களையும் மொழிபெயர்த்திருந்தனர். 1992-ல் பேராசிரியர் பரமசிவம் மறைந்துவிட்டார். இப்போது ‘பாண்டிக்கோவை’யின் 325 பாடல்களும் அவற்றுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
- கோபால்
தி பெர்ள் கேனபி: பொயட்ரி ஆஃப் கிங்ஸ் அண்ட் லவ்வர்ஸ் இன் ஏன்ஷியன்ட் இந்தியா (The Pearl Canopy: Poetry of Kings and Lovers in Ancient India)
தமிழிலிருந்து ஆங்கிலத்தில்: டேவிட்.சி.பக், கே.பரமசிவம்
வெளியீடு: இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏசியன் ஸ்டடீஸ்,
சென்னை - 600 119
விலை: ரூ.500
தொடர்புக்கு: 044-2450 1851