

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, கோவை விஜயா பதிப்பகத்தின் ‘விஜயா வாசகர் வட்டம்’ சார்பில், சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகின்றன. 2022-ம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ‘ஜெயகாந்தன் விருது’க்கு விட்டல் ராவ் (‘நிலநடுக்கோடு’ நாவலுக்காக), ‘மீரா விருது’க்கு சாகிப்கிரான் (‘அரோரா’ கவிதைத் தொகுப்புக்காக), ‘புதுமைப்பித்தன் விருது’க்கு கா.சு.வேலாயுதன் (‘யானைகளின் வருகை’ கட்டுரை நூலுக்காக) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறந்த நூலகருக்கான ‘சக்தி வை.கோ. விருது’ திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசு நூலகர் ஏ.சாய்ராமுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான ‘வானதி விருது’ கரூரைச் சேர்ந்த வாணி புக் ஷாப் பி.நாகமல்லையாவுக்கும் வழங்கப்படுகிறது. விட்டல் ராவுக்கு ரூ.1 லட்சமும், சாகிப்கிரானுக்கும் கா.சு.வேலாயுதனுக்கும் தலா ரூ.25 ஆயிரமும், சாய்ராமுக்கும் நாகமல்லையாவுக்கும் தலா ரூ.15 ஆயிரமும் விருதுத் தொகை வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
இடைவெளி இதழ் அறிமுகக் கூட்டம்
கவிதைக்கென்று கொண்டுவரப்படும் ‘இடைவெளி’ இதழின் அறிமுகக் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பேராசிரியர் அ.மார்க்ஸ், சி.மோகன், ஷங்கர்ராமசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு இதழை அறிமுகப்படுத்திப் பேசவிருக்கின்றனர். இந்த நிகழ்வை ‘பரிசல் வாசகர் வட்டம்’ ஒருங்கிணைக்கிறது. இடம்: பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர்.
நேரம்: மாலை 5.30 மணி. தொடர்புக்கு: 9382853646