

தமிழ் மண்ணில் பிறந்த தலைசிறந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர்களில் ஒருவர் ஜீவா என்னும் ப.ஜீவானந்தம். அவர் ஒரு கம்யூனிஸ்ட், எளிமையான தலைவர் என்பது போன்ற பொதுவான தகவல்களைத் தாண்டிய புரிதல் அவர் காலத்துக்குப் பின் வந்தவர்களைப் பரவலாகச் சென்றடையவில்லை. அந்தக் குறையைப் போக்கும் முயற்சிகளில் ஒன்றாக ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றை நாடக வடிவில் எழுதியுள்ளார், கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள தி.வெ.ரா. என்னும் தி.வெ.இராசேந்திரன்.
ஜீவா குறித்து எழுதப்பட்ட 20 நூல்களை ஆழமாகப் படித்து உள்வாங்கி, இந்த நாடகத்தை அவர் எழுதியிருக்கிறார். உண்மையைக் கலைநயத்துடன் படைக்கும் நோக்கத்தில் சிறிது கற்பனையையும் கலந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். ஜீவாவின் முதல் திருமணம் உள்ளிட்ட சில நிகழ்வுகள் குறித்த தகவல்கள் தெளிவற்று இருப்பதையும் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஜீவாவின் 56 ஆண்டுகால வாழ்க்கையை 50 காட்சிகளில் இந்நாடகம் பதிவுசெய்கிறது. பதின்பருவத்தில் சொரிமுத்துவாக உள்ளூர் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியது தொடங்கி, ஜீவாவின் ஒப்பற்ற சமூகத் தொண்டுகளும் பன்முக ஆளுமையும் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. ஜீவா என்னும் தலைசிறந்த தலைவர் குறித்த மேம்பட்ட புரிதலைப் பெற இந்த நூல் உதவும்.
- கிருஷ்
ஜீவா: ஒரு பொதுவுடமைப் போராளியின் வாழ்வியல் வரலாறு
தி.வெ.ரா
வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49
விலை: ரூ.200
தொடர்புக்கு: 94440 47790