போர்களுக்கு எதிரானதே பொதுவுடைமை அரசியல்!
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துவரும் போரை விமர்சிப்பதில் இந்தியாவில் இயங்கிவரும் பொதுவுடைமை அமைப்புகளிடம் உள்ளார்ந்த தயக்கம் நிலவிவருகிறது. போர் ஓய வேண்டும் என்று உதட்டளவில் பேசினாலும் உள்ளத்தில் ரஷ்ய ஆதரவே நிறைந்திருக்கிறது. ஆனால், போர்களைக் குறித்துப் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் முன்னோடிகள் கொண்டிருந்த கருத்துகள், இன்றைய பொதுவுடைமை அமைப்புகளின் பார்வைக்கு மாறானது.
ரஷ்ய-உக்ரைன் போர் குறித்து இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவிலும் இடதுசாரிக் கட்சிகளும் அமைப்புகளும் சும்மா இருந்தாலும் மார்க்ஸிய அறிஞர்கள் சித்தாந்த முன்னோடிகளின் கருத்துகளை நினைவூட்டத் தொடங்கியுள்ளனர். அவ்வகையில், தொழிலாளர் இயக்க வரலாற்று வல்லுநரும் சமூகவியல் துறைப் பேராசிரியருமான மார்செல்லோ முஸ்ட்டோவின் ‘போரும் இடதுசாரிகளும்’ என்ற கட்டுரை முக்கியமானதொன்று. இக்கட்டுரையை இந்தியாவின் தலைசிறந்த மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவரான எஸ்.வி.ராஜதுரை உடனடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருப்பதும் அதை இடதுசாரிப் பதிப்பகமான என்சிபிஎச் வெளியிட்டிருப்பதும் குறிப்பிட்டத்தக்கது.
‘போர்களின் பின்னால் இருக்கும் நோக்கமே முதலாளித்துவத்தின் ஆதிக்கம் செலுத்தும் விருப்பம்தான்’ என்றார் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஸிஸேர் தே பேப். போரில் யார் வென்றாலும் தோற்றாலும் அதற்காக ரத்தம் சிந்த வேண்டியதும், அதன் பொருளாதாரப் பாதிப்புகளைத் தங்களது தோளில் சுமக்க வேண்டியதும் தொழிலாளர் வர்க்கம்தான் என்று சுட்டிக்காட்டியது 1868-ல் கூடிய அகிலத்தின் தீர்மானம்.
சமூகப் புரட்சிக்கான வழிமுறைகளில் ஒன்றாகப் போரை கார்ல் மார்க்ஸ் பரிந்துரைக்கவில்லை. தேசப்பற்று பாட்டாளி வர்க்கப் புரட்சியைத் தாமதப்படுத்தும் என்று எங்கெல்ஸ் எச்சரித்தார். லெனின், ரோஸா லக்ஸம்பெர்க் ஆகியோர் ஏகாதிபத்தியப் போரான முதலாம் உலகப் போரில் பாட்டாளி வர்க்கம் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தியவர்கள். திருத்தல்வாதி என்று விமர்சிக்கப்பட்ட கார்ல் காவுட்ஸ்கியும் கூட, சோஷலிஸப் புரட்சியைப் போர்கள் தாமதப்படுத்தும் என்ற கருத்தையே கொண்டிருந்தார்.
தாக்குதல் போருக்கும் தற்காப்புப் போருக்கும் இடையே எந்த வேறுபாடும் சாத்தியமில்லை என்றது 1915-ல் கூடிய ஆட்சி மறுப்பிய அகிலத்தின் அறிக்கை. போரை நிராகரித்தல் என்பது சர்வதேசப் பெண்கள் இயக்கத்தின் முக்கியமான பகுதியாகவே இருந்திருக்கிறது. இவ்வாறு பொதுவுடைமை இயக்கத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே போருக்கு எதிரான நிலைப்பாடு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்துள்ளது. மாவோ போன்ற ஒருசிலரே நியாயமான போரின் அவசியத்தை ஏற்றுக்கொண்ட விதிவிலக்குகளாக இருந்திருக்கிறார்கள்.
சோவியத் ஒன்றியத்தின்மீது ஹிட்லரின் நாஜிப் படைகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியதையடுத்து, போர் குறித்த ரஷ்யாவின் பார்வை மாறியது. கெடுபிடிப் போர்க் காலத்தில் அதுவே ஓர் ஏகாதிபத்திய அரசாகச் செயல்படத் தொடங்கியது அல்லது அதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சோவியத் ஒன்றியம் கலைந்த பிறகும், போர் குறித்த ரஷ்யாவின் மனோபாவத்தில் மாற்றமில்லை என்பதையே உக்ரைன்மீதான அதன் தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது. போர்களுக்கு எதிராக லெனின் முன்வைத்த கருத்துகளிலிருந்து இன்றைய ரஷ்யா விலகி வெகுதூரம் சென்றுவிட்டது. அதன் போர் நடவடிக்கைகளை விமர்சிக்க இடதுசாரிகளிடம் தயக்கம் நிலவிவரும் நிலையில் அதைக் களைந்து, இடதுசாரி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் போர்களுக்கு எதிரானதாகவே இருந்திருக்கிறது என்று வரலாற்றின் முக்கிய தருணங்களைத் தொகுத்து வழங்கி, ஒரு அறிவார்ந்த நினைவூட்டலைச் செய்திருக்கிறார் மார்செல்லோ முஸ்ட்டோ.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இக்கட்டுரையை வாசித்தவுடன் உடனடியாக அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் எஸ்.வி.ஆரின் அர்ப்பணிப்பு வியப்புக்குரியது. ‘சோஷலிஸ ஜனநாயகம்’ என்ற வார்த்தையின் வரலாற்றுப் பின்புலம் குறித்த விரிவான அடிக்குறிப்பு, வழக்கம்போலவே அவர் தனது மொழிபெயர்ப்புகளுக்கு எடுத்துக்கொள்ளும் அக்கறையையும் உழைப்பையும் வெளிப்படுத்துகிறது. ‘அனார்க்கிசம்’ என்ற வார்த்தையை அராஜகவாதம் என்று தமிழில் மொழிபெயர்ப்பது வழக்கமாக இருந்துவரும் நிலையில், அதன் எதிர்மறையான பொருளையும் கணக்கில் கொண்டு, ஆட்சிமறுப்பியம் என்ற புதிய கலைச்சொல்லாக்கத்தையும் இம்மொழிபெயர்ப்பில் அறிமுகப்படுத்தியுள்ளார் எஸ்.வி.ஆர். போர்களுக்கு எதிரான மார்க்ஸிய அறிஞர்களின் கருத்துகள் இடதுசாரி அமைப்புகளின் கனத்த மௌனத்தைக் கலைக்கட்டும்!
போரும் இடதுசாரிகளும்
மார்செல்லோ முஸ்ட்டோ தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை
என்சிபிஎச் வெளியீடு, சென்னை-50
விலை: ரூ.30, தொடர்புக்கு: 044 26359906
