

தமிழில் முழுமையான மருத்துவ நூல்கள் வெகு குறைவு. ஆங்கிலத்தில் ராபின் குக்கின் திரில்லர் நாவல்கள் எல்லாமே மருத்துவத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள். தமிழில் மொழிபெயர்ப்பாக வந்த தாராசங்கர் பந்தோபாத்யாயவின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ நாவல் முழுமையான மருத்துவ நாவல். அதன் பின் பல காலமானது, உமர் பாரூக்கின் ‘ஆதுரசாலை’ போன்ற முழுமையான மருத்துவ நாவல் தமிழில் எழுதப்படுவதற்கு.
மைலிஸ் தெ செரங்கால் வரலாறும் தத்துவமும் பயின்றவர். மருத்துவப் பின்னணி இல்லாதவர். மருத்துவமனை ஒன்றில், இதயமாற்று அறுவை சிகிச்சை ஒன்றை நேரடியாகப் பார்த்ததுடன், இது குறித்த பல விவரங்களை மருத்துவர்கள், தாதிகள் என்று பலரிடமும் சேகரித்திருக்கிறார். 24 மணி நேர நிகழ்வுகளைப் பற்றி விவரிக்கும் இந்த நாவல், பிரான்ஸில் அப்போது இருந்த இதய அறுவை சிகிச்சை முறைகள், சவால்கள், உணர்வுகள் முதலியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
மூன்று இளைஞர்கள் கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஆனந்தமடைவதுடன் களைப்பும் அடைகிறார்கள். ஒருவன் வண்டியை ஓட்ட மற்ற இருவரும் கிட்டத்தட்ட உறக்க நிலைக்குச் செல்கிறார்கள். வண்டி கம்பத்தில் மோதி, இருவர் எலும்பு முறிவுகளுடன் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்துக்கொள்ள, ஒருவனின் இதயம் மட்டும் துடித்துக்கொண்டே இருக்கிறது. அவன் பிழைக்கப்போவதில்லை, ஆனால் அந்த இதயம் பிழைக்கப்போகிறது. எப்படி என்பதே இந்த நாவல்.
இதயம் துடிப்பது நிற்பதே மரணம் என்ற நம்பிக்கை மருத்துவ உலகில் வெகுகாலம் இருந்தது. மூளை இறப்பதே மரணம் என்பது மருத்துவத்தில் நடந்த பெரிய கண்டுபிடிப்பு. பின்னால் நடந்த இதய மாற்று சிகிச்சைக்கெல்லாம் அந்தக் கண்டுபிடிப்பே தாய். இந்த நாவல் இதயமாற்று அறுவை சிகிச்சையின் வழிமுறைகளை ஒருபுறமும், அதில் சம்பந்தப்பட்ட எல்லோரது ஆழமான உணர்வுகளை மறுபுறமும் ஒருசேரச் சேர்த்துச் சொல்வதால், முக்கியமான இலக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது. பாதித் தூக்க மயக்கத்தில் இருக்கும் தாய்க்குத் தொலைபேசி மூலம் மகனின் இறப்பு சொல்லப்படுவதில் ஆரம்பித்து உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாவல் இது.
உடலுறுப்பு தானம் என்பது சம்பந்தப்பட்டவரே முடிவுசெய்திருந்தால் சிக்கலில்லை. நெருங்கிய உறவினர்கள், குறிப்பாகப் பெற்றோர், மனைவி போன்றோர் முடிவெடுப்பது என்பது மிகவும் கடினமான முடிவு. ஒருவகையில், அவர்களின் இதயமோ, கண்ணோ இல்லை வேறு உறுப்போ இன்னொரு உயிரை வாழ வைத்துக்கொண்டிருக்கும். இதயம் இன்னொரு உடலில் துடிக்கிறது என்ற நினைவே இறந்தவர் ஏதோ ஒரு விதத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற மகிழ்வை அளிக்கும்.
இன்னொரு வகையில் கோமா என்பது முடிவில்லையே, வருடக்கணக்காகக் கோமாவில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் இல்லையா, மருத்துவர் அவர்களுக்கு வேண்டிய ஒருவருக்கு அனுகூலம் செய்வதற்காக இனி பிழைக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்களா என்று பல சிந்தனைகள் வருவதையும் தவிர்க்க முடியாது. இங்கிலாந்தில் பழங்குடிகள் புதைத்த உடலின் விரலில் கயிறு கட்டி மறுமுனையில் மணியைக் கட்டி வைத்திருப்பார்களாம்.
ஒருவேளை உயிர் வந்து, கயிற்றை ஆட்டி, மணி ஒலித்தால்! இதயம் காதலின் குறியீடு. பழுதடைந்த இதயத்துக்குப் பயம், வலி இரண்டு மட்டும்தான் தெரியும். மருத்துவப் பின்னணி இல்லாத ஒருவர் இவ்வளவு தகவல்களுடன் இந்த நாவலை எழுதியிருப்பது ஆச்சரியம். அவருக்குள் இருக்கும் எழுத்தாளர் இதைக் கடைசிவரை விறுவிறுப்பாக நகரும் நூலாக்கிவிட்டார். மொழிபெயர்ப்பாளர்
எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இதை பிரஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கும் மருத்துவக் கலைச்சொற்களைத் தமிழ்ப்படுத்துவது மிகவும் சவாலான வேலையாக இருந்திருக்கும். எல்லாவற்றையும் தாண்டி இந்த நூல் அழகாக வந்திருக்கிறது. வாசகர்களுக்கு இதுவரை கிடைத்திராத ஒரு புதிய வாசிப்பனுபவத்தை வழங்கக்கூடிய நாவல்.
- சரவணன் மாணிக்கவாசகம், இலக்கிய விமர்சகர்.
தொடர்புக்கு: sarakavivar@gmail.com
இதயமே கொடையானால்
மைலிஸ் தெ கெரங்கால்
பிரெஞ்சிலிருந்து தமிழில்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: தடாகம், சென்னை – 41
விலை: ரூ.260
தொடர்புக்கு: 98400 70870