Last Updated : 30 Apr, 2022 08:00 AM

Published : 30 Apr 2022 08:00 AM
Last Updated : 30 Apr 2022 08:00 AM

நூல் வெளி - முத்துராசா குமார்: தமிழின் நீர்க் கவிஞன்!

முத்துராசா குமார் (1992) மதுரை சோழவந்தான் - தென்கரையைச் சேர்ந்தவர். மிகவும் உற்சாகமூட்டும் கவிஞர். இதுவரை ‘பிடிமண்’ (2019), ‘நீர்ச்சுழி’ (2020) ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் ‘ஈத்து’ (2021) என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். இந்த இரண்டு கவிதைத் தொகுப்புகளும் பெரும்பாலும் பால்யம் சார்ந்த கவிதைகளையும் நீருடனான வெவ்வேறு வகை உறவுகளையும் பற்றிய கவிதைகளைக் கொண்டிருக்கின்றன.

இயற்கைச் சூழல் பற்றிய கவிதைகள் பலவும் பறவைகள், மரங்கள், விலங்குகள் என்றெல்லாம் பெரும்பாலும் ‘அழகியல்’ உணர்வை மையப்படுத்தியவையாக இருக்கும். இவரது கவிதைகள் இயற்கையை இதற்கு அப்பாற்பட்ட கோணத்திலிருந்தும் பார்க்கின்றன. ஒரு கவிதையில், ‘கல்குவாரி மலையின்/ சிறுவயதுத் தோற்றம் கொண்ட/ சரளைக்கல்’ என்ற வரி (‘குவாரி’, பிடிமண்) சட்டென்று ஒரு மலையின் அழிப்பை உணர்த்திவிடுகிறது.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அது மலையாகக் குறிப்பிடப்படவில்லை, ‘கல்குவாரி மலை’யாகக் குறிப்பிடப்படுகிறது. எல்லாமே அவற்றின் வணிக, தொழில், நுகர்வுச் சாத்தியங்களோடு பார்க்கப்படுகின்றன. இப்படியே நாம் காட்டை ‘கனிமச் சுரங்கக் காடு’ என்றும், வயல்வெளிகளை ‘மீத்தேன் வயல்வெளிகள்’ என்றும் சுரண்டல் பார்வையில் விரித்துக்கொண்டே செல்லலாம். முத்துராசா குமாரின் சூழலியல் பார்வை உலகமயமானது அல்ல, அவருடைய மண்சார்ந்தது. ‘மும்மாத எடையுள்ள மழை’ (நீர்ச்சுழி) என்று தொடங்கும் கவிதை தற்போதைய காலநிலை மாற்றச் சூழலில் மிக முக்கியமான ஒன்று. பெருமழையில் இரு மகள்களையும் இழந்து ‘காலநிலை ஏதிலி’யான கவிதைசொல்லிக்கு அரசாங்கம் சுவாச சிலிண்டருக்குள் அடைக்கலம் தரப்படுகிறது.

மகள்கள் உயிருடன் இருந்தபோது அவர்களுக்கு சன்னல்கள்தான் பிடிக்கும் என்று சிலிண்டர் சுவரில் சன்னல் வரைய அதன் வழியே தேவதைகளுடன் வந்த மகள்கள் உள்ளே நுழைந்து ‘சேதமுற்ற கடிகாரம் போலிருந்த/ என்னை ஈர நப்படிக்க/ முத்தமிட்டனர்’ என்று முடிக்கிறான் கதைசொல்லி. ‘சேதமுற்ற கடிகாரம்’ என்ற பிரயோகம், கவிதைசொல்லியிலிருந்து ஒட்டுமொத்த புவிக்கோளையும் குறிப்பதாக விரியும்போது நடுங்கவைக்கும் ஒரு டிஸ்டோப்பியக் கனவை இந்தக் கவிதை தருகிறது.

தமிழின் நீர்க் கவிஞர் என்றே முத்துராசா குமாரைச் சொல்லிவிடலாம். நீரை மழை, கடல் என்று வழக்கமாகக் கற்பனாவாத நோக்கில் அணுகாமல் கண்மாய், ஆறு தொடங்கி வாய்க்கால், மடை என்று அவர் நீர் செல்வதற்கான வழியை வெட்டிக்கொண்டே போகும்போது, அது தாயின் பனிக்குடத்தில் போய் முடிகிறது. ‘கொடியறுக்காத பூம்பிஞ்சாக/ பனிக்குடத்துக்குள் நானிருக்கையில்/ பால்சோறு பிசையும் / கிண்ணத்தின் அளவே கம்மா’ (நீர்ச்சுழி) என்கிறது தாயின் வயிற்றில் இருக்கும் சிசு. பிடித்த நேரத்தில் அம்மாவின் வயிற்றுக்குள்ளிருந்து வெளியில் வந்து குழம்பு முருங்கைக்காய்களைக் கொண்டு ‘கம்மா’வில் சவாரி செய்து விளையாடுகிறது சிசு. ‘நீர்ச்சுழி’ தொகுப்பில் கணிசமான பகுதியை ‘கம்மா - மடைகள் - வாமடை’ கவிதைகள் எடுத்துக்கொள்கின்றன.

நீருக்காக மூன்றாம் உலகப் போர் நடக்கலாம் என்று பேரியல் (Macro) அளவில் நாம் பேசிக்கொண்டிருக்க... உள்ளூரிலேயே நீரை முன்னிட்டு நடக்கும் சாதி-வர்க்க அரசியல், பழிவாங்குதல்கள், வறட்சி, நீர் சார்ந்த தொன்மம்-வழிபாடு என்று நுண்ணியல் (Micro) அளவில் ஆழமாகவும் கவித்துவமாகவும் பேசுகின்றன இந்தக் கவிதைகள். ஒருபக்கம் கம்மாயில் நடந்த படுகொலை ரத்தம், அறுக்கப்பட்ட சினை எருமையின் ரத்தம் போன்றவை கலந்த, நடுங்க வைக்கும் நீர்; இன்னொரு பக்கம் காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தேங்கி, ‘படகினுள் மிதக்கும் சமுத்திரமாக’த் தெரிந்து ‘தளும்பும் சமுத்திரக் குட்டியென்று/ எனது கையின் பதினோராவது/ பொடிவிரல் வியப்பானது’ என்று சொல்ல வைக்கும், அழகுணர்வைத் தூண்டும் நீர். இப்படியாக, நீர் அதன் அத்தனை அழகுகள், தொன்மங்கள், நினைவுகளுடன் முத்துராசா குமார் கவிதைகளில் சன்னதம் ஆடியிருக்கிறது. அவர் செய்ததெல்லாம் வாமடையின் முன் மம்பட்டியாக நின்று வெட்டியதே. மற்றதையெல்லாம் நீர் பார்த்துக்கொண்டுவிட்டது.

முத்துராசா குமாரின் பால்யம் தொல் நினைவுகளுடைய ஊற்றின் கண்ணாக இருக்கிறது. கொஞ்சம் பிசகியிருந்தாலும் பழைமையை நோக்கித் திரும்பிச் செல்வதற்கான ஏக்கங்களாக இந்தக் கவிதைகள் மாறியிருக்கும். ஆனால், உழைப்புக்கும் நுகர்வுக்கும் இடையே, மண்ணுக்கும் நமக்கும் இடையே, நீருக்கும் நமக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் விரிசலானது உள்ளூரில் குளம் வறண்டு வாய்க்கால்கள் காணாமல்போவதிலிருந்து அண்டார்க்டிகாவில் பனிப் பிரதேசங்கள் உருகுவது வரை எல்லாவற்றுக்கும் காரணமாகியிருப்பதால் அந்தப் புள்ளியை உள்ளூரின், பால்யத்தின் குரலாகப் பேசுகின்றன முத்துராசா குமாரின் கவிதைகள். இந்தப் பால்யத்தை ஒரு சிறுவனாக மட்டுமல்ல ‘காத்துக்கும் பறக்காது/ தரைக்கும் ஒடையாது/ கீழ விழும் புழுக்கைகள்./ எந்த உச்சிக்கும்/ என் கொடி ஆடு ஏறி நிக்கும். பார்க்கலாமா?’ என்று யானைமலையிடம் சவடாலடிக்கும் கீதாரித் தாத்தாவாகவும் முத்துராசா குமார் வெளிப்படுத்துகிறார். ‘எழும்ப முடியாமல்/ கீதாரி முன்/ கிழட்டுத் தண்டாலாகக் கிடக்கிறது மலை’ என்று கவிதை முடிகிறது. அந்தக் கீதாரி முன் மலையென்ன வானம், கடல் எல்லாம் கிழட்டுத் தண்டாலாகத்தான் கிடக்க வேண்டும்.

பன்றி வேட்டை பற்றிய ‘கட்டைக்கால் வேட்டை’ (நீர்ச்சுழி) என்ற கவிதை இவர் கவிதைகளில் அற்புதமானது என்று சொல்லலாம். இந்தக் கவிதையை அழகாக்குவது அதன் ‘கேமரா’ கோணங்கள்தான். இதற்கு முத்துராசா குமாரின் திரைப்படப் பின்னணிகூட உதவியிருக்கலாம். வெங்காய வெடி, வேல்கம்புக்கெல்லாம் அசராமல் ‘முடி முளைத்த ராத்திரியென ஓடும்/ தடிபன்றி’ திரும்பி, வேட்டையாடியை மல்லாத்திவிட்டுத் தன் குட்டிகளை நோக்கிப் பாயும்போது ‘விழுகையில் உறைந்த/ மழைத்துளிகளைப் போன்ற அதன் மார்க்காம்புகள்/ கண்களருகே’ தெரிய ‘பன்றிக்குட்டிகளின் அனாதைக் குறுவால்கள்/ கனவுகளையாட்டித் தூங்கவிடாதென்பதால்’ கண்ணுக்கு அருகே வந்துவிட்ட பன்றியின் அடிவயிற்றைக் கிழிக்காமல் விட்டுவிடுகிறான் வேட்டையாடி. உக்கிரமும் விறுவிறுப்பும் கனிவும் கொண்டதொரு நாடகம் 22 வரிகளுக்குள் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது.

ஒரு கவிதையில் ‘ராத்திரி நேரத்துப் பூஜை’ பாடலுக்கு சங்கிலிக்கருப்புசாமி முரட்டு விசில் அடிக்கிறார் (‘டிஸ்கோ’, பிடிமண்). இங்கே இது கலாச்சாரச் சீரழிவாகப் பார்க்கப்படவில்லை. ‘அந்தக் காலம் போச்சே’ என்ற புலம்பலும் இல்லை. டிஸ்கோவுடன் கருப்புசாமியும் கலந்துகொள்கிறார். கொண்டாட்டத்துக்குத்தானே சாமி, எல்லாவற்றையும் விலக்கிவைப்பதற்கா? நாட்டார் தெய்வங்களின் நெகிழ்வுத்தன்மை இது. அப்படித்தான் ‘நின்னை சில வரங்கள் கேட்பேன்’ என்று பாரதி காளியிடம் மிடுக்காகக் கேட்டால், ஏகாதிபத்திய ராசா-ராணி வகையறாக்களின் கொடுஞ்சாட்டையடிகளுக்கு எதிராக ‘...இவற்றைப் படையலிட்டு/ இனியெவர் கைகளுக்கும்/ அச்சாட்டைகள் போகாது முடமாக்கி/ நல்செய்வினை பண்ணிடு தாயே’ என்று முத்துராசா குமாரின் கவிதைசொல்லி மைக்காரியிடம் தீராத நடுக்கத்துடன் சொல்கிறான்.

மண்ணின் வாழ்க்கை சார்ந்த சொல்வளம், உள்ளூர்ப் பண்பாட்டு அனுபவங்கள் என்று வளமிக்க கவிதைகளை இந்தத் தொகுப்புகள் கொண்டிருக்கின்றன. முத்துராசா குமார் சந்தேகத்துக்கு இடமில்லாமல் அற்புதமான கவிஞன்!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

பிடிமண், விலை: ரூ.125

நீர்ச்சுழி, விலை: ரூ.150

இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டவர்கள்:

சால்ட் & தன்னறம்,

தொடர்புக்கு: 8939409893, 9094005600

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x