

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சுப் படைப்புகளில் சிறந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ‘ரொமெய்ன் ரோலந்த்’ பரிசை இந்தியாவில் அமைந்துள்ள பிரெஞ்சுத் தூதரகம் வழங்குகிறது. தஹர் பென் ஜெலூன் எழுதிய ‘லி மேரேஜ் டி பிளேஸிர்’ என்னும் நாவலை ‘உல்லாசத் திருமணம்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்ததற்காகப் பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகருக்கு 2021-ம் ஆண்டுக்கான ‘ரொமெய்ன் ரோலந்த்’ பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
வெங்கட சுப்புராய நாயகர் புதுச்சேரியில் உள்ள காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு ஆய்வு மையத்தில் பிரெஞ்சுத் துறை தலைவராவார். இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைச் சிறப்பிக்கும் விதமாக 2022 பாரிஸ் உலகப் புத்தகத் திருவிழாவில், இந்தியா சிறப்பு விருந்தினர் நாடாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 கலை, இலக்கிய ஆளுமைகள் ஏப்ரல் 21 அன்று பாரிஸில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றனர். இவர்களில் வெங்கட சுப்புராய நாயகர், ‘உல்லாசத் திருமணம்’ நூலை வெளியிட்ட தடாகம் பதிப்பகத்தின் அமுதரசன் பொன்ராஜ், எழுத்தாளர் பெருமாள்முருகன், காலச்சுவடு கண்ணன் ஆகிய நால்வர் தமிழர்கள். வெங்கட சுப்பராய நாயகர் குறுந்தொகையை முழுமையாக பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளியில் புத்தக தினக் கொண்டாட்டம்
கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் ‘உலகப் புத்தக தின’த்தைக் கடந்த வாரம் கொண்டாடிய விதம், மற்ற பள்ளிகளுக்கெல்லாம் முன்னுதாரணமாகியிருக்கிறது. இந்த நிகழ்வில், மாணவர்கள் தாங்கள் படித்த இலக்கிய நூல்களைப் பற்றியும் ஏன் வாசிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள். புத்தகக் காணொளிகள், கதை சொல்லுதல், கவிதை வாசித்தல், ஓவியக் கண்காட்சி, அரிய நூல்கள் காட்சி, நூல்கொடை என்று நிகழ்வு களைகட்டியது. இந்நிகழ்வில் சிறார் செயல்பாட்டாளர் இனியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ராஜ் கௌதமனுக்கு ‘வானம்’ இலக்கிய விருது
நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு ‘வானம் கலைத் திருவிழா’ என்னும் பெயரில் கலை இலக்கிய நிகழ்வுகளை நடத்திவருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று (வெள்ளிக்கிழமை) மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தொடங்கியிருக்கிறது. இந்த விழா இன்று (சனிக்கிழமை) நிறைவடைகிறது. இந்த இலக்கியக் கூடுகை ‘வேர்ச்சொல்’ எனும் தலைப்பில் நடைபெறுகிறது.
தலித் கலை, இலக்கியம், வரலாறு, விமர்சனம், ஆய்வுகள் தொடர்பாகப் பல்வேறு அமர்வுகள் இந்த விழாவில் இடம்பெறுகின்றன. நூல் வெளியீடு, ஆவணப்பட வெளியீடு, திறனாய்வு, புகைப்படம் - ஆவணக் கண்காட்சி, புத்தகக்காட்சி போன்றவையும் இந்நிகழ்வில் இடம்பெறுகின்றன. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக ஆய்வாளரும் புனைவெழுத்தாளருமான ராஜ் கௌதமனுக்கு 2022-ம் ஆண்டுக்கான ‘வானம் இலக்கிய விருது’ வழங்கப்படுகிறது. விருதுபெறும் ராஜ் கௌதமனுக்கு வாழ்த்துகள்!
புத்தகக்காட்சி
தூத்துக்குடி புத்தகக்காட்சி: மதுரை மீனாட்சி புத்தக நிலையம் நடத்தும் புத்தகக்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடியில் தொடங்கியது. இந்தப் புத்தகக்காட்சி 13.05.22 வரை நடைபெறுகிறது. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: ராமையா மஹால், பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி. நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9443262763.