23.04.22 உலகப் புத்தக நாள் | நூல் வெளி: உலகெங்கும் விரியும் தமிழ்

23.04.22 உலகப் புத்தக நாள் | நூல் வெளி: உலகெங்கும் விரியும் தமிழ்
Updated on
3 min read

இணையத்தின் வருகையால் தமிழ் இலக்கியம் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வாசிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் இலக்கியம், பன்முகத்தன்மை கொண்டது. தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பர்மா, ஹாங்காங், வியட்நாம், ஆப்பிரிக்கா, மொரீஷியஸ், பிரான்ஸ் என சர்வதேச அளவில் வாழும் தமிழர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

நோபல் பரிசு, புக்கர் விருது, டப்ளின் விருது எனப் புகழ்பெற்ற விருதுகளின் பட்டியலில் ஏன் தமிழ்ப் படைப்புகள் எதுவும் இடம்பெறுவதில்லை. முதற்காரணம், நாம் இன்றும் நமக்குள்ளாகவே பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். சர்வதேச அளவில் அதைக் கொண்டுசெல்ல பெரிய முயற்சிகள் எடுக்கவில்லை. இன்றுவரை ஒரு தமிழ் நாவல்கூட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 23 ஆட்சி மொழிகள் யாவிலும் வெளியானதில்லை. ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிறமொழிப் படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. ஆனால், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கோ பிற மொழிகளுக்கோ செல்லும் படைப்புகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

சீன, ஜப்பானிய இலக்கியங்கள் இன்று பெற்றுள்ள அங்கீகாரத்துக்கு முக்கியக் காரணம் அரசு, கல்வி நிறுவனங்கள், தனிப்பட்ட ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரின் தொடர் செயல்பாடுகள்தான். அத்தகைய பணியை நாமும் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, அயல்நாடுகளில் செயல்பட்டுவரும் தமிழ்ச் சங்கங்கள். இலக்கிய அமைப்புகள் இதனைத் தமது முதற்கடமையாகச் செய்ய வேண்டும்.

இணையத்திலும் இதழ்களிலும் வெளியாகும் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவருபவன் என்ற முறையில், தமிழ் புனைகதையை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்லும் இளம் படைப்பாளிகள் சிலரை அறிவேன். இவர்களில் திருச்செந்தாழை, செந்தில் ஜெகன்நாதன், நரன், சுனில் கிருஷ்ணன், சுஷில்குமார், போகன் சங்கர், மயிலன் ஜி. சின்னப்பன், கமலதேவி, கலைச்செல்வி, ஐ.கிருத்திகா, சுரேஷ் பிரதீப், தூயன், கே.ஜே.அசோக்குமார், காளி பிரசாத், அகரமுதல்வன், கார்த்திக் பாலசுப்ரமணியன், முத்துராசா குமார் ஆகியோர் முக்கியமானவர்கள்.

மரபாகத் தமிழ்ச் சிறுகதைகள் பேசிய விஷயங்களிலிருந்து விடுபட்டுப் புதிய கருப்பொருளுடன், புதிய வடிவத்துடன், புதிய கதைமொழியை இவர்கள் முன்னெடுக்கிறார்கள். உலகமயமாக்கலின் விளைவாகவும் நுகர்வுப் பண்பாட்டின் காரணமாகவும் இன்றைய வாழ்க்கை சிதறடிக்கப்பட்டிருக்கிறது. பண்பாட்டுத் தொடர்ச்சி அறுபட்டு, மிதக்கும் உலகில் சஞ்சரிப்பதுபோல நம் வாழ்க்கை ஊசலாடுகிறது. எந்த நம்பிக்கைகள், விழுமியங்கள் இதுவரை வாழ்க்கையைக் காப்பாற்றிவந்தனவோ அவை பறிபோய்விட்டிருக்கின்றன. ஆண்-பெண் உறவு, பணியிட நெருக்கடிகள், குடும்ப அமைப்பின் வன்முறை, பாலியல் தேர்வு, புகலிட வாழ்வு, குற்றவுலகம் எனக் கிளை விடும் இன்றைய வாழ்வின் திரிபை இன்றைய புனைகதைகள் பேசுகின்றன.

தமிழகத்துக்கு வெளியிலிருந்து தமிழ் இலக்கியத்துக்குத் தொடர்ந்து பங்களித்துவரும் எழுத்தாளர்களில் ஆறு பேரைச் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன். சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ், இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரின் சமகால வாழ்க்கை, கடந்த கால வரலாறு, மறைந்துபோன நினைவுகள். சட்டவிரோதக் குடியேற்றம் எனப் பல்வேறு ஊடு இழைகளைக் கொண்டு சிறப்பான கதைகளை எழுதிவருகிறார்.

ரா.செந்தில்குமார் ஜப்பானில் வசிக்கிறார். இவரது ‘இசூமியின் நறுமணம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்தத் தொகுப்பில் எட்டுக் கதைகள் ஜப்பானிய வாழ்க்கையைப் பேசுகின்றன. அதன் வழி நாம் அறியாத ஜப்பானியப் பண்பாடு, நகரச் சூழல் மற்றும் சமகால நிகழ்வுகள் அழகாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

கனகராஜ் பாலசுப்பிரமணியம் கன்னடத்திலும் தமிழிலும் எழுதிவருகிறார். தற்போது சவுதி அரேபியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது ‘வாட்டர் மெலன்’ சிறுகதைத் தொகுப்பு முக்கியமானது. இவரது கதைகள் தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் கடந்த கால வாழ்க்கையைப் பேசுகின்றன. இவரது சமீபத்திய நாவலான ‘அல்கொஸாமா’ அரபு தேசத்தில் வசிக்கும் பதூவீக்களின் வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறது.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் ம.நவீன். இவரது சிறுகதைகளும் நாவல்களும் மலேசியத் தமிழர்களின் இன்றைய வாழ்க்கைச் சூழலைச் சித்தரிக்கின்றன. இவரது ‘சிகண்டி’ நாவல் திருநங்கைகளின் வாழ்க்கையை அசலாகப் பதிவுசெய்திருக்கிறது. குறிப்பாக, சமூகத்தில் அவர்களின் நிலை, அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், பெருநகரத்தின் இருண்ட வாழ்வு என இந்த நாவல் நுட்பமாக எழுதப்பட்டிருக்கிறது.

எழுத்தாளர் ஹஸீன் கிழக்கு இலங்கையின் அக்கரைப்பத்தில் வசிப்பவர். ‘சிறியதும் பெரியதுமாக எட்டுக் கதைகள்’, ‘பூனை அனைத்தும் உண்ணும்’ என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மிகக் குறைவாக எழுதுபவர். ‘நான் போரின் குழந்தை’ எனும் ஹஸீன் அபூர்வமான வாசிப்பனுபவத்தைத் தரும் சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் நம்பி கிருஷ்ணன், சொல்வனம் இணைய இதழில் தொடர்ந்து எழுதிவருகிறார். ‘பாண்டியாட்டம்’ என்ற கட்டுரைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். ரொபெர்த்தோ கலாஸோ பற்றிய இவரது சமீபத்திய தொடர் கட்டுரை நிகரற்றது. உலக இலக்கியம் குறித்த இவரது பல்வேறு கட்டுரைகள் மிகச் சிறப்பானவை. ஆழ்ந்த வாசிப்பும் செறிவான புரிதலும், நேர்த்தியான எழுத்து முறையும் சிறந்த மொழியாக்கமும் கொண்ட இவரது பங்களிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது.

“உலகில் அன்பு குறையும்போது, அதைத் தருவதற்காகப் புத்தகங்கள் எப்போதும் காத்துக்கொண்டிருக்கின்றன” என்கிறார் உம்பர்த்தோ ஈகோ. புத்தக வாசிப்பு என்பது அன்பைப் புரிந்துகொள்வதும் பகிர்வதுமேயாகும்.

- எஸ்.ராமகிருஷ்ணன், ‘மண்டியிடுங்கள் தந்தையே’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writerramki@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in