ஆசிரியர்கள் ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும்?

ஆசிரியர்கள் ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும்?
Updated on
2 min read

தமிழகத்தை அறிவார்ந்த சமூகமாக உயர்த்தும் பொருட்டு மாநிலம் முழுவதும் இலக்கியத் திருவிழாக்கள் மற்றும் புத்தகக் காட்சிகள் நடத்திடவும், புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாகக் கொண்டுசெல்லவும், தமிழ்நாடு முதல்வர் 2022-2023 நிதிநிலை அறிக்கையில், ஆண்டுக்கு ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார். பாராட்டுக்குரிய முன்னெடுப்பு இது.

பள்ளிகள்தான் பாடநூல் தாண்டிய வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் முக்கிய இடம். தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வாசிப்புக்கான வாய்ப்புகள் சற்றே அதிகமாக இருக்கின்றன. வருடந்தோறும் நூலகத்துக்குப் புத்தகங்களாகவோ அல்லது புத்தகங்கள் வாங்க நிதியாகவோ எல்லாப் பள்ளிகளுக்கும் அரசு வழங்கிவருகிறது. ஏறத்தாழ 15 வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் இந்தச் செயல்பாடு நடந்துவருகிறது. நூலக வாசிப்புக்கு என வாரத்தில் ஒரு பாட வேளையையும் பள்ளிகள் ஒதுக்கியுள்ளன. இவற்றையெல்லாம் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், தற்போது வெளிவரும் கல்வித் துறை சார்ந்த சில குற்றச்சாட்டுகளுக்கு இடமே இருந்திருக்காது.

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் பள்ளி நூலகங்கள் செயலற்று, வெறும் பதிவேடுகளில் மட்டும் மாணவர்கள் படிப்பதாகக் கணக்குக் காட்டும் நடைமுறை பல காலமாக இருந்துவருகிறது. மாணவர்கள் வாசிப்பதற்கும் வழிவகை செய்வதில்லை, ஆசிரியர்களும் பெரும்பாலும் வாசிப்பதில்லை. ஆசிரியர்கள் மட்டுமல்ல, தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், அடிமட்டத்திலிருந்து உயர்நிலை வரை கல்வித் துறையில் பணியாற்றுபவர்கள் என அத்தனை லட்சம் பேரில் சில நூறு வாசிப்பாளர்களையாவது அடையாளம் காண்பது அரிது.

கல்வி அலுவலர்கள் நல்ல நூல்களை வாசித்தால்தான் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் ஆசிரியர்களையும் பார்த்து, அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குங்கள் என்று கூற முடியும். ஆனால், இங்கு அதிகாரங்களே தலைதூக்கியிருப்பதாலும் எந்தப் புத்தகமும் அவர்களைச் செம்மையாக்காததாலும் உரையாடலே இல்லாமல் ஆணைகளாக மாறி பள்ளிக்குள்ளும் அதே முறைகள் பின்பற்றப்படுகின்றன. இவர்களில் விதிவிலக்குகள் குறித்து நாம் பாராட்டவே செய்கிறோம்.

உற்சாகம், தன்னம்பிக்கை கொண்ட மகிழ்ச்சியான குழந்தைகளாகவும் அறிவுசார் திறன் பெற்றவர்களாகவும் முழுமையான ஆளுமை கொண்ட மனிதர்களாகவும் மாணவர்களை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் கொண்ட இடத்தில் தாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, அதற்காகத் தங்களை வளப்படுத்திக்கொள்வதற்கு வாசிப்புப் பழக்கத்தை ஆசிரியர்கள் கைக்கொள்வதுதானே அறம்.

அது ஏன் பள்ளிகளுக்குள் நிகழ மறுக்கிறது என்ற கேள்வியை நாம் முன்வைக்கிறோம். தற்போதைய தமிழ்ச் சூழலில் குழந்தைகளுக்கான படைப்புகளைச் சிறார் மாத இதழாக, நாவலாக, சிறுகதைகளாக, மொழிபெயர்ப்புப் புத்தகங்களாக எனப் பல வடிவமைப்புகளில் ஏராளமான எழுத்தாளர்கள் உருவாக்கிவருகின்றனர். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தற்சமயம் சிறார் படைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. ஒருபடி மேலே போய் சிறுவர்களே எழுத்தாளர்களாக வளர்ந்துவரும் மாற்றங்களும் இந்நாட்களில் நடைபெற்றுவருகின்றன.

ஒருபுறம் அரசுப் பள்ளிகளில், மாணவர்களை வாசிக்க வைப்பதற்காகப் புரவலர்கள் வழியே கதைப் புத்தகங்களைப் பெற்று வாசிப்பைப் பரவலாக்கும் ஆசிரியர்கள், குழந்தைகளைக் கதைசொல்லிகளாக, எழுத்தாளர்களாக உருவாக்க முயற்சி மேற்கொண்டுவரும் ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோருக்குக்கூட பள்ளியில் நூலகம் அமைத்துச் செயல்படுத்தும் தலைமை ஆசிரியர்கள் என பிரமிக்க வைக்கின்றனர். இவர்களை அரசுப் பள்ளிகளின் வரமாகப் பார்க்கலாம். ஆனால், இவர்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கின்றனர்.

அதே அரசுப் பள்ளிகளின் மற்றொரு புறம், மாணவப் படைப்பாளிகளைக் கொண்டாடக்கூடத் தெரியாத பள்ளித் தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் காணப்படுகிறார்கள். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க, புத்தகக்காட்சிக்குப் பள்ளிக் குழந்தைகளை ஒரு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றதன் நீட்சியாக, அந்தக் குழந்தைகளின் வாசிப்பு குறித்து செய்தித்தாளில் வெளிவந்த செய்திக் கட்டுரைக்காக, அதற்காக முயற்சி மேற்கொண்ட ஆசிரியருக்கு மெமோ தருவேன் என எச்சரிக்கும், வாசிப்புப் பழக்கத்தை மாணவர்களுக்குக் கொண்டுசெல்லக் கூடாது, பாடங்களை மட்டும் நடத்துங்கள் என்று கூறும் தலைமை ஆசிரியர்களை என்னவென்று சொல்வது.

திருப்பத்தூர் மாவட்டப் புத்தகத் திருவிழாவுக்கு அனைத்துப் பள்ளிகளும் மாணவர்களை அழைத்துச்செல்ல முதன்மைக் கல்வி அலுவலர் ஆணை பிறப்பித்ததுபோல அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் புத்தகக்காட்சிகளுக்கு அந்தந்த மாவட்ட அரசுப் பள்ளிக் குழந்தைகளைக் கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொண்டால், குழந்தைகளின் உலகம் விரிவடையும். புத்தகங்களைப் பார்த்து, தொட்டு, பரவசம் அடைந்து, அவற்றின் மீது ஈர்ப்பு வர வாய்ப்புகள் அளிப்பது முக்கியம். அத்துடன், எந்த ஆசிரியர் சமகால எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் தமது வகுப்பறையில் அறிமுகப்படுத்துகிறாரோ அந்த ஆசிரியருடைய மாணவர்களின் படைப்பாற்றல் திறனும் அறிவுசார் திறனும் சிறப்பாக அமையும். ஆனால், இங்கு 90% வகுப்பறைகள் பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களைப் படித்து, அதிலுள்ள வினா - விடைகளுக்குத் தயாராவது என சுருங்கிப்போன மனங்களும் இறுகிப்போன வகுப்பறைகளுமாகவே காணப்படுகின்றன.

ஆசிரியர்களுக்குத் தொழில்நுட்பம் சார்ந்து பயிற்சிகளை வழங்கும் கல்வித் துறை தீவிரமான வாசிப்பாளர்களாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்து மாற்றினால் சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். மாணவர்களின் மதிப்பீட்டு முறையில் புத்தக வாசிப்புக்கும் மதிப்பெண் வழங்கும் முறையைப் பின்பற்றலாம். மாணவர்களுக்கு வாசிப்பு குறித்துப் பரந்துபட்ட அனுபவத்தைக் கொண்டுசேர்க்கும் பொறுப்பு கல்வித் துறைக்கும் பெற்றோருக்கும் உண்டு. கூடுதலாக ஆசிரியர்களும், வட்டார-மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், பேராசிரியர்கள் ஆகியோரும் வாசிப்பதை வழக்கமாக்கிக்கொண்டால், வகுப்பறைகளும் பள்ளிகளும் மறுமலர்ச்சி பெறும். இதனால் அறிவார்ந்த சமூகம் நிச்சயமாக உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

- சு.உமாமகேஸ்வரி, ஆசிரியர், கல்வியாளர்.

தொடர்புக்கு: uma2015scert@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in