Last Updated : 12 Apr, 2016 09:56 AM

 

Published : 12 Apr 2016 09:56 AM
Last Updated : 12 Apr 2016 09:56 AM

கதாநதி 13: கோபிகிருஷ்ணன்- மனதின் புதிர் மொழி

சமூகம் தன்னை எவ்வாறு காண வேண்டும்? அறிய வேண்டும் என்று திட்டமிட்டு ஜோடனைகளை அதற்கேற்ப புனைந்துகொண்டு தன் னைக் காண்பித்துக்கொள்ளும் மனிதர்கள் பற்றிக் கவலைப்படாமல், அவர்களை உள்ளிருந்து ஊக்கும் ‘மனத் தூண்டிகளை' எழுதுவதற்குத் தமிழில் ஒருவர் வந்தார். அவர் பெயர் கோபிகிருஷ்ணன். மனித மனச் சிதைவுகளை அவர் கதை களாக ஆவணப்படுத்தினார். இம் முயற்சியின் மூலமாகத் தமிழ்ப் படைப்புலகில் புதிய நிலவெளியை உருவாக்கியதோடு, புதிய அம்சம் ஒன்றையும் கோபிகிருஷ்ணன் சாத்தியப்படுத்தினார். மனித நடத்தை களை உள்ளிருந்து இயக்கும் கிரியா ஊக்கிகளைச் சொல்லியதன் மூலம் தமிழில் புதிய வெளிச்சத்தைத் தன் படைப்புகளில் பாய வைத்தார்.

1983-ம் ஆண்டு எழுதத் தொடங் கிய கோபிகிருஷ்ணன், 2003-ல் அவர் மறையும் வரை எழுதிக்கொண் டிருந்தார். சுமார் 90 கதைகள், 4 குறுநாவல்கள், பல கட்டுரைகள்.

உதாரணமாக அவருடைய ஒரு கதையை வாசிப்போம்.

ராமன் அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். மிதமான நெரிசல்தான். பின்பக்க பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் இருந்தார்கள். ஒரு நபர் உட்கார இடம் இருந்தது. அதில் அமர்ந்து கொண்டான் ராமன். ஒரு ஸ்டாப்பில் தன் தோழனுடன் சொல்லிக்கொண்டு ஓடிவந்து பேருந்தில் நுழைந்தாள் அந்தப் பெண். வயது இருபதுக்கு மேல் இருக்காது. பூப்போட்ட தொளதொள வெள்ளைப் பனியன். பருத்தித் துணியால் ஆன வெள்ளை முழுக்கால் சட்டை. நின்றுகொண்டிருந்தாள். அவள் ஒரு கருப்பினப் பெண். அலை அலையான முடியைக் கிராப் செய்துகொண்டிருந்தாள். மலிவான பெரிய காதணிகள். எடுப்பான தோற்றம். சற்றே உயரம்.

ராமன் எழுந்து இடம் தரலாம் என்று நினைத்தான். இவன் எழுந்தால் பக்கத்தில் இருக்கும் நபரும் எழ நேரிடும். சில விநாடிகள் சென்றன. வலது பக்க ஆண்கள் இருக்கை யில் நாலு இளைஞர்கள். ஒருவன் மொட்டைத் தலையில் ரங்கீலா தொப்பி அணிந்திருந்தான். அவன் பெண்ணைப் பார்த்துப் பகிரங்கமாகப் பல்லை இளித்தான். காமப் பார்வை. தனது சகாக்களுடன் அவளைக் கொச்சையாக வர்ணித்துக்கொண் டிருந்தான். குறிப்பாக அவள் வளைவுகளை.

அந்தப் பெண் என்ன செய்வதென்று அறியாமல் நின்றிருந்தாள். (ஒன்றும் செய்ய முடியாது. காலித்தனம், காற்று மாதிரி பரவி, சமூக மனசாட்சியை முடக்கிவிட்டது) அவள் முகத்தில் கோபமும் அருவருப்பும் இருந்தன. எந்த உணர்வையும் தெளிவாகக் காட்டும் முகம்.

ராமனால் தாங்க முடியவில்லை. பக்கத்தில் இருப்பவரிடம், ‘‘நாம் எழுந்து அப்பெண்ணுக்கு இடம் அளிப்போம்” என்றான். அந்த ஆள் வேண்டா வெறுப்பாகச் சரியென்று ஒப்புக்கொண்டார். ‘‘பெண்ணே உட்கார்'' என்றான் ராமன். ‘‘நன்றி சிநேகிதரே...'' என்றாள் அவள்.

சிநேகிதர் என்ற அந்த அந்நியோன்ய வார்த்தை அவன் நண்பர் பதியை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது. அவன் அவளிடம் ‘‘பெண்ணே எங்கே இறங்கப் போகிறாய்?'' என்று கேட்டான். திருநின்றவூர் என்றாள் அவள்.

அந்த நான்கு பையன்களும் அவள் மேல் கமென்ட்ஸ் அடித்தார்கள். நேருக்கு நேராகப் பார்த்து, ‘‘மச்சி... என்னதான் சொல்லு, நம்ம புடவை மாதிரி வராது'' என்றான் ஒருவன்.

ராமன் இறங்க வேண்டிய இடம் லூகாஸ். அந்த இடத்திலிருந்து திருநின்றவூருக்கு ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டான் ராமன். அவன் வயது அம்பது. இப்போதெல்லாம் இளம்பெண்களைப் பார்க்கும்போது ஒரு தந்தையின் பாசம் மனதில் எழுவதை அவன் இனம் கண்டு கொண்டிருந்தான். பட்டாபிராம் நிறுத் தத்தில், காமப் பார்வையை வீசிவிட்டு இறங்கிச் சென்றார்கள் அந்த இளைஞர்கள். ராமனுக்கு நிம்மதியாக இருந்தது. அந்தப் பெண்ணும் நிம்மதிப் பெருமூச்செறிந்தாள். திருநின்ற வூரில் அவனும் அவளும் இறங்கிக் கொண்டார்கள்.

‘‘பெண்ணே, இனி உன் இடத் துக்குப் பாதுகாப்பாகப் போய்விடு வாயல்லவா?''

‘‘நன்றி சிநேகிதரே...'' என்றாள் அவள் மீண்டும்.

‘‘என்னை அப்பா என்றழைக்க மாட்டாயா?''

அவள் புருவங்கள் உயர்ந்தன. கண்களில் கூடுதல் பிரகாசம்.

‘‘நன்றி அப்பா!''

அவள் வயதில் அவனுக்கு நிறைய கனவுகள் இருக்கும். அவள் கனவுகள் நிறைவேற வேண்டும் என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்துகொண்டான் ராமன். அவன் மனம் நிறைந்தது. வீடு வந்து சேர்ந்தான். ஒரு பத்திரிகையை எடுத்துப் புரட்டி ஒரு கவிதையை வாசித்தான். (கவிதை: சுகந்தி சுப்பிரமணியன்)

ஒரு பூச்சி வந்தது. சிறியது. தீங்கிழைக்காதது. ‘நான் ஒரு உயிர்' என்ற கவிதை வரிக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டது. முதலில் அதைத் தட்டிவிடலாம் என்று தோன் றியது. அப்படிச் செய்ய முடியவில்லை அவனால். அந்தப் பூச்சி ‘‘நான் ஒரு உயிர்'' என்று அவனிடம் சொல்வது போல இருந்தது. ராமன் பூச்சியை அதன் போக்கில் விட்டுவிட்டான்.

சற்றுக் கழித்து, அதே பூச்சி மீண்டும் வந்தது. ‘‘நாம் பேசலாம்'' என்ற கவிதை வரி மீது உட்கார்ந்துகொண்டது. பூச்சியை உற்று நோக்கினான் ராமன். தன்னளவில் அது வடிவ நேர்த்தியுடன் இருந்தது. சாக்லேட் கலர் உடம்பு. முன்பக்கம் இரண்டு கால்கள். பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு மீசை. அவை அசைந்தவாறு இருந்தன. அதன் உயிரியக்கம்.

அந்தப் பூச்சி தனக்கு சிநேகித மாகிவிட்டது போன்ற தோழமை உணர்வு மனதில் வியாபித்தது. ‘நான் ஒரு உயிர். நாம் பேசலாம்' என்று அது தன்னிடம் சொல்வது போல் இருந்தது ராமனுக்கு. கதையின் தலைப்பு: பூச்சிகள்.

கோபிகிருஷ்ணன், தன் படைப்பு களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். தன் அற்புத கணத்தை, ஆசா பாசத்தை, அவமானத்தை, வாழ்க்கை கொண்டுவந்து சேர்த்த கடைசிப் படியை எந்த தன்னிரக்கமும் இன்றி, ஒரு மூன்றாம் மனிதனின் கதையைச் சொல்வதைப் போல தள்ளி நின்று எழுதிக்கொண்டு போனார். அந்தரங்கம் என்ற ஒன்று தனக்கானது என்றுகூட அவர் விலக்கி வைக்கவில்லை. விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பால் தன் மனதை இருத்தி வைத்துக்கொண்டு எழுதினார். ஆங்கிலத்தில் நிறை புலமையும் தொழில் திறமைகளும் நிறைந்த அவர் அவற்றைக் கொண்டு அடிப்படைத் தேவைகளையும்கூட பூர்த்திசெய்துகொள்ள முடியவில்லை. எழுத்தைத் தன் விருப்பம் தாண்டி, அந்த அலாவுதீன் பூதத்திடம் அற்புத விளக்கு ஒன்று இருப்பதை அவர் அறியார். அறிந்திருந்தால் அந்த விளக்கில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருப்பார். அந்த விளக்கின் அற்புதப் பயன்பாட்டை அவர் லட்சியம் செய்திருக்க மாட்டார்.

சமூகக் கட்டுப்பாடுகள், அரசு களாலும் சமூகத்தாலும் விதிக்கப்படும் ஒழுக்கம் என்று சொல்லப்படும் கோட்பாடுகள், விதிகள் ஆகிய பல் சக்கரங்களில் சக்கையான மனிதன் மனநோயாளி ஆகிறான். இறுக்கம், சிக்கல், பிறழ்வு, என்று பலவிதமான மனத் தடுமாற்றத்துக்கு ஆட்படுகிறான். ஆனால், இந்த மனநோய்க் கூறு களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத் திக்கொள்ள முடியும் என்கிறார் கோபிகிருஷ்ணன். கொஞ்ச காலம் அவரே அவ்வகைத் தடுமாற்றங்களால் வாழ்ந்திருக்கிறார். அந்நிலைகளில் எழுதிய கதைகள், தமிழில் பல புதிய திறப்புகளை செய்பவை.

ஒரு பேட்டியில் அவர் இப்படிச் சொன்னார்:

‘‘எழுதும்போது மன நிறைவு ஏற்படுகிறது. அப்போது எந்த வேண்டாத சிந்தனையும் வருவ தில்லை. முழுமையான பிடிப்பு ஏற்படுகிறது. ஒரு நல்லுணர்வு அது. இதுவரை நான் எழுதியவை எனக்கு திருப்திகரமாகவே இருக்கின்றன. எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி நான் எழுத மாட்டேன். என் பாணியை மாற்றிக் கொள்வதிலும் எனக்கு விருப்பம் இல்லை!''

மிக்க அக்கறையுடன் கோபிகிருஷ் ணனின் கதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய வற்றைத் தொகுத்திருப்பவர், தமி ழின் முக்கியமான படைப்பாளியும், விமர்சகருமான சி.மோகன். கோபி கிருஷ்ணன் படைப்புகள் என்ற இந்தத் தொகுப்பை அழகாகப் பதிப் பித்திருப்பது நற்றிணை பதிப்பகம்.

- நதி நகரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x