

ச.பாலமுருகன் தனது முதல் நாவலான ‘சோளகர் தொட்டி’யை (2004) வெளியிட்டு 17 ஆண்டுகள் கழித்து வெளியிட்டிருக்கும் நாவல் ‘டைகரிஸ்’. தமிழ் நாவல் வரலாற்றில் ‘சோளகர் தொட்டி’ உருவாக்கிய அதிர்வுகள் காரணமாக ‘டைகரிஸ்’ நாவலுக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சக மனிதர்கள்மீது வெவ்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள்தாம் ச.பாலமுருகனின் புனைவுக்களம். ஒவ்வொரு மீறலின் பின்னணியிலும் நிர்வாணப்படுத்தப்பட்ட அரசும் அதன் அதிகாரங்களுமே காரணமாக இருக்கின்றன என்பதை இவர் தொடர்ந்து எழுதிவருகிறார்.
1914 முதல் 1918 வரை நிகழ்ந்த முதல் உலகப் போரில் பிரித்தானிய ராணுவத்தில் பங்கெடுத்த இந்தியர்களின் மறைக்கப்பட்ட துயரம் தோய்ந்த வரலாறுதான் இந்நாவல். தமிழில் போர் சார்ந்த புனைவுகள் மிகக் குறைவு. எழுதப்பட்ட சிலதும் ஈழப்புலத்திலிருந்து உருவானவை. அவ்வகையில் ‘டைகரிஸ்’ முக்கியமான வரவு.
இன்றைய ஈராக்கை ஒட்டிப் பாயும் நதிதான் ‘டைகரிஸ்.’ இந்நதியை மையமாகக் கொண்டு நடைபெற்ற போரின் துயரங்கள் குறித்தே இந்நாவல் விரிவாகப் பேசுகிறது. தவிர, போர் குறித்து இந்நாவல் எழுப்பும் பல கேள்விகள் முக்கியமானவை. நாட்டுக்காக நடைபெறும் போர்கள் குறித்துச் சில மிகையுணர்ச்சிக் கருத்தாடல்கள் பொதுவெளியில் காலந்தோறும் புழங்கிவருகின்றன. சங்கக் கவிதைகளும் இதற்குச் சாட்சியங்களாக உள்ளன. மரபிலக்கியங்கள் கட்டமைத்த போர் குறித்த மிகையுணர்ச்சி மதிப்பீடுகள்மீது இந்த நாவல் கேள்விகளை எழுப்புகிறது. இந்நாவலை வாசித்து முடிக்கும் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, ‘போர்கள் எதற்காக?’
போர்களில் இறந்துபோன ஆட்சியாளர்களைத்தான் வரலாறு தொடர்ந்து முன்னிறுத்திவருகிறது. போருக்கான காரணமே தெரியாமல் இறந்துபோன வீரர்களைப் பற்றிய தரவுகள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். ‘டைகரிஸ்’ எழுதப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். தவிர, மனிதர்களுடன் போர்களில் பங்கேற்கும் யானை, குதிரை, கழுதைகளுக்கும் அப்போர்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்ற அடிப்படையான கேள்வியையும் இப்புனைவு எழுப்புகிறது.
போர்ச்சூழலில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, குதிரைகளும் கழுதைகளும் உணவாகியிருக்கின்றன. ஒரு நாயைக்கூட விட்டுவைக்காத பசியின் கொடுமையை ச.பாலமுருகன் விரிவாகவே எழுதியிருக்கிறார். இந்திய இளைஞர்கள் பிரித்தானிய ராணுவத்தில் இணைந்ததற்குப் போதையூட்டப்பட்ட தேசபக்தியுடன் பசியும் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. பலர் தங்கள் குடும்ப வறுமையைப் போக்கவும் போர் குறித்த சாகசக் கதைகளால் ஈர்க்கப்பட்டும் ராணுவத்தில் இணைந்திருக்கின்றனர். ஆனால், களத்தில் நடந்தது வேறு. குடிக்க ஒரு குவளை நீரில்லாமல் இறந்துபோனவர்களும் சரியான மருத்துவ வசதிகளும் உடைகளும் இல்லாமல் இறந்துபோனவர்களும் ஏராளம்.
இரு நாடுகளின் வெற்றி, தோல்விக்குப் பின்னே தெரியாமல் மறைந்துபோகும் போர் குறித்த வன்மங்கள் கொடூரமானவை. கொல்லப்படுதல், உறுப்புகளை இழத்தல், போர்க் கைதிகளாகச் சிறைப்படுதல் ஆகிய மூன்றில் ஒன்றைப் பெரும்பாலான வீரர்களுக்குக் கையளிக்கிறது போர். இதில் கொல்லப்படுதலையே பலரும் விரும்புகின்றனர். எந்தக் காலமாக இருந்தாலும் போர்கள் வழக்கம்போல் பெண்களையும் குழந்தைகளையுமே அதிகம் பாதிக்கின்றன. கணவனை இழந்த ஒரு பெண், துருக்கிப் படையிடம் தோற்றுப் பின்வாங்கிய வில்லியம்ஸிடம் இப்படிக் கேட்கிறாள்: “பெண்களை நிர்வாணப்படுத்திய, குழந்தைகளைப் பிச்சைக்காரர்களாக்கிய இந்தப் போரினால் எதைச் சாதித்தீர்கள்?” அவளது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காக்கிறான் வில்லியம்ஸ். அவளின் தர்க்கங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? இதனை உக்ரைன் பெண்களின் துயரங்கள் வரை நீட்டித்துப் பார்க்க முடியும்.
நாவல் முன்வைக்கும் அடுத்த முக்கியமான விமர்சனம், இனப்பாகுபாடு. பிரித்தானியர்களுடன் படையில் இணைந்த இந்திய வீரர்களைத் துருக்கிக்கு ஆதரவாளர்களாகக் கற்பித்துக்கொள்ளும் மனநிலைக்குப் பின்னுள்ளதும் நிறம்தான் என்பதைப் புனைவு அடையாளப்படுத்துகிறது. இந்திய வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் மலினப்படுத்த பிரித்தானியப் படைத்தளபதிகள் இவ்வுத்தியை அழகாகக் கையாண்டிருக்கிறார்கள். போலியாக உருவாக்கப்பட்ட தேசபக்தியின் வலைக்குள் விழுகிறான் இந்நாவலின் கதைநாயகன் வில்லியம்ஸ்.
இவன் இந்தியத் தாய்க்கும் ஆங்கிலேயத் தந்தைக்கும் பிறந்தவன். இவனே புனைவின் மையமாக இருக்கிறான். இவன்தான் பிரித்தானியரின் இந்த மனநிலையைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுகிறான். “பிரபுக்கள் போர் முனையிலும் பிரபுக்களாகவே இருக்கிறார்கள்” என்று இந்திய வீரர்கள் புழுங்கும் அளவுக்குப் பிரித்தானிய அதிகாரிகளின் செயல்பாடுகள் இருந்திருக்கின்றன. ராணுவத்தில் சாதி இருக்காது என்று நம்பி வந்தவர்கள் நிறத்தால் பிரித்தாளப்படுகிறார்கள். நீங்கள் உங்கள் வீட்டுக்குக் கடிதமாக என்ன எழுத வேண்டும் என்பதைக்கூட அதிகாரிகள்தான் முடிவுசெய்கிறார்கள். பிரித்தானிய அதிகாரிகள் இந்தியர்கள்மீது வெளிப்படுத்திய அதிகார மனநிலையை நாவல் நுட்பமாகக் கவனப்படுத்தியிருக்கிறது.
நாவல், மூன்று பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், புனைவுக்குள் இந்தப் பாகப் பிரிவுகள் பெரிய கால இடைவெளியை ஏற்படுத்தவில்லை. ஒரு போர் எத்தகைய அழிவையெல்லாம் ஏற்படுத்தும் என்பதை நிகழ்காலத்தில் ஊடகங்கள் உடனுக்குடன் அறியச் செய்கின்றன. ஆனால், கடந்த காலத்தின் பேரழிவுகளை இதுபோன்ற புனைவுகளினூடேதான் பகிர முடியும். ச.பாலமுருகனின் உறவினர் ஒருவர் முதல் உலகப்போரில் பங்கெடுத்திருக்கிறார். அவருக்கான அங்கீகாரம் பிரித்தானியரால் மறுக்கப்பட்டிருக்கிறது.
அவருக்குரிய அங்கீகாரம் கோரி எழுதப்பட்ட கடிதங்களால் உந்தப்பட்டே ச.பாலமுருகன் இந்நாவலை எழுதியிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்நிய நிலத்தில் நிகழ்ந்த ஒரு போரை எழுதுவது என்பது அசாத்தியமானது. வாசகரை நம்பச் செய்வதற்கு ஒரு பிரதி மெனக்கெட வேண்டும். போர்ச்சூழலையும் அது கட்டியெழுப்பும் பிரம்மாண்டத்தையும் புனைவுக்குள் அடக்குவதென்பது மிகுந்த உழைப்பைக் கோரும் பணியாகும். ச.பாலமுருகன் அதனைச் சிரத்தையுடன் செய்திருக்கிறார். வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதையொட்டி ‘சோளகர் தொட்டி’ பிரசுரமானது. ரஷ்யா - உக்ரைன் போருக்குச் சற்று முன்பு ‘டைகரிஸ்’ வெளிவந்திருக்கிறது.
‘இந்தியர்களின் துணையின்றி முதல் உலக யுத்தத்தில் பிரிட்டிஷ்காரர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது’ என்ற கூற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இப்புனைவு, மெசபடோமியா மீட்புப் படையணி தோற்ற கதையைத்தான் பேசியிருக்கிறது. இந்தியர்களின் சிறந்த பங்களிப்பாக நாவல் எதனையும் முன்னிறுத்தவில்லை. கல்யாண், வில்லியம்ஸ் என்ற இரு இந்திய வீரர்களுக்கு நாவல் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் அவர்களின் போர் சாகசங்களோ மெச்சத்தக்க வெற்றிக் குறிப்புகளோ புனைவில் இல்லை. போர்ச்சூழலில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல் குறித்துதான் நாவல் நெடுகவும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. குர்துக்கள் ஆர்மீனியன்கள்மீது நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தும் புனைவு விவரித்திருக்கிறது. ச.பாலமுருகன் மனித உரிமைச் செயற்பாட்டாளர். அவருக்குள் கனன்றுகொண்டிருக்கும் அந்தச் செயலூக்கம் அவரது புனைவிலும் வெளிப்பட்டிருக்கிறது.
- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ramesh5480@gmail.com
டைகரிஸ்
ச.பாலமுருகன்
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி - 642 002
விலை: ரூ.550 தொடர்புக்கு: 99425 11302