

2021-ம் ஆண்டுக்கான ‘எழுச்சித் தமிழர் கலை இலக்கிய விருதுகள்’ வழங்கும் விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராஜர் அரங்கில் கடந்த ஞாயிறு (03.04.22) அன்று நடைபெற்றது. விருதாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விருதுகளை வழங்கினார்.
சிறந்த கவிதைத் தொகுப்புக்காக மௌனன் யாத்ரீகாவுக்கும் (வேட்டுவம் நூறு), சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காக கவிப்பித்தனுக்கும் (பாலி), சிறந்த நாவலுக்காக தரணி ராசேந்திரனுக்கும் (லிபரேட்டுகள்), சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது மடோன் ம.அஷ்வினுக்கும் (மண்டேலா), சிறந்த ஓவியத் திரட்சிக்கான விருது திண்டுக்கல் தமிழ்ப்பித்தனுக்கும், சிறந்த பௌத்த எழுத்துக்கான விருது பேரா. ஜெயபிரகாஷுக்கும், சிறந்த பெண்ணெழுத்துக்கான விருது பேரா. அரங்க மல்லிகாவுக்கும், சிறந்த ஆளுமைக்கான விருது ஆர்.பி.அமுதனுக்கும் வழங்கப்பட்டது. விருதாளர்களுக்கு வாழ்த்துகள்!
கணையாழி குறுநாவல் போட்டி
‘கணையாழி’ இதழ் இந்த ஆண்டுக்கான குறுநாவல் போட்டியை அறிவித்திருக்கிறது. முதல் பரிசு: ரூ.15,000. இரண்டாம் பரிசு: ரூ.10,000. மூன்றாம் பரிசு. ரூ.5,000. குறுநாவல்கள் 4,000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். செப்டம்பர் 17-க்குள் kanaiyazhi2011@gmai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் குறுநாவல்களை அனுப்ப வேண்டும். பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் குறுநாவல்கள், டிசம்பர் 2022 கணையாழி இதழிலிருந்து வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புரவியின் ஓராண்டுப் பயணம்!
வாசகசாலை அமைப்பு கொண்டுவரும் ‘புரவி' கலை இலக்கிய மாத இதழ் வெற்றிகரமாகத் தனது முதலாம் ஆண்டை நிறைவுசெய்திருக்கிறது. முதலாம் ஆண்டு விழா இன்று (09.04.22, சனிக்கிழமை) நடைபெறுகிறது. எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஜீவ கரிகாலன் உள்ளிட்டோர் பங்குபெறுகிறார்கள். இடம்: வினோபா ஹால், தக்கர் பாபா வித்யாலயா பள்ளி. தியாகராய நகர், சென்னை-17. நேரம்: மாலை 5 மணி. தொடர்புக்கு: 9942633833.
ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...
ப.நடராஜன் பாரதிதாஸ் எழுதி வெளியிட்டிருக்கும் ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...’ கவிதைத் தொகுப்பு சமீபத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான நூலாகும். முடிதிருத்தகத்திலிருந்து சமூகத்தைப் பார்த்து விடுக்கப்பட்ட அறைகூவலாக இந்தக் கவிதைத் தொகுப்பைக் கருதலாம். இந்தத் தொகுப்புக்கான விமர்சன அரங்கு நாளை (ஞாயிறு, 10-04-22) வேளச்சேரியில் நடைபெறுகிறது. எழுத்தாளர்கள் சுகுணா திவாகர், நாச்சியாள் சுகந்தி, திரைப்பட இயக்குநர் சசி, புதியபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த நூலைப் பற்றிப் பேசுகிறார்கள். இடம்: பீ ஃபார் புக்ஸ், தண்டீஸ்வரம், வேளச்சேரி. நேரம்: மாலை 6 மணி. தொடர்புக்கு: 8939188703.