

இந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சி நடத்துவதற்கான அனைத்து உதவிகளும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்தார். மார்ச் 18 அன்று சட்டமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சி நடத்துவதற்கும், இலக்கியத் திருவிழாக்களை நடத்துவதற்கும் நடப்பாண்டில் ரூ.5.60 கோடி ஒதுக்குவதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதையடுத்து, சென்னைக்கு மிக அருகில் இருக்கும் மாவட்டங்களுள் ஒன்றான திருவள்ளூரில் முதல் முறையாகப் புத்தகக்காட்சியைப் பபாசியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்துகிறது.
நேற்று தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி ஏப்ரல் 11 வரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில்) நடைபெறுகிறது. திருவள்ளூர் புத்தகக் காட்சி குறித்துப் பேசிய பபாசி தலைவர் வைரவன் ‘‘இந்தப் புத்தகக் காட்சியில் 105 அரங்குகளில் லட்சக்கணக்கான நூல்கள் இடம்பெறும். இல்லம்தோறும் கல்வி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சாகித்ய அகாடமி ஆகியவற்றின் அரங்குகளும் இடம்பெறுகின்றன. சென்னைப் புத்தகக்காட்சிக்கு 15 லட்சம் பேர் வந்தார்கள். சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் இந்தப் புத்தகக்காட்சிக்கும் ஏறக்குறைய அதே அளவு மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.
திருவள்ளூர் புத்தகக்காட்சியில் நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது. உணவுக் கடைகள், கழிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமே ஏற்பாடுசெய்துள்ளது. தினமும் காலை 11 முதல் மாலை 4 வரை மாணவ மாணவியருக்கான கலை நிகழ்ச்சிகளும் மாலை நேரத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளின் கருத்துரை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. “அடுத்தடுத்து சிவகங்கை, நாகப்பட்டினம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் புத்தகக்காட்சிகளை அரசு நடத்தவிருக்கிறது. கரோனாவால் இரண்டாண்டுகள் மிகுந்த துன்பங்களை எதிர்கொண்ட பதிப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் இந்த உதவி இனிமேல் நல்லகாலம்தான் என்னும் நம்பிக்கையை அளித்துள்ளது” என்கிறார் வைரவன். திருவள்ளூர் புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கும்.
திருவாரூரில் ஒரு நாள் கருத்தரங்கு
திருவாரூரில் ‘தனிச்சொல்' அமைப்பு ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றை இன்று நடத்துகிறது. ‘பெண்ணியப் படைப்புவெளி’, ‘பால்புதுமையர் படைப்புவெளி’, ‘சூழலியல் படைப்புவெளி’ (எழுத்தாளர் நக்கீரனின் நூல்கள் பற்றிய அமர்வு) என்று மூன்று அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. இடம்: ஓட்டல் காசிஸ் இன், திருவாரூர்.
புத்தகக்காட்சி
தஞ்சை புத்தகக்காட்சி: தஞ்சையில் மார்ச் 6 அன்று ‘மாபெரும் புத்தகச் சந்தை’ என்ற பெயரில் தொடங்கிய புத்தகக் காட்சி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் உட்பட அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: பிரவுசர் புத்தக உலகம், மருத்துவக் கல்லூரி சாலை, ஆண்டாள் திருமண மண்டபம் எதிரில், தஞ்சாவூர். தொடர்புக்கு: 6383181864.