Published : 02 Apr 2022 07:34 AM
Last Updated : 02 Apr 2022 07:34 AM

நூல் வெளி: மலேசியத் தமிழ் வாழ்க்கையின் அடர் வண்ணங்கள்

சரவணன் மாணிக்கவாசகம்

மலேசியாவில், கெடா, லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தவர் ம.நவீன். இவருடைய முதல் நாவலான ‘பேய்ச்சி’யைப் போலவே இந்த நாவலும் முழுக்கவே கோயில் பின்னணியில் நடைபெறும் கதை. தீபன் என்னும் சிறுவனின் பதின்ம வயதிலிருந்து 20 வயது வரையிலான கதையே இந்த நாவல்.

எதிர்பாராத ஒரு நிகழ்வால் திடீரென ஆண்மைக் குறைவுக்கு ஆளாகும் தீபன், ஆண்மையை மீட்டெடுக்கச் சகலவிதமான முயற்சியையும் எடுக்கிறான். பதின்ம வயதின் பாலியல் பற்றாக்குறையிலிருந்து பாலியல் உறவுகள் அபரிமிதமாகக் கிடைக்கும் இடத்துக்குப் போய்ச்சேர்ந்தது, அவனது ஆண்மைக் குறைவை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. பாட்டனைப் போலவே வயதுக்கு மிஞ்சி ஆஜானுபாகுவான தோற்றத்தில், எல்லோரையும் பயமுறுத்தும் வேலையில் இருப்பவனுக்கு வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத குறைபாடு.

தீபன் பிறந்து வளர்ந்த லூனாஸ், அங்கிருக்கும் மாரியம்மன் கோயில், அடர்த்தியான தண்ணீர் கொண்ட ஆறு, வன்முறையைப் பிரயோகிக்கும் அப்பா, அன்பான அம்மா, நண்பர்களுக்குக் கிடைத்து இவனுக்குக் கிடைக்காத தோழிகள், தனபால் சொல்லும் கற்பனைப் பாலியல் கதைகள், பெரியவர்கள் இல்லாத வீட்டில் திருட்டுத்தனமாக நீலப்படம் பார்ப்பது என்பது வரை தீபனின் வாழ்க்கை அந்த வயதுச் சிறுவர்கள் எல்லோரையும் போன்றதே. தனபாலின் தங்கையுடனான நிகழ்வுதான் தடம் மாறுவதற்கு ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்க வேண்டும்.

பல நாட்டுப் பெண்களுடன் திருநங்கைகளும் இணைந்து ஈடுபடும் பாலியல் தொழில், பலவித சூதாட்டங்கள், திருட்டு, கொலை, கொள்ளைகள், போதை மருந்துகள், அடிதடி, குத்துவெட்டு என்று திரியும் ரெளடிக் கும்பல்கள் கொண்ட சௌவாட் ஒரு மாஃபியா நகரம். பதின்பருவத்தைக் கடந்து இளைஞனாகக் காலடி எடுத்துவைக்கும் தீபன் இவற்றையெல்லாம் கடந்தே வருகிறான். சரா ஒரு தேவதை. திருநங்கைகள் வாழ்க்கை குறித்து கட்டுரையாக எவ்வளவு எழுதினாலும் ஏற்படாத உணர்வை சரா கதாபாத்திரத்தின் மூலம் நவீன் வாசகர்களுக்குக் கடத்தியிருக்கிறார். அவள் நடனமாடுவதால் மட்டுமல்ல, அழகாலும் பிரேமையாலும் அப்சரஸ்தான். தீபனின் காதல் இறங்குமுகமாகையில் அவளது காதல் எதிர்திசையில் பயணித்து உச்சத்தை அடைகிறது. திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில்தான் என்ற பொதுமனப்பான்மையை சரா மூலம் உடைக்கிறார் நவீன். சராவிடம் கடைசிவரை தீபன் வெளிப்படையாகப் பேச முடியாததுகூட பொதுமனப்பான்மையால் கட்டமைக்கப்பட்ட சிந்தனையின் தொடர்ச்சியே.

முதல் தலைமுறையில் நடந்த விஷயங்களை இடையிடையில் கதையாகவும், மூன்றாம் தலைமுறையில் பிறந்தவனின் கனவாகவும் விரியச்செய்வது நல்ல உத்தி. இடைவெளிகள், விடுபட்ட சங்கிலிகள் இவற்றின் மூலம் இணைக்கப்படுகின்றன. கூடவே, மலேசிய மக்களின் எண்பதாண்டு வாழ்க்கையும் இந்த நாவலில் சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர் காலனி ஆதிக்க மலேசியா, பின்னர் சீனர்கள் பெருவாரித் தொழிலை ஆக்கிரமிப்பு செய்வது, குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்படுவது என்பதுபோலப் பல சமூகப் பொருளாதார மாற்றங்கள் நடைபெறுகின்றன.

ஈபுவும் மாமாவும் சந்தித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நாவல் யோசிக்க வைக்கிறது. கதையின்படி தீபன் யார் என்பதே ஈபுவுக்குத் தெரியாது. மாரிமுத்து, புதம்மா உறவுக்குச் சில பக்கங்கள், வேறு தந்தையருக்குப் பிறந்த அக்கா-தம்பி உறவு குறித்து, தீபனின் லூனாஸ் நாட்கள் குறித்து என்றெல்லாம் நாவல் பக்க அளவில் முடிந்தாலும் கதை மனதில் தொடர்கிறது.

மூன்று தலைமுறையினர் ஓவியம் வரைவது மரபணுத் தொடர்ச்சி என்பதைவிட, யார் யாரென்று அடையாளம் காட்ட உபயோகப்படுத்தப்படுவதாகவே கொள்வது பொருத்தம். டிஜிட்டல் தொழில்நுட்பம், கையால் வரையப்படும் ஓவியங்களைவிட விலை குறைவாகவும் தெளிவாகவும் இருப்பது பழையன கழிதல் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டதற்குச் சான்று.

கதாபாத்திரங்களின் சித்தரிப்பு இந்த நாவலுக்குக் கூடுதல் பலம். தீபன் பல விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் திணறினாலும், குறிப்பிட்ட சில விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுக்கிறான். அம்மா, ஈபு, நிஷா, காசி என்று அநேகமாக எல்லா கதாபாத்திரங்களும் தனிப்பட்ட குணாதிசயங்களில் முரண்கள் இல்லாமல் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நவீன் மீண்டும் மலேசிய வாழ்க்கைச் சிதறல்களை நாவலாக வடித்திருக்கிறார். கேள்வியே பட்டிராத ஏராளமான மலேசிய உணவு வகைகள் இந்த நாவலில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. குஜராத்தில் இருக்கும் பகுச்சாரா அம்மனும், சீனக் கடவுளான குவான்-யின்னும் நாவலில் முக்கியப் பங்காற்றுகிறார்கள். நாவலின் மையக் கதாபாத்திரம் ஆண்மைக் குறைவுடன் முழு நாவலிலும் வருவது நான் வாசித்த வரையில் இதுவே முதல் தடவை. அதே போல் அதற்கான மர்ம முடிச்சு அவிழும் இடம் வெகுநுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நூறு நாகப்பித்தைச் சாப்பிட்டிருந்தாலும் தீபன் குணமாகியிருக்கப்போவதில்லை. திருநங்கைகள் குறித்து ஏற்கெனவே வெளிவந்திருக்கும் வெகுசில நாவல்களிலிருந்து இந்த நாவல் வெகுவாக வேறுபடுகிறது. திருநங்கையின் தெய்விகக் காதல், திருநங்கைகளின் திருமணம், தாய்மை உணர்ச்சி போன்ற பல விஷயங்கள் நாவலில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

திருநங்கைகளைப் போற்றுதல், தூற்றுதலைவிடச் சமமாகக் கருதுதல் முக்கியம் என்பதை இந்நாவல் அழுத்தமாகச் சொல்கிறது. கவனமாக வாசிக்காவிடில், நாவலின் நுணுக்கமான காட்சிச் சித்தரிப்புகள் விடுபட்டுப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம். நவீனின் முந்தைய நாவலிலிருந்து ‘சிகண்டி’ ஒரு கங்காருத் தாவல்.

- சரவணன் மாணிக்கவாசகம், இலக்கிய விமர்சகர். தொடர்புக்கு: sarakavivar@gmail.com

சிகண்டி

ம.நவீன்

யாவரும் பப்ளிஷர்ஸ், வேளச்சேரி-600042

விலை: ரூ.640

தொடர்புக்கு: 9042461472

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x