

‘தி இந்து’ நாளிதழில் ‘மனுசங்க’ எனும் பெயரில் கி. ராஜநாரா யணன் தொடராக எழுதியது புத்தக வடிவமெடுத் திருக்கிறது. மனிதர்கள் எல்லோரையுமே அவர்களுடைய மண் சார்ந்துதான் தன்னால் பார்க்க முடிகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லும், தனது பல அனுபவங்களை கி.ரா. இதில் பதிவுசெய்திருக்கிறார். வேரும், வேரடி மண்ணும் என்று சொல்வதைப் போல இந்தக் கட்டுரைகளில் சீனி நாயக்கர், தூங்கா நாயக்கர், நாச்சியாள் எல்லோருமே கரிசல் மண்ணின் பண்பு நலன்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதைப் படிக்கும் நமக்குள்ளும் அந்த மண்வாசம் சுதி சேர்க்கிறது. அவர்களைச் சுற்றிச் சுழன்ற உலகத்தை தன்னுடைய கிராமிய மொழியில் கி.ரா. விவரிக்கும்போது ஒரு புதிய ஊருக்குள் நுழைந்து அங்குள்ள மனிதர்களோடு பல நாட்கள் நட்புடன் புழங்கிய உணர்வு ஏற்படுகிறது.
நம் தலைமாட்டில் ஜம்மென்று உட்கார்ந்துகொண்டு ஒரு தாத்தா கதை சொல்வதைப் போன்றதொரு தொனியில் ஆசிரியர் நம்மோடு பேசுவதால், புத்தகம் மளமளவென நகர்கிறது. கரிசல் மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்களின் வீட்டுப் பொருட்களுக்கான தனித்த பெயர்கள், அடையாளங்கள், பகுமானங்கள் நம்மை வசீகரிக்கின்றன.