

நம்மைப் பற்றி நம்மைவிட அதிகம் அறிந்தவர்தான் யார்? ஒரு நபர் ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான உணர்வுகளாக, எண்ணங்களாக, சுயங்களாக உள்ளார். நம் மனம் என்னவாக இருக்கிறதோ அதை முகம் பிரதிபலிக்கிறது. ஆனால் நமது முகத்தை நாமே பார்க்க முடியாது. அதற்குக் கண்ணாடிகளோ ஒளிப்படத் தொழில்நுட்பமோ வேண்டும். ஆனால் பாப்லோ பிகாசோ தனது முகத்தைப் பார்த்திருக்கிறார். தனது சிறு வயதிலிருந்து அந்திமக் காலம் வரை இந்த அரூப ஓவியர் தனது முகத்தை ‘செல்ப் போர்ட்ரெய்ட்'களாக வரைந்துகொண்டே இருந்திருக்கிறார்.
பாப்லோ பிக்காசோ
எனது ஓவியத்தில் நான் பயன்படுத்திவந்திருக்கும் வெவ்வேறு பாணிகளை, ஒரு பரிணாம வளர்ச்சியாகப் பார்த்தல் கூடாது. அல்லது யாருமறியாத ஓவிய ரீதியான ஏதோ லட்சியத்தை அடைவதற்கான படிகளாகவும் பார்க்கக் கூடாது. நான் வரைந்த எல்லா ஓவியங்களும் அந்தந்த சமயத்துக்கானவையே. அது எப்போதும் தற்கணத்திலேயே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் வரைந்தேன். எப்போதெல்லாம் எதையாவது சொல்ல வேண்டுமென்று நினைத்தேனோ, எது சரியான வழிமுறை என்று நினைத்தேனோ அப்படிச் சொன்னேன்.